தமிழ்நாட்டில் அகதிகள்

அ.ராமசாமி —

ஒவ்வொரு தேர்தலிலும் ஈழப்பிரச்சினையை மையமிட்டுத் தமிழக வாக்காளர்களைத் திசை திருப்பும் ஒரு கூட்டம் இருக்கிறது. அதைப் பேசுவதை மட்டுமே ஒரே தீர்மானமாகக் கொண்ட அரசியல் கட்சிகள் கூட இருக்கின்றன. தீடீரென்று செயல்படுவார்கள்; பின்னர் காணாமல் போவார்கள். தீவிரமாகப் பேசும் அவர்களிடம் சின்னச் சின்னக் கேள்விகள் கேட்டால் கூட பதில் இருக்காது. தமிழ்நாட்டில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களுக்கு இந்திய/ உலகச் சட்டங்களின்படி கிடைக்கக் கூடிய அடிப்படையான உரிமைகள், சலுகைகள் பற்றிய அக்கறைகள் குறைவாகவும் ஈழத்தில் போராடுபவர்கள் பற்றிய கரிசனங்கள் கூடுதலாகவும் வெளிப்படும் இந்த பேச்சுகள் உணர்ச்சிகளைத் தூண்டுத் திசை திருப்பும் தன்மையன. அத்திசைத்திருப்பல்கள் எப்போதும் தேர்தல் காலப் பேச்சுகளாக இருந்திருக்கின்றன. சில தேர்தல்களின் வெற்றி/ தோல்விகளுக்குக் காரணமாகவும் இருந்திருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஈழ ஆதரவாளர்கள் என்ற அடையாளத்தைச் சுமந்துகொண்டு அவர்கள் பேசும் விதம், பேசியபிறகு செயல்படும் விதம் ஆகியவற்றிற்கிடையேயுள்ள தொடர்பின்மை எப்போதும் சந்தேகங்களை எழுப்புபவை. இவர்களின் இப்படியான வார்ப்பு எப்படி உருவானது என்ற கேள்வி எப்போதும் எனக்குண்டு. இந்த வார்ப்பு இயல்பானதா? உருவாக்கப்படுவதா? என்ற ஐயமும் உண்டு. எப்போதும் ஈழப்பிரச்சினையைப் பொதுச் சமூகத்திற்கு விளக்கும் நோக்கம் கொண்டதாக இருந்ததில்லை என்பதையும் நான் அறிந்திருக்கிறேன்.

இந்த நேரத்தில் நண்பர் ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினரானவுடன் ஈழ அகதிகள் குறித்து எழுதிய கட்டுரையும், அதனை வாசித்தவுடன் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிச் சட்டமன்றத்தில் அளித்த சலுகைகளும் நினைவுக்கு வருகின்றன.

போரின் மறுபக்கத்தையும் தமிழ் நாட்டில் வாழும் அகதிகளின் இருப்பையும் அவலத்தையும் தனது எழுத்துகள் வழியாகச் சொல்லிக்கொண்டே இருக்கும் பத்திநாதனை ஒன்றிரண்டு தடவை சந்தித்திருக்கிறேன். புத்தகச் சந்தைகளின் விற்பனைக்கிடையே என்னிடம் பேசிய பலவற்றை இப்போது நேர்காணலில் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டு அகதிகளின் இருப்பை முழுமையாக விளக்கும் விதமாகக் கேள்விகளைத் தொகுத்து விடைகளைப் பெற்றுள்ளார் கவி. கருணாகரன்.

நேர்காணலை இலக்கியத்தின் பக்கம் நகர்த்திவிடும் தன்மையது. இலக்கியம் என்றால் பொழுதுபோக்கிற்கானதல்ல. உண்மைகளின் பக்கம் நிற்பது; உண்மையை ஓங்கிச் சொல்வது. செயல்படத்தூண்டுவது. அந்த வகையில் இந்த நேர்காணல் வாசிக்கவேண்டிய- செயல்பாட்டைக் கோரும் நேர்காணல்.

Share:

Author: theneeweb