“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”


–              கருணாகரன்

‘அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்’ என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்ததைப்பற்றி வெளியாகியிருந்த குமுதம் நேர்காணலை யாரோ ஒரு நண்பர் தன்னுடைய முகப்பில் பகிர்ந்திருந்தார். அந்த நேர்காணலைப் பிரதியெடுத்து தெய்வீகனுக்கு அனுப்பினேன். கூடவே மகேந்திரனுடைய வன்னிப் பயணம் பற்றியும் தெய்வீகனுடன் பேசினேன். அப்பொழுது தோன்றியது மகேந்திரனைப்பற்றி “எதிரொலி” க்கு எழுதலாம் என்று. கட்டுரையை முடிப்பதற்கு முன்பே தெய்வீகனிடமிருந்து அழைப்பு.

“மகேந்திரன் போய் விட்டார்”

இந்த மாதிரி கவலையளிக்கிற சேதி  வரும்போது அதிர்ச்சியில், துயரத்தில் ஆடிப்போய் விடுகிறோம். மகேந்திரன் விருப்பத்துக்குரிய சினிமா இயக்குநர் மட்டுமல்ல, நெருக்கத்துக்குரியவரும் கூட.

மகேந்திரனும் ஜானும் 2005 இல் வன்னிக்கு – கிளிநொச்சிக்கு – வந்திருந்தனர். அதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் விஜய் நடித்த “சச்சின்” படத்தை ஜான் இயக்கி முடித்திருந்தார். அந்தப் பணிகள் முடிந்த கையோடு வன்னிக்கு இருவரும் வந்தனர். உண்மையில் புலிகள் அழைத்திருந்தது மகேந்திரனையே. இதற்கு வழிகாட்டியது ஓவியர் புகழேந்தியாகும்.

அப்போது ஓவியர் புகழேந்தியின் ஓவியக் காட்சிகள் வன்னி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் நடந்து கொண்டிருந்தன. காட்சிகளின் முடிவில் புகழேந்தியை அழைத்துச் சந்தித்த பிரபாகரன், ஓவியத்துறையில் ஆர்வமுள்ள போராளிகள், கலைஞர்கள், மாணவர்களுக்கெல்லாம் ஓவியப் பயிற்சியை வழங்க முடியுமா? என்று கேட்டார்.

“ஓ.. செய்யலாமே” என்றார் புகழேந்தி.

பேச்சு தமிழீழச் சினிமாவை புதிய கட்டத்துக்கு வளர்ப்பதைப்பற்றித் திரும்பியது. “பொருத்தமான சினிமாப் பயிற்றுநர்களை அழைத்தால், அவர்கள் மூலமாக ஏற்கனவே திரைத்துறையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போராளிகளுக்கும் கலைஞர்களுக்கும் விரிவான அறிவையும் நுட்பங்களையும் கற்றுத் தரலாமல்லவா!” என்றார் பிரபாகரன்.

“நிச்சயமாக” என்றார் புகழேந்தி.

“யாரை அழைக்கலாம்?” எனக் கேட்டார் பிரபாகரன்.

அந்த நாட்களில் தமிழ்ச்சினிமாவில் அறியப்பட்டிருந்த பாரதிராஜா, சீமான், தங்கர் பச்சான் போன்றவர்களும் புலிகளுக்கு அறிமுகமாகியிருந்தனர். ஈழப்பிரச்சினையை மையமாக வைத்து “காற்றுக்கென்ன வேலி” படத்தை இயக்கியிருந்த புகழேந்தி தங்கராஜ் வன்னிக்கு வந்து பிரபாகரனைச் சந்தித்துச் சென்றிருந்தார். இருந்தாலும் இவர்களுக்கு அப்பால் உள்ள ஒருவரே தேடப்பட்டார்.

“இப்ப (2005 காலகட்டத்தில்) பிஸியாக – முன்னணியிலிருப்பவர்களை அழைத்தால் அதுக்கு அதிக செலவாகும். அது மட்டுமல்ல. அவர்களுக்கான நேரமும் பிரச்சினையாக இருக்கும். சிலர், இது ஒரு அரசியல் விவகாரமாக மாறினால் அல்லது யாராலும் அப்படி மாற்றப்பட்டால் அது தங்களுடைய எதிர்காலத்துக்கு நெருக்கடியாகும் என்று எண்ணுவார்கள். ஆகவே நாங்கள் மகேந்திரனை அழைக்கலாம். அவர் எப்பொழுதும் இயங்கக் கூடியவர். தமிழில் மக்களின் வாழ்க்கையை இயல்போடு பேசும் உதிரிப்பூக்கள், மெட்டி, பூட்டாத பூட்டுகள் போன்ற யதார்த்தச் சினிமாவை வெற்றிகரமாக உருவாக்கியவர். இன்னும் அதே உணர்வோடும் உற்சாகத்தோடும் இருக்கிறார். திரைத்துறையில் பயிற்சியை வழங்கக் கூடிய ஆற்றல் அவருக்கு நிறைய உண்டு” என்று சொன்னார் புகழேந்தி.

மகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஜானும் தன்னோடு வந்தால் உதவியாக இருக்கும் என்றார் மகேந்திரன்.

“ஓ.. தாராளமாக வரலாம். அவரையும் அழைத்து வாருங்கள்” என்று பச்சைக் கொடியைக் காட்டினர் புலிகள்.

போர் நிறுத்த காலச்சூழலில் நிலவிய நெகிழ்வான நிலைமை இதற்கு வாய்ப்பாக இருந்தது. ஏற்கனவே வீடியோ கமெராக்களின் மூலமாகச் சிறிய அளவில்  நீளப்படங்களையும் குறும்படங்களையும் தயாரித்திருந்த புலிகளுக்கு போர் நிறுத்தச் சூழல் முழுமையான சினிமாவை நோக்கிச் சிந்திப்பதற்கான வாய்ப்பை அளித்தது. முழுமையான சினிமாவை உருவாக்குவதற்கான சாதனங்கள் வெளியிலிருந்து தருவிக்கப்பட்டன. சாதனங்கள் மட்டுமிருந்தால் போதாது. அனுபவமும் சினிமா அறிவும் உள்ளவர்கள் தேவை என்பதே பிரபாகரனின் எண்ணம். அப்பொழுதுதான் நல்ல படங்களை உருவாக்குவதற்கான சாத்தியங்களை உண்டாக்கலாம்.

இதற்கு ஏற்கனவே குறும்படங்கள், முழுநீளப்படங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு முறைப்படியான திரைத்துறைப்பயிற்சியை  வழங்க வேண்டும் என்று எண்ணினார் பிரபாகரன். இதற்கெனத் திரைப்படப் பயிற்சிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இதனை நிதர்சனத்துக்குப் பொறுப்பாக இருந்த  சேரலாதன் ஒருங்கிணைத்தார்.

வந்ததும் பயிற்சிகளை ஆரம்பித்தார் மகேந்திரன். முதலில் சினிமா பற்றிய அறிமுகம். இதற்காக வரும்போது எடுத்து வந்திருந்த உலகின் சிறந்த படங்களை ஒவ்வொரு நாளும் காட்சிப்படுத்தினார். தினமும் ஒரு படமோ இரண்டு படங்களோ காட்சிப்படுத்தப்பட்டன. அந்தப்படங்கள் உருவாக்கப்பட்ட விதம்? அவை பார்வையாளர்களின் மனதில் உண்டாக்கும் அனுபவம்? படங்களைப்பார்க்கும்போது உண்டாகும் சிந்தனை? நடிப்பு, ஒளிப்பதிவு, திரைப்பிரதி, வசனங்கள், இசை, காட்சியமைப்பு, காட்சித்தளங்கள் என ஒவ்வொன்றைப்பற்றியும் உரையாடல்களின் வழியே கவனப்படுத்தினார். ஈரானியச் சினிமா, லத்தீன் அமெரிக்கச் சினிமா, ஆப்கானிஸ்தானியச் சினிமா, சிங்களச் சினிமா என்று ஒடுக்குமுறைக்கும் மாற்றுப் பண்பாட்டுக்குமுரிய சினிமாக்களைப்போல ஈழச் சினிமாவும் வரவேண்டும். அப்படி வர முடியும். அதற்கான சூழலும் வேறான கதைக்களமும் ஈழச்சினிமாவுக்குண்டு என்பது மகேந்திரனுடைய நம்பிக்கையும் விருப்பமும்.

இதேவேளை பயிற்சியில் ஈடுபடுகின்றவர்கள் ஏற்கனவே உருவாக்கியிருந்த அல்லது பங்களித்திருந்த படங்களையெல்லாம் பெற்றுப் பார்த்தார். அப்பொழுதுதான் இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், எதையெல்லாம் சிந்திக்கிறார்கள்? எப்படியான படங்களை உருவாக்குகிறார்கள்? இந்த நிலையில் இவர்களுக்குத் தன்னால் எத்தகைய சினிமாவையும் நுட்பங்களையும் சொல்லித்தர முடியும் என்று மறுபக்கத்தில் ஆராய்ந்து கொண்டிருந்தார்.

இதுதான் மகேந்திரனின் சிறப்பு. தனக்குத் தெரிந்ததையும் தான் சிந்திப்பதையும் மற்றவர்களிடம் திணிக்காமல், மற்றவர்களுடைய கோணம் என்ன? அவர்களுடைய பிரச்சினைகள் என்ன? அவர்களின் சிந்தனைப்போக்கு எப்படியானது? என்பதை அறிந்து, அதைத் தனக்குள் உள்வாங்கிக் கொண்டு பரஸ்பரமாக ஒன்றை நோக்கி நகர்வது.

தன்னுடைய நோக்குக்கு மட்டும் அழுத்தத்தையும் மையத்தையும் வழங்காமல் பிறருடைய கோணங்களுக்கும் மையத்தை வழங்கும் பண்பு இது. எல்லோரிடமும் இந்தப்பண்பிருப்பதில்லை. இத்தகைய பண்பினால்தான் மகேந்திரன் சிறந்த திரைக்கதையாசிரியராக வரமுடிந்தது. அவர் உருவாக்கும் ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் மையமுண்டு. ஒவ்வொரு பாத்திரங்களின் நோக்குக்கும் தனி அழுத்தங்கள் கிடைத்தன. இதையே தன்னிடம் பயில்வோரிடத்திலும் பகிர முனைந்தார்.

அடுத்த கட்டமாக திரைப்பிரதியை உருவாக்குவது எப்படி என்ற பயிற்சிகள் ஆரம்பமாகின. பயிற்சியாளர்களுடன் கதைகளைப்  பற்றிய உரையாடல்கள் நடந்தன. இன்னொரு பக்கத்தில் ஈழப்படைப்பாளிகளின் கதைகளைத் தேடத் தொடங்கினார் மகேந்திரன். இதற்காக ஈழ எழுத்தாளர்களின் புத்தகங்களையெல்லாம் சேகரித்துக் கொடுத்தேன். “இவ்வளவு எழுத்தாளர்களும் கதைகளும் இருக்கும்போது எவ்வளவு மகத்தான சினிமா வரவேண்டும்?” என்று வியந்தார்.

நாங்கள் படிக்கிற எல்லாக் கதைகளையும் இலகுவில் சினிமாவாக மாற்றி விடமுடியாது சில கதைகள் சினிமாவில்தான் ஜொலிக்கும்” என்று தன்னுடைய அவதானங்களையும் அனுபவங்களையும் சொன்னார் மகேந்திரன். அவருடைய உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள், முள்ளும் மலரும், மெட்டி போன்ற படங்கள் உருவாகிய விதத்தைப்பற்றி யோசித்தேன். இந்தப் படங்களைப்பற்றி, இவை உருவாகிய விதம் பற்றிப்பேசினோம். இந்தப்படங்களைப் பார்த்து வியந்த காலத்தில் மகேந்திரனைச் சந்திப்போம் என்றோ அவருடன் இவ்வளவு நெருக்கமாக இருந்து பேசக் கிடைக்கும் என்றோ நாம் எதிர்பார்த்ததேயில்லை. ஆனால் அவர் எந்த உயர்நிலையையும் வெளிப்படுத்தாமல் மிகச் சாதாரணமாக – நீண்ட நாள் நட்போடு பழகுவதாகவே நெருங்கியிருந்தார்.

புதுமைப்பித்தனுடைய “சிற்றன்னை” என்ற கதை உதிரிப்பூக்களாக மாறிய விதத்தைப்பற்றி மகேந்திரன் சொன்னபோது எவ்வளவு மகத்தான சினிமா தமிழில் உருவாகியிருக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. தமிழில் சிறந்த சினிமாவாக்கப்படக்கூடிய நல்ல கதைகள் தாராளமாக உண்டு. இதைத் தமிழ்ச்சினிமாவில் கொண்டு வரவேண்டும் என்றே தொடர்ந்து பிரபஞ்சன், சிவசங்கரி போன்றோரின் கதைகளை வைத்துப் படங்களை உருவாக்கினேன் என்றார். ஆகவே அப்படியான ஒரு மரபைத் தன்னிடம் பயில்கின்றவர்களிடத்திலும் பயிற்றுவிப்பதற்கு முயற்சித்தார் மகேந்திரன். அந்தப் படங்களின் மூலக்கதைகளையும் அவை சினிமாவாக உருவாகியிருப்பதையும் பற்றி விளக்கினார்.

ஒரு கட்டத்தில் மாதிரி முயற்சியாக “1996” என்ற படத்தைத் தான் பின்னணியில் இருந்து கொண்டு திரைத்துறைப்பயிற்சி பெற்றுக் கொண்டிருப்போரை இயக்க வைத்தார் மகேந்திரன். இதற்காக எழுத்தாளர் தாமரைச்செல்வியின் “இடைவெளி” என்ற சிறுகதை திரைப்பிரதியாக்கப்பட்டது. இந்தப்படத்தின் மையப்பாத்திரங்களான தாத்தாவாக முல்லை யேசுதாசனும் பேரக்குழந்தையாக எங்கள் மகன் மகிழும் நடித்தனர். எங்களுடைய சுற்றயலிலேயே பெருமளவு காட்சிகள் பிடிக்கப்பட்டன. எடிற்றிங் முடிந்தபோது என்னைக் கூப்பிட்டார். கூட என்னோடிருந்த இரவி அருணாசலத்தையும் அழைத்துப் போனேன்.

“எப்பிடி வந்திருக்குப் படம்ன்னு பாத்துச் சொல்லுங்க?” என்று சொன்னார்.

ஏற்கனவே அவர் உருவாகிய படங்களையெல்லாம்  பார்த்து வியந்தவர்களிடம் இப்படியொரு கேள்வி. இப்பொழுது அவருடன் கூடப் பழகவும் அவரோடு கூட இருந்து இந்த மாதிரி வேலை செய்யவும் வாய்த்திருக்கிறதே என்ற மகிழ்ச்சி.

படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இறுதிக்காட்சியில் வீட்டில் இனியும் இருக்க முடியாது என்ற நிலையில் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிச் செல்லும் தாத்தாவைத் தேடிக் கொண்டு ஓடும் பேரன்… தாத்தா என்று அழைத்துக் கொண்டு நீண்டதூரம் ஓடிய களைப்பில் தடுமாறி விழப்போகும்போது…

இரவி அழுதே விட்டார். என்னுடைய தொண்டை கட்டி விட்டது. கண்களிலிருந்து நீர் கொட்ட மகேந்திரனின் கைகளை அழுத்திப் பிடித்தேன். மெல்லிய புன்னகையோடு என்னுடைய தோள்களைத் தடவினார் மகேந்திரன். படத்தைப்பற்றிய எங்களுடைய அபிப்பிராயங்களைச் சொன்னோம். மறுத்து நியாயப்படுத்தாமல் எல்லாவற்றையும் கூர்ந்து கேட்டார். நாங்கள் சொன்ன விமர்சனங்களைக் கவனத்தில் எடுத்துப் பிறகு சில மாற்றங்களை அந்தப் படத்தில் செய்திருந்தார் பிறகு.

ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு மேல் கிளிநொச்சியில் தங்கியிருந்தார் மகேந்திரன். எத்தனை மணிக்குத் தூங்கினாலும் அதிகாலையிலேயே எழுந்து விடுவார். காலையில் எழுந்தவுடன் அவர் மூன்று வேலைகளைச் செய்வதுண்டு. முதலில் நடை. நடையால் வந்த பிறகு புத்தகம் படிப்பது. மூன்றாவது எழுதுவது. அப்பொழுது அவர் எழுதியவைதான் “நடிப்பு என்பது”. “திரைக்கதை என்பது” என்ற இரண்டு புத்தகங்களும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அத்தியாயத்தை எழுதுவார். எழுதிய பிரதியை எடுத்துக் கொண்டு வந்து அன்றன்றே கையில் தந்து “படித்துச் சொல்லுங்க சார்” என்பார். அவருடைய ஆற்றல், அனுபவங்களின் முன்னே நான் என்னசொல்வது? ஆனாலும் மனதில் பட்டதைச் சொல்வேன். இரண்டு புத்தகங்களையும் நிதர்சனம் வெளியிட்டது. நிதர்சனத்துக்காக அவற்றைப் பதிப்பித்துக் கொடுத்தேன். பிறகு இந்த இரண்டு புத்தகங்களையும் மீள் பதிப்பாக லீனா மணிமேகலையின் கனவுப்பட்டறை வெளியிட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் மகேந்திரன் இயக்கி, நிதிப்பிரச்சினைகளால் பாதியில் நின்று போயிருந்த “சாசனம்” படத்தின் வேலைகளை மீளச் செய்வதற்கான தகவல் வந்திருந்தது. “சாசனம்” இந்திய மத்திய அரசின் கலாச்சார மையமொன்றின் நிதியூட்டத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது. மேலதிக நிதியைக் கோரியிருந்த மகேந்திரனுக்குச் சாதகமான பதில் கிடைத்தது பெரிய உற்சாகத்தைத் தந்தது. தமிழகம் திரும்பியதும் சாசனத்தின் வேலைகளை விரைவாக முடித்து விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதன்படி பிறகு சாசனம் வெளியானது. ஆனாலும் அவர் எதிர்பார்த்தளவுக்கு அது வெகுஜனப்பரப்பில் அறிமுகமாகவில்லை என்பது கவலையே. சாசனத்தை மக்கள் வெற்றியடைய வைத்திருந்தால் தொடர்ந்து மேலும் சில படங்களை மகேந்திரன் தமிழில் தந்திருக்கக் கூடும்.

தமிழில் மிகச் சிறந்த படங்களை உருவாக்கிப் பேர் பெற்றவர் என்று  மகேந்திரனிடம் எந்தப் பெருமிதங்களுமில்லை. அவருடைய படங்கள் நாற்பது ஆண்டுகளாக மிகச் சிறந்த படங்களின் வரிசையில் குறிப்பிடப்படுகின்றன. மிகச் சிறந்த இயக்குநராகவே எல்லோராலும் மதிக்கப்படுகிறார். தமிழில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், கமல்ஹாசன், ரஜினிகாந் எனப் பலருடன் இணைந்து வேலை செய்திருக்கிறார். ரஜினிக்கு நடிப்பில் நல்லதொரு அடையாளத்தை முள்ளும் மலரும், ஜானி ஆகிய படங்களில் வழியாகக் கொடுத்தவர் என்பது உலகறிந்த விசயம். ஆனால் இன்னும் தன்னால் ஒரு சிறந்த சினிமாவை உருவாக்க முடியவில்லை. அதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் அப்படிச் சில படங்களை உருவாக்கினால்தான் மகிழ்ச்சி என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார் மகேந்திரன். உண்மையும் அதுதான். அவர் தன்னுடைய விருப்பத்திற்கேற்ற படங்களை உருவாக்குவதற்கு முயற்சித்துக் கொண்டேயிருந்தார். அதற்கென ஏராளம் கதைகளைக் கையில் வைத்திருந்தார். எண்ணற்ற குறிப்புகளை மனதில் வரைந்து கொண்டிருந்தார். ஆனால் காலமும் தமிழ்க்கலாச்சாரச் சூழலும் அதற்கான இடத்தைச் சரியாக வழங்கவில்லை.

வன்னிக்கு வந்து சென்ற பிறகு குமுதம் இதழுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் தனக்குமிடையில் நடந்த சந்திப்பைப் பற்றிச் சொல்லியிருந்தார். “யோசித்தபோது சந்தித்த மூன்றரை மணி நேரமும் ஒரு வார்த்தை கூட பிரபாகரன் அரசியல் பேசவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது. ‘அவருக்கு எரிக் சோல்ஹம்மிடம் என்ன பேசவேண்டும். இந்த மகேந்திரனிடம் என்ன பேச வேண்டும் என்று தெரிந்திருக்கிறது” என்று.

எம்.ஜி.ஆரும் பிரபாகரனும் எதிர்பாராத வகையில் தன் வாழ்வில் சந்திக்க நேர்ந்த மனிதர்கள். இருவரையும் தன்னால் மறக்க முடியாது. ஏதோ ஒரு வகையில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இருவரும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்று பிறகொரு தடவை நடந்த உரையாடலில் குறிபிட்டார் மகேந்திரன்.

மகேந்திரனுடைய தடங்களையும் கனவுகளையும் ஈழச் சினிமா தொடருவதே அவருக்கான மதிப்பளித்தலாகும். தமிழ்ச்சினிமா மகேந்திரனைப் புகழ்ந்துரைப்பதை விடவும் அவர் விரும்பிய சினிமாவை தமிழ்ப்பண்பாட்டுச் சூழலில் உருவாக்குவதே சிறப்பு. அதுவே மகேந்தின் என்ற கலை ஆளுமைக்குச் செலுத்தும் மெய்யான அஞ்சலியாகும்.

Share:

Author: theneeweb