10,000 பொதுமக்கள் படுகொலை: மன்னிப்பு கேட்டது தென் கொரிய காவல்துறை

தென் கொரியாவில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுதப் போராட்டத்தை அடக்குவதற்காக போலீஸார் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளில் சுமார் 10,000 பேர் பலியான சம்பவத்துக்கு அந்த நாட்டுக் காவல் துறை புதன்கிழமை மன்னிப்பு கேட்டது.

இதுகுறித்து, அந்த ஆயுதப் போராட்டத்தின் 71-ஆவது நினைவு தின நிகழ்ச்சியில் கொரிய தேசிய காவல்துறை ஆணையர் மின் கேப்-ரியாங் கூறியதாவது:

கம்யூனிஸ்ட் தொழிலாளர் கட்சியின் ஆயுதப் போராட்டத்தின்போது, காவல் துறையினரின் நடவடிக்கையில் அப்பாவி பொதுமக்கள் பலியானதற்கு மன்னிப்பு கோருகிறோம்.

கொரிய மக்களின் நலன்களைப் பேணும் அமைப்பாக செயல்படுவோம் என்று அனைவருக்கும் இந்த நேரத்தில் உறுதியளிக்கிறோம்.
எனவே, ஆயுதப் போராட்ட காலத்தில் ஏற்பட்ட துயரங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாது என்றார் அவர்.

கடந்த 1948-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி, வட கொரியாவை தற்போது வரை ஆளும் கொரிய தொழிலாளர் கட்சியின் தென் கொரியக் கிளையான தொழிலாளர் கட்சி ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கியது.
தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜெஜு தீவில் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தென் கொரிய காவல் நிலையங்கள் தாக்குதலுக்குள்ளாகின.

அந்தப் போராட்டத்தை அமெரிக்க ஆதரவுடன் தென் கொரியப் படையினர் உடனடியாக அடக்கினாலும், இதுதொடர்பாக பாதுகாப்புப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற மோதலில் 10,000-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து கொரியப் போர் நடைபெற்று முடிந்த நிலையிலும், தென் கொரிய அரசியலில் ஆயுதப் போராட்ட நிகழ்வுகள் முக்கியப் பிரச்னையாகத் தொடர்ந்து வருகிறது.

அந்த வன்முறைச் சம்பவங்கள், தென் கொரியாவில் அமெரிக்காவின் காலனியாதிக்கத்தைப் பறைசாற்றுவதாக ஒரு சாரார் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தச் சூழலில், போராட்டத்தின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு தென் கொரிய காவல்துறை மன்னிப்பு கோரியுள்ளது.

Share:

Author: theneeweb