விக்னேஸ்வரன் மூடி மறைத்த உண்மை நீதிமன்ற தீர்ப்பால் அம்பலம்

நொதேன் பவர் நிறுவனத்தின் அசமந்ததால் சுண்ணாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் மூடி மறைத்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வெளிக் கொணரப்பட்டுள்ளது என வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

சுன்னாகம் பகுதியில் அனல் மின்நிலையத்தின் எண்ணெய் தங்கியில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அந்த அனல் மின்நிலைய நிறுவனமான நொதேன் பவர் நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடடனர்.

இதன்போது வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அப்போதைய விவசாய அமைச்சராக இருந்த பொ.ஐங்கரநேசன் ஆகியோர் போராடடத்தை முடக்க தாம் ஆய்வு செய்வதாக கூறி அதற்கு பெருமளவான நிதியையும் செலவழித்தனர்.

அதன் பின்னர் சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசுக்கள் எவையுமே இல்லை என அறிக்கையையும் வெளியிடடார். அவ்வாறு அவர்கள் வெளியிட்ட அறிக்கை பொய்யானது. அதிலும் ஊழல் நடந்துள்ளது என நான் மாகாணசபையில் பல இடங்களிலும் கூறியிருந்தேன்.

ஆனாலும் அவர்கள் நான் சொல்வதற்கு மறுப்பு கூறி வந்தனர். மேலும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய தூதுவர் வடக்கு மாகாண முன்னாள் முதல்வரிடம் சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை தொடர்பில் கேள்வி எழுப்பிய போது அங்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என சர்வசாதாரணமாக கூறியிருந்தார். அதனையும் நான் ஆதாரத்துடன் மாகாண சபையில் கூறியிருந்தேன்.

இவ்வாறாக பாதிக்கப்பட்ட மக்களை கருத்தில் எடுக்காது ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட இந்த இருவரினதும் பித்தலாட்டங்கள் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வெளியில் வந்துள்ளது. இவர்கள் மூடி மறைத்த விடயம் நீதித்துறை ஊடாக வெளிவந்துள்ளது என்றார்.

இதேவேளை அனல்மின் நிலையத்தினால் ஏற்பட்ட நீர் மாசு பாதிப்புக்கு 20 மில்லியன் ரூபாய் நஷட ஈடு நொதேன் பவர் நிறுவனம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb