மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவி மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

 

சென்னை: மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவி மறைவிற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மனைவி திருமதி.க.கௌரவம்மாள் அவர்கள் (வயது 78) தஞ்சாவூர் மாவட்டம் செங்கமடத்தான்காடு என்ற கிராமத்தில் இன்று (04.04.2019) மரணமடைந்தார்.

எளிய சொற்களில், எளிய மெட்டில், பாட்டமைத்து பாட்டாளிகளைப் பாடிய எம் இயக்க கவிஞன் கல்யாணசுந்தரம் 1959 ல் ஒரே மகன் திரு.குமரவேல் பிறந்த வேளையில், தன் 29 ஆவது வயதில் மரணமடைந்தார். இளம் வயதில் கணவனை பறிகொடுத்தும், தளராது தன் மகனை வளர்த்தெடுத்து, ஆளாக்கினார். திரு.குமரவேல் அவர்கள் தமிழக அரசு அதிகாரியாகப் பணியாற்றி சமீபத்தில் தான் ஓய்வு பெற்றார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மாண்பை பேணிக்காத்து வந்த திருமதி கௌரவம்மாள் அவர்கள் மரணமடைந்த செய்தி கேட்டு துயரடைந்தோம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் திருமதி.கௌரவம்மாள் கல்யாணசுந்தரம் அவர்களின் மறைவிற்கு அஞ்சலியையும், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கட்சியின் மாநில தலைவர்களில் ஒருவரும் தஞ்சை மாவட்ட செயலாளருமான தோழர்.மு.அ.பாரதி அவர்கள் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் நேரில் அஞ்சலி செலுத்துவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb