கோட்டபாயவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் மேலும் ஒரு வழக்கு தாக்கல்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட ஐ.டீ.ஜே.பி நிறுவனத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஒருவரை துன்புறுத்திய சம்பவம் தொடர்பிலேயே பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வழக்குக்கான அழைப்பாணை அமெரிக்காவில் வைத்து பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்வின் புதல்வி அஹிம்சா விக்ரமதுங்க, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது தந்தையின் கொலை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவின் பணிப்பு மற்றும் ஆலோசனைக்கு அமைய இடம்பெற்றுள்ளதாக லசந்த விக்ரமதுங்வின் புதல்வியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அமெரிக்க நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள குறித்த வழக்கு தொடர்பில், எமது செய்தி பிரிவு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் லால் விக்ரமதுங்கவை தொடர்பு கொண்டு வினவியது.

அதற்கு பதிலளித்த அவர் அது குறித்து தம்மால் எதுவும் உறுதிப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

கோட்டபாய ராஜபக்ஷ தற்போது அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், எதிர்வரும் 12 ஆம் திகதி அவர் மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.

Share:

Author: theneeweb