பிரெக்ஸிட் காலக்கெடுவை ஜூன் 30-க்கு நீட்டிக்க பிரிட்டன் கோரிக்கை

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான (பிரெக்ஸிட்) காலக் கெடுவை, அடுத்த மாதம் 22-ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்கு நீட்டிக்குமாறு அந்த அமைப்பிடம் பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஐரோப்பிய யூனியன் – பிரிட்டன் உறவு தொடர்பாக இரு தரப்பிலும் உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் இதுவரை 3 முறை நிராகரித்த நிலையில், இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்குக்கு வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

பிரெக்ஸிட் தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்பதில் பிரிட்டன் எம்.பி.க்கள் இடையே இதுவரை ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

அயர்லாந்து தொடர்பான சர்ச்சைக்குரிய அம்சம் காரணமாக, அந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் இதுவரை 3 முறை நிராகரித்து விட்டது.
பிரெக்ஸிட் விவகாரத்தில் தற்போதுள்ள இழுபறி இனியும் நீடிக்க அனுமதிக்க முடியாது.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் பிரிட்டன் உறுதிப்பாடுடன் உள்ளது.
எனவே, பிரெக்ஸிட் நிறைவேற்றத்துக்கான இறுதித் தேதியை அடுத்த மாதம் 22-ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்கு நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் தெரசா மே குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb