நொதன் பவர் தனியார் நிறுவனம் பிரதேச மக்களுக்கு 20 மில்லியன் ரூபா நட்டயீட்டை செலுத்த வேண்டும்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் மின்நிலைய நிர்மாணப் பணிகள் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்காக பிரதேச மக்களுக்கு 20 மில்லியன் ரூபா நட்டஈட்டை செலுத்த வேண்டும் என உரித்துடைய நிறுவனமானநொதன் பவர் தனியார் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுற்றாடல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு மத்திய நிலையம் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை தொடர்பான மனு மீதான தீர்ப்பை அறிவித்தபோதே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதியரசர்களான ப்ரியந்த ஜயவர்தன, ப்ரசன்ன ஜயவர்தன மற்றும் எல்.ரீ.பீ. தெஹிதெனிய முதலான மூவரடங்கிய குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் எண்ணெய் மற்றும் உராய்வு எண்ணெய் என்பன குறித்த பகுதியில் உள்ள கிணறுகளில் கலப்பதன் காரணமாக நீர்மாசடைவதாக மனுதாரர்கள் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த மின்நிலைய திட்டமானது, வட மாகாண சபையின் அனுமதியின்பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த திட்டத்திற்கு 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி இடைக்காலத் தடைவிதித்த உயர்நீதிமன்றம், அதன் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb