நாங்கள் தொடர்ச்சியாக ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் முழுமையாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.

நவரத்தினம் சுதாகரன்

(கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத்திணைக்கள பிரதிப் பணிப்பாளர்

 

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளபெருக்கினால் ஒரு லட்ச்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.  89 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 308 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

8 ஆயிரத்து 693 பேர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் கூடுதலான பாதிப்பு ஏற்பட்டிருப்பது கிளிநொச்சி மாவட்டத்திலேயே. ஏறக்குறைய 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பைச் சந்தித்திருக்கிறார்கள். இதை விட பெருமளவு நெற்செய்கையும் உட்கட்டுமாணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கால்நடைகள் அழிந்துள்ளன. இவை தொடர்பான மதிப்பீடுகள் முழுமையாகச் செய்யப்படும்போதே முழுமையான பாதிப்பின் விவரம் கிடைக்கும். அதற்கு வெள்ளம் முழுமையாக வடிய வேணும்.

இந்த அனர்த்தத்தை அடுத்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கிளிநொச்சி மாவட்டத்துக்கு வருகை தந்து நிலைமைகளைக் குறித்து ஆராய்ந்து மக்களுக்கான உதவித்திட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

இந்தப் பேரலத்துக்கு இரணைமடுக்குளத்தின் அதிகளவு நீர் வெளியேற்றமே காரணம் என்று சொல்லப்படுகிறது. அளவுக்கதிகமான நீரைச் சேகரிக்க முற்பட்டமை, சடுதியாக அதிகளவு நீரைத் திறந்தமை, தண்ணீரைத் திறப்பதில் தாமதம் காட்டியமை, உரிய இடத்தில் பொறுப்பு வாய்ந்த பொறியாளர் இல்லாமற் போனமை, குளப்புனரைப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் எனப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இப்பொழுது இரணைமடுக்குளம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே குழுவொன்றை நியமித்திருக்கிறார்.

இவற்றின் உண்மை நிலை என்ன? என்பதை அறிவதற்காக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத்திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திரு. சுதாகரனை அவருடைய பணிமனையில் (27.12.2018) சந்தித்து உரையாடினோம். கூடவே இரணைமடுக்குளத்துக்குப் பொறுப்பான பொறியாளர் பரணிதரனும் உடனிருந்தார்.

கேள்வி – கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கான, வெள்ள அனர்த்தத்துக்கான காரணம் என்ன?

 

நவரத்தினம் சுதாகரன்
நவரத்தினம் சுதாகரன்

பதில் – கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அல்லது வெள்ள அனர்த்தத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேணும். நகரை அண்டிய (ஆனந்தபுரம், இரத்தினபுரம், பரவிப்பாஞ்சான், மருதநகர், கரடிப்போக்கு, பெரியபரந்தன்) பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதுக்கும் இரணைமடுவுக்கும் தொடர்பில்லை. இது கனகாம்பிகைக்குளம், கிளிநொச்சிக்குளம் (றைஆறுக்குளம்) போன்றவற்றினால் ஏற்பட்ட வெள்ளமாகும். இரணைமடுக்குளம் திறக்கப்படாமல், கனகாம்பிகைக்குளம் நிரம்பி வழிந்தாலே, இந்தப் பகுதிகளெல்லாம் வெள்ளத்தில் மூழ்கும். இதற்கு இந்தப் பகுதிகளில் உள்ள அத்துமீறிய குடியேற்றங்களும் சீரான வடிகாலமைப்பு இல்லாததும் காரணமாகும். இதைப்போல பச்சிலைப்பள்ளி, பொன்னகர், புன்னைநீராவி, மயில்வாகனபுரம், தருமபுரம் போன்ற இடங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களும் இரணைமடுவுடன் தொடர்பில்லாதவை.

இரணைமடுவின் வெள்ளம் கிளிநொச்சி – வட்டக்கச்சி வீதியில் பன்னங்கண்டியை ஊடறுத்தே பாய்கிறது. அந்த வழிப்பாதிப்புகளே இரணமடுவினால் ஏற்பட்டது. குறுகிய நேரத்தில் கூடிய மழை பெய்ததே – குறிப்பாக இரண்டு மணி நேரத்தில் 190 மி மழை பெய்ததே இந்த அனர்த்தங்களுக்குக் காரணமாகும். முல்லைத்தீவு மாவட்டத்தின் பாதிப்புகளும் இவ்வாறுதான் ஏற்பட்டன.

 

கேள்வி – ஆனால் குளத்தைப் பிந்தித்திறந்ததால்தான் பாதிப்புக் கூடியதாகக் கூறப்படுகிறதே?

 

அப்படியல்ல. 21 ஆம் திகதி இரவு எதிர்பார்த்ததையும் விடக் கூடுதலான மழைபெய்ததால் இரண்டு மணி நேரத்தில் குளத்தின் நீர் மட்டம் சடுதியாக உயர்ந்தது. ஏற்கனவே குளத்தின் நீர்மட்டம் போதியளவில் இருந்தால் உடனடியாகவே நாங்கள் குளத்தைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். அதற்கேற்றவகையில் மாவட்டச் செயலர், பொலிஸ், படையினர், கமக்காரர் அமைப்புகள் என அறிவிக்க வேண்டிய தரப்புகளுக்கெல்லாம் அறிவித்தலைக் கொடுத்து விட்டு கட்டம் கட்டமாக நீரை வெளியேற்றத் தொடங்கினோம். அது இரவு என்பதால் எல்லாக் கதவுகளையும் திறந்து மக்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை குளத்தின்  நிலைமையை அவதானித்துக் கொண்டேயிருந்தோம்.

 

கேள்வி – குளத்தின் வான்கதவுகளைத் திறப்பதில் உண்டான பிரச்சினையினால்தான் முதலில் இரண்டு கதவுகள் மட்டும் திறக்கட்டதாகவும் பின்னர் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்ததால் இறுதி நேரத்தில் தவிர்க்க முடியாமல் ஏனைய கதவுகளைத் திறந்ததால்தான் இந்தப் பெரிய அனர்த்தம் உண்டனதாகக்  கூறப்படுகிறதே?

 

இரண்டு கதவுகளில் சில திருத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன என்பது உண்மை. ஆனால் ஏனைய கதவுகள் திறக்கக் கூடிய நிலையில்தான் இருந்தன. அதனால் நாங்கள் திட்டமிட்டவாறே காலையிலிருந்து ஏனைய கதவுகளையும் திறந்து நீரை வெளியேற்றினோம். அப்படி வெளியேற்றப்பட்ட நீரினால்தான் இந்த அனர்த்தம் ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. ஏனென்றால், இந்த மாதிரியான வெள்ள நிலைமை அடிக்கடி நிகழ்வதுண்டு. 2012. 2014 ஆகிய காலப்பகுதியிலும் இதே நிலைமையை எதிர்கொண்டிருந்தோம். அப்போது இந்த ஆண்டை விடக் கூடுதலான வெள்ளம் வந்திருந்தது. அதைவிட, இரணைமடு வான் 20 வீதமான இடத்தின் வழியாக மட்டுமே பாய்கிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

குளத்தின் கொள்ளளவை விட மேலதிகமாகத் தண்ணீரைத் தேக்க முற்பட்டதன் விளைவாக இதைக் கருத முடியுமா?

அப்படியில்லை. குளத்தை இவ்வளவு செலவுசெய்து நிர்மாணித்ததே கூடுதலாகத் தண்ணீரைத் தேக்குவதற்காகத்தான். எமது திட்டத்தின்படி 36 அடி நீரைத் தேக்க முடியும். அந்தளவு நீர்தான் தேக்கப்பட்டிருந்தது. வான்கதவுகளைத் திறந்தபோது 39 அடி நீர் இருந்தது. பின்னர் படிப்படியாகக் குறைக்கப்பட்டது.

இந்த ஆண்டு நவம்பரிலேயே குளங்களின் கொள்ளவுக்குப் போதுமான மழை கிடைத்து விட்டது. அப்பொழுதே அநேகமாக எல்லாக்குளங்களும் நிரம்பி விட்டன. இதற்குப் பிறகு பெய்கின்ற மழை மேலதிகமாகவே இருக்கும் என மதிப்பிட்டிருந்தோம். டிசம்பர் 07 ஆம் திகதி 36 அடி நீர் வந்து விட்டது. 08 ஆம் திகதி ஜனாதிபதி வந்து பாசனத்துக்கான நீரையும் மேலதிக நீரையும் திறந்து வைத்திருந்தார். அப்போது எட்டுக் கதவுகள் திறக்கப்பட்டன. ஒன்பதாம் திகதி ஏழு அங்குல நீர் வெளியேற்றத்தை நிறுத்தி, 35 அடியில் மீளவும் குளத்தைப் பராமரித்தோம். ஆகவே இதில் எங்கே தவறிருக்கிறது?

இந்தளவு நீரைத் தேக்க முடியவில்லை என்றால், இவ்வளவு பணத்தைச் செலவு செய்து நிர்மாணித்த குளத்தில் 36 அடி நீரைத் தேக்க முடியாமல் போனது ஏன் என்று மறுவளமாகக் கேட்டிருப்பார்கள். ஆகவே 36 அடிக்குக் கூடுதலாக வந்த நீரைத்தான் நாங்கள் வெளியேற்றினோம். அதை இனியும் செய்வோம். அதேபோல 36 அடி நீரைத் தேக்குவதில் எந்தப் பிரச்சினையுமில்லை.

 

கேள்வி – புதிதாக உயர்த்திய அணைக்கட்டில் அந்தளவு நீரைத் தேக்க முற்பட்டது ஆபத்தானது என்ற கருத்துள்ளதே?

 

அது தவறான கருத்து. அணைக்கட்டை உயர்த்தியதே மேலதிக நீரைத் தேக்குவதற்காகத்தான் என்று திரும்பவும் சொல்கிறேன். 36 அடி நீரைத் தேக்கியதன் மூலமாக நாங்கள் பரீட்சார்த்தமாக மூன்று போகம் செய்கைக்கான நீரை வழங்கலாம் என்று திட்டமிட்டோம். இதன்படி மூன்று சந்தர்ப்பத்திலுமாக 33000 ஏக்கரில் பயிர்ச்செய்கையைச் செய்ய முடியும். இது இரணைமடுவின் வரலாற்றிலும் வடக்கின் விவசாயச் செய்கையின் வரலாற்றிலும் ஒரு புதிய வளர்ச்சியாக இருக்கும்.

 

கேள்வி – குளத்தைத் திறக்கும்போது போதிய முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அனர்த்தத்தை – பாதிப்பைக் குறைத்திருக்கலாம் என்பது பற்றி?

 

வழமையைப்போலவே இந்தத் தடவையும் உரிய முறையில் போதிய முன்னேற்பாட்டை எடுத்திருந்தோம். அதைப்போல முன்னெச்சரிக்கையையும் விடுத்திருந்தோம். கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி நிலையியற் கட்டளைப்படி (standing oder) மாவட்டச் செயலருக்கு அறிவிப்புகளை விடுத்து, அவர் மூலமாகச் சம்மந்தப்பட்ட அனைவரையும் இணைத்து நிலைமைகள் விளக்கப்பட்டன. அதோடு  அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கும் முன்னேற்பாட்டுக்கான அறிவுறுத்தல்களையும் விடுத்திருந்தோம் . குளத்தின் நீர் மட்டம் மேலும் அதிகரித்தால் எந்த வேளையிலும் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை விளக்கினோம்.

இதை விட எமது அலுவலகத்தை ஏற்கனவே அங்கே அமைத்திருக்கிறோம். கண்காணிப்புக்குரிய உத்தியோகத்தர்களை அங்கேயே நிறுத்தியிருக்கிறோம். மழை வீழ்ச்சியைக் கண்காணிப்பது, நீரின் அளவை மதிப்பிடுவது, அணைக்கட்டினை பரிசீலிப்பது என உரிய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன.

 

கேள்வி – வெள்ளப்பாதிப்பினால் ஏற்பட்ட அழிவுகள், பாதிப்புகள் எவ்வளவாக இருக்கும்?

 

இதைப்பற்றி உடனடியாகச் சொல்ல முடியாது. வெள்ளம் வடிந்தால் அழிவுகள் குறைவாக இருக்கும். மழை தொடர்ந்தும் பெய்தால் நிலைமை மோசமாகலாம். வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள் அழுகக் கூடிய நிலை ஏற்படக்கூடும். ஆனால், அந்தளவுக்கு நிலைமை ஏற்படாது என்று நம்புகிறோம்.

 

கேள்வி – குளத்தின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டிருந்தபோது பொறுப்பான பொறியாளர் அங்கே இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இது உண்மையா?

 

நான் குளத்தின் நிலைமைகளைக் கவனித்துக் கொண்டு நின்றேன். என்னோடு கூடவே துணைப்பொறியாளர்  ஒருவரும் நின்றார். குறித்த மணி நேரத்தில் பரணிதரனும் குளப்பகுதிக்கு வந்து எம்முடன் இணைந்து கொண்டார்.

தற்போதைய நிலைமைகளைக் குறித்து உங்களுடைய கருத்தென்ன? நிலைப்பாடென்ன?

மூன்று விடயங்களில் நாங்கள் கவனம் செலுத்தியிருந்தோம். அதன்படியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

1. இதன் மூலமாக இவ்வளவு கூடுதலாக தண்ணீர் வந்திருந்தபோதும் எந்தச் சேதமும் இல்லாமல் குளம் பாதுகாக்கப்பட்டது.

2.36 அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.

3. ஒப்பீட்டளவில் சேதங்கள், அழிவுகள் குறைக்கப்பட்டன.

கேள்வி – தற்போதைய நிலைமை என்ன?

இப்பொழுது வெள்ளத்தின் நிலைமை சுமுகமாகி வருகிறது. குளத்தின் நீர் மட்டம் 36 அடியில் பேணப்படுகிறது. ஆனால் நாங்கள் தொடர்ச்சியாக ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் முழுமையாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.

Share:

Author: theneeweb