பிரெக்ஸிட் விவகாரம்: எதிர்க்கட்சியுடன் சமரசத்துக்குத் தயார்

பிரெக்ஸிட் விவகாரத்தில் நீடித்து வரும் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, முக்கிய எதிர்க்கட்சியுடன் நிபந்தனையின்றி சமரசம் செய்துகொள்வதற்குத் தயாராக இருப்பதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரோமானிய தலைநகர் புகாரெஸ்ட்டில் சனிக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் பிரிட்டன் நிதியமைச்சர் ஃபிலிப் ஹமண்ட் கூறியதாவது: பிரெக்ஸிட் இழுபறிக்கு முடிவு கட்டுவதற்காக, முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியுடன் சமரசம் மேற்கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம்.  அவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எந்த நிபந்தனையும் முன்வைக்கவில்லை.

தொழிலாளர் கட்சியினருடன் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் போது, மேலும் பல கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொள்ளப்படும் எனவும், அதன் மூலம் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்படும் எனவும் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
முன்னதாக, பிரெக்ஸிட் விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டுவதற்காக தொழிலாளர் கட்சித் தலைவர்களுடன் மூத்த அமைச்சர்கள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.

எனினும், 3 நாள்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகும் பிரெக்ஸிட் தொடர்பான ஒப்பந்தத்தில் முக்கியமான மாற்றத்தைச் செய்வதற்கு பிரதமர் தெரசா மே மறுப்பு தெரிவித்து வருவது அதிருப்தியளிப்பதாக தொழிலாளர் கட்சி வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.  இந்தச் சூழலில், நிதியமைச்சர் ஃபிலிப் ஹமண்ட் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதற்கு (பிரெக்ஸிட்) பின்னர், இரு தரப்பினருக்கும் இடையே சிறப்பு வர்த்தக உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை, அந்த நாட்டு நாடாளுமன்றம் கடந்த மாதம் மூன்றாவது முறையாக நிராகரித்தது.

இதன் காரணமாக இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
சிறப்பு ஒப்பந்தம் இல்லாமலேயே பிரெக்ஸிட் நடைபெற்றால், அது பிரிட்டன் தொழில்துறையை கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

Share:

Author: theneeweb