வெலே சுதாவின் மரண தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்

வெலே சுதா என அறியப்படும் கம்பொல வித்தானகே சமந்த குமாரவுக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் விதித்திருந்த மரண தண்டனை தீர்ப்பு சரியானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி அவரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை ஆராய்ந்த போது மேன்முறையீட்டு நீதிமன்றம் இதற்கான தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தீபாலி விஜேசுந்தர மற்றும் அச்சல வென்கப்புலி ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 2008 ஆம் ஆண்டு கல்கிஸ்ஸை பகுதியில் 7 கிராம் 5 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெலே சுதா கைது செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து, 2015 ஒக்டோபர் 14ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் சந்தேகத்துக்குரியவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb