9 லட்சம் அமெரிக்க டாலர்கள் அபேஸ்’ ஆப்பிளுக்கு போக்கு காட்டிய சீன மாணவர்கள்!

 ஆப்பிள் நிறுவனத்துக்கே போக்கு காட்டிய சீன மாணவர்கள் 9 லட்சம் அமெரிக்க டாலர்களை ஏமாற்றியுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுனமான ஆப்பிள் உலகளவில் புகழ்பெற்றது. இந்நிலையில், இதன் படைப்பான ஐஃபோன் மூலம் சீன மாணவர்கள் இருவர் அந்த நிறுவனத்தை கடந்த 2 வருடங்களாக ஏமாற்றி வந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓரிகான் பல்கலையில் படித்து வரும் சீனாவின் ஹாங்காங் நகரத்தைச் சேர்ந்த யாங்யுங் சோ மற்றும் குவான் ஜியாங் ஆகிய பொறியியல் மாணவர்கள், 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆயிரக்கணக்கான போலி ஐஃபோன்களை வடிவமைத்து அமெரிக்கா கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு ஐஃபோன்களில் பிரச்னை உள்ளதாக ஆப்பிள் நிறுவனத்திடம் குற்றம்சாட்டி அதற்கு பதில் புதிய ஐஃபோன்களை பெற்று வந்துள்ளனர். மேலும், புதிதாக பெற்ற அந்த நிஜ ஐஃபோன்களை கள்ளச் சந்தையில் பல நூறு அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சதிச்செயலை ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது. அதன்படி அந்த மாணவர்களிடம் இருந்து வந்த 3,069 புகார்களில் 1,493 ஐஃபோன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 8 லட்சத்து 95 ஆயிரத்து 800 அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த இரு மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிநெட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb