தமிழ் அரசியல் சூழலும்,பண்பாட்டுமாற்றங்களும்

தொகுப்பு : வி.சிவலிங்கம்

போரிற்குப் பிந்தியதமிழ்ச் சூழலில் பாரியமாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. அரசஅபிவிருத்தித் திட்டங்கள்,தனியார் வர்த்தக நடவடிக்கைகள், வெளிநாட்டு பணவருமானத்தின் காரணமாக குடும்பங்களின் வாழ்வுநிலை மாற்றங்கள், ஏற்கெனவே சமூக,பொருளாதார காரணிகளால் வறுமைநிலையில் வாழ்ந்தமக்கள் எதிர் நோக்கும் வருமானப் பற்றாக்குறை, கூலி வருமான நிச்சயமற்ற வாழ்வுநிலை, குடியிருப்புகளை நிர்மாணிப்பதில் ஏற்படும் தடைகள், ஒருபுறத்தில் நிலப் பற்றாக்குறை மறு புறத்தில் தரிசுநில அதிகரிப்பு, அரசகொடுப்பனவுகளைப் பெறுவதில் உட்கட்டு நிர்வாகங்களின் பாரபட்ச செயற்பாடு என மாற்றங்களும், உள் முரண்பாடுகளும் உருவாகியுள்ளன. ஏற்கெனவே சமூகஒடுக்கு முறைகளாலும், போரின் வடுக்களாலும் பொருளாதாரரீதியாகவும் மற்றும் வழிகளிலும் ஒருசாரார் தொடர்ந்து பின் தள்ளப்பட்டு வருகின்றனர். இம் மக்களேதமிழ்ப் பிரதேசங்களில் பெரும்பான்மையினராகவும், இப் பாதிப்பு சாதி, மதம் என்பவற்றைக் கடந்து செல்வதாலும் தொடர்ச்சியாக அடிநிலைமக்களின் தொகை அதிகரித்துள்ளது. இம் மக்களின் வாழ்வு தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் அம் மக்களின் எதிர்காலம் குறித்து ஆழமானகவனம் தேவைப்படுகிறது. இம் மக்கள் மத்தியில் வாழ்ந்தும், சேவைகள் புரிந்தும் வரும் குழுக்களின் அனுபவங்கள் பல. இதனால் அக் குழுக்களை இணைப்பதும், அதன் அனுபவங்களைப் பெற்று விஞ்ஞானபூர்வ வழியில் நிலமைகளை மாற்ற மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றிய கருத்துப் பரிமாறல்களைப் பகிர்ந்துகொள்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

ஆயுதப் போராட்டம் 2009 இல் முடிவுக்கு வந்தபின்னர் நாடு முழுவதும் பலநெருக்கடிகள் தோற்றியுள்ளன. அரசியல் மட்டுமல்ல ,நாட்டின் பொருளாதாரமும் பெரும் சிக்கலுக்குள் உள்ளது. அதிகார இருப்பு என்பது சிறுகுழுவினரின் கைகளில் படிப்படியாக சென்று வருவதால் நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள் ஊழல் மையங்களாகவும், தேசிய செல்வம் சிறுபிரிவினரிடம் குவிக்கப்படுவதும் நிகழ்வாகஉள்ளன.

நாட்டில் ஏற்கெனவே காணப்பட்டசமச் சீரற்ற பொருளாதார நிலமைகள் தற்போது பணக்காரர், ஏழை என்போருக்கான இடைவெளியை மேலும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக ஏற்கெனவே நிலப் பற்றாக்குறை, வருமானப் பற்றாக்குறை, வீட்டுப் பற்றாக்குறை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது மேலும் பின் தள்ளப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பின்மை, அபிவிருத்தியின்மை, விலைவாசி உயர்வு போன்றன இம் மக்களையே முதலில் பாதிக்கிறது. நாட்டின் பொருளாதார பரிபாலனம் என்பது அரசமட்டத்தில் சிறுகுழுவினரின் கைகளில் சென்றுள்ளதாலும், அவர்களே நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கைகளைத் தீர்மானிப்பதாலும் நாடு பெரும் கடனுக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதே போன்றே பிராந்தியரீதியிலும் பொருளாதாரமற்றும் சந்தைநடவடிக்கைகளில் அதிகாரவர்க்கத்தின் முகவர்களாக இயங்கும் சிறுகுழுக்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இவை யாவும் அடிநிலை மக்களின் வாழ்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு அவ்வாறான பாதிக்கப்படும் மக்களின் தொகை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இந் நிலைதொடர்வது குறித்து சமூகத்தின் மேல்தட்டுமக்களும், அவர்களின் பாதுகாவலர்களாக செயற்படும் அரசியல்வாதிகளும் மௌனமாக இருந்துவிடலாம். ஆனால் பாதிப்பில் அகப்பட்டுள்ளமக்கள் தமது நிலமைகளை புரிந்துசெயற்படுவது அவசியம்.
போரிற்குப் பின்னதான அமைதிச் சூழலில் 7தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இவ் 7தேர்தல்களிலும் அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அவர்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வெறுமனேதேர்தல் கோஷங்களாக முன்வைத்ததன் விளைவுதான் இன்றையநிலை. இவை பொய்யானவை என்பதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை.
நாம் வாழும் தமிழ்ச் சூழல் இதற்குவிதிவிலக்கல்ல. கடந்த 70 வருடங்களுக்கு மேலாகதமிழ் அரசியல் குறும் தேசியவாதத்தை முன்வைத்து மக்களின் வாழ்வைச் சிதைத்துள்ளது. பிரதேசஅபிவிருத்தி, கல்வி,சுகாதாரம், வீட்டுவசதி, நிலஉடமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற அடிப்படைப் பிரச்சனைகளை அலட்சியப்படுத்திவெறுமனே தமிழ், சிங்களபிரச்சனையாக மாற்றியதன் விளைவே ஆயுதவன்முறையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள துன்பங்களாகும். இக் கொடுமை நிறைந்த அரசியல் வழிமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தின் அடிநிலைமக்களே.

2009 இற்குப் பிந்தியதமிழ் அரசியல் சூழல் அடிநிலைமக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வைத் தோற்றுவித்திருக்கிறது. தமது பலத்தினையும், பலவீனத்தினையும் உணர்த்தியுள்ளது. தம்மை ஓர் கட்டுக் கோப்பான அரசியல் சக்தியாக மாற்றுவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளனர். அதற்கான அரசியல் கோட்பாடுகளையும், மூலோபாயங்களையும் வகுத்துவருகின்றனர். இம் மாற்றங்கள் இறுதியாக நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களில் வெளிப்பட்டன. குறும் தேசியவாதத்தை முன்னெடுத்த தமிழ்த் தலைமைகள் மட்டுமல்ல, சமூகவிடுதலையாளர்;கள் எனத் தம்மை வர்ணித்த பிரமுகர்களும் பாடங்கள் கற்றனர்..

அமைதிச் சூழலில் அனைத்து தேர்தல்களையும் உள்ளடக்கியதாக நாடுதழுவி 7தேர்தல்களை எமதுமக்கள் சந்தித்துள்ளபோதும் இத்தேர்தல்களுக்கு முன்பும் அவ்வாறே பின்னரும் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், அரசியல்வாதிகளால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எல்லாமே வெறும் தேர்தல் காலகோசங்களாகவேமுடிந்துவிட்டன.

இதன் பிறகுதற்போதுள்ள சூழலில் தமதுஅன்றாடவாழ்வை எதிர்கொள்வதில் பெரும் நெருக்கடிகளை முகம் கொடுத்துவரும் அடிநிலைமக்கள் தமதுபிரச்சினைக்கு தீர்வாக ,அதிகாரத்தில் அமர்த்துவதற்காகதம் வாக்குகளை யாருக்குவழங்கினார்களோ, அத்தமிழ் தலைமைகளை நோக்கிதம் சுட்டுவிரலை நீட்டியுள்ளனர்.

இதற்கானதமதுபதில் நடவடிக்கையாக இறுதியாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழ் தேசியம் பேசும் தலைவர்களை மட்டுமன்றி விடுதலைக்கட்சிஎனக் கோரும் தலைமைகள் மீதானதம் அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளனர். வடக்குகிழக்கு தழுவி இறுதியாக நடைபெற்ற தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகளுக்கு தமது வாக்குகளை வழங்கி வெற்றிபெறச் செய்ததன் மூலம் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்குத் தீர்வாக தமக்கான ஒருபுதிய அரசியல் கலாசாரத்தின் தேவையை அதன்வழி புதியசமுகமாற்றத்திற்கான தேவையை இந்தமக்கள் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.
இது வெறுமனே குடாநாட்டுதமிழ் சூழலை நோக்கியதாக மட்டுமன்றி வடக்குமற்றும் கிழக்குமாகாணம் தழுவி முன்நிறுத்தப்பட்ட சுயேட்சை குழுக்களின் தேர்தல் வெற்றிகளின் மூலம் தமிழ் சூழலில் குறிப்பாக மத்தியதரவர்க்கத்தின் கீழணிகள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் அடிநிலை மக்களது உண்மையான அரசியல் அபிலாசைஎன்ன? என்பது கணிசமான அளவுக்கு பிந்திய தேர்தலின் மூலம் வெளிப்படுத்தப்படிருக்கிறது.

தமிழ் தேசியத்தின் பேரால் அரசியல் அதிகாரத்துக்குவருதல் என்பது கணிசமான அளவுக்கு மேற்குறிப்பிட்டமக்கள் அணிகளின் வாக்குகளே என்பதைஅம் மக்களே உணர்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. தமது வாக்குகளின் மூலமான இந்ததேர்தல் வெற்றிகளுக்காக தமக்கும் தாம் சார்ந்த மக்களும் எத்தகைய அனுகூலங்களை இதுவரைபெற்றார்கள்? கிடைத்த வாழ்க்கை முன்னேற்றம் என்ன? கிடைத்திருந்தால் அவை எவை? இல்லையேல் ஏன்? என்றவிவாதங்கள் தற்போது எழுகின்றன.
இந்தநிலமையின் தொடர்ச்சியாகத்தான் ஏற்கனவே உருவாக்கம் பெற்றிருந்த சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்தமக்களின் நலன்களை நோக்கிய செயற்பாட்டாளர்கள், சமுகவிடுதலை நோக்கிய அரசியல் ஆர்வலர்கள், நலன் விரும்பிகள் வெவ்வேறு விடுதலைக்கட்சிகள் மத்தியிலிருந்தும், தனிப்பட்டமுறையில் தம்மை அடையாளப்படுத்தும் சமூகஅக்கறையாளர்களும் சமூக ஆய்வுகளை நடத்திவருகின்றனர்.

இவ் ஆய்வுகளின் பெறுபேறா உண்மையான நேர்மையான சமூகஅக்கறையாளர்களை, அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களை இனங்காணமுடிந்ததோடு, உடனடியாக இதற்கான புதியஅமைப்பொன்றை அடையாளப்படுத்துவதற்குப் பதில் பிற்படுத்தப்பட்ட அல்லதுவள வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள பல்வேறு சமுகஅணிகள் நிறுவனங்களிலிருந்து உருவாகும் முன்னோடிகளின் கருத்துக்கள் அபிப்பிராயங்களை அறிந்து கொண்டு இந்தமக்களுக்கான சரியான அரசியல் வழிமுறைக்கான கோட்பாட்டு தளத்தை உருவாக்குவதும் அவ்வாறே அவர்களுக்கிடையே சீரான ஒருவலைப்பின்னலை உருவாக்குவதும் நடந்தேறிவருகிறது.

கூடவே, 30 ஆண்டுகால யுத்தத்துக்கு முன்னரும் அதன் பின்னரும் தமிழ் மக்களின் விடுதலைக்காக என பணியாற்றிய முன்னோடிகள் தமிழ் சூழலின் சமகால அசைவியக்கத்தை புரிந்துகொள்வதும், புலம்பெயர்வின் மறுவிளைவாக நமது தாயகச் சூழல் எதிர்கொள்ளும் சாதக, பாதகமாற்றங்கள், போர், சுனாமி, இடப்பெயர்வு போன்றவற்றின் காரணமாகசமூகத்தின் பழையகட்டமைப்புகள் சிதைந்து உதிரிநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவருவதும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தான அதாவது வர்க்கஅணிகளுக்கிடையிலான கட்டமைப்புக்கள் நெகிழ்ந்து மாற்றுஅடித்தளம் இல்லாமையால் வன்முறை, சமூகவிரோதச் செயல்களின் அதிகரிப்பு ,கோட்பாடற்ற ஜனரஞ்சக அரசியல் என்பவற்றின் விளைநிலமாக நமது சமூகம் சென்றுகொண்டிருப்பதன் ஆபத்தான போக்கையும் அவதானிக்க முடிகிறது.

அவ்வாறே மாவட்டமட்டத்தில் உற்பத்தி நிலைகள் சார்ந்து உருவாக்கம் பெற்றிருக்கும் சங்கங்கள், சமாசங்கள்,சம்மேளனங்களின் செயற்பாடுகளும் கூட குறித்த உற்பத்தி சார்ந்த சமூகஅணிகளின் மேன்நிலைவளர்ச்சிக்கான பக்கபலமாக செயற்படுவதற்குப் தில் வர்க்கநிலைப்பட்டு அரசியல் காரணங்களுக்காக உற்பத்தியாளர் அல்லது நுகர்வோர் நலன்களைப் புறக்கணிப்பதுமான முரண்பாடு உருவாகி இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

கூடவேயுத்தம் நடைபெற்ற காலங்களைவிட அமைதிச் சூழலில் தமிழ் தேசியத்தின் செயற்பாடென்பது போரில் பாதிப்பிற்குள்ளான மக்களை அவர்களின் வாழ்வு மேம்பாட்டுக்கான அபிவிருத்தி நோக்கி வழிகாட்டுவது என்பதற்குப் பதிலாக அனைத்து பிரச்சினைக்கும் காரணியாக சிங்களதேசத்தையும், சிங்கள அரசையும் சுட்டுவதன் மூலம் வெறுப்பேற்றும் அரசியலையும், அதன் மூலம் மக்களை விரக்கியின் விளிம்பிற்குள் தள்ளி அவர்களின் வாக்குகளை தமிழ் தேசியத்திற்காக வாரி வழங்க செய்வதில் நம் தமிழ் தலைவர்கள் குறியாக இருந்துவருவதையும், இதற்கு அனுசரணையாக ஊடகங்கள் செயற்படுவதும் போக்காக உள்ளது.

இப் போக்கென்பது தமிழ் சூழலில் செயற்பாட்டிலிருக்கும் பல்வேறு திணைக்களங்களின் பணிகளையும் ஒழுங்கமைத்து அதன் நன்மைகளை பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு பதிலாக குறித்த திணைக்கள தலைவர்களும், நிர்வாக அதிகாரிகளும் தமக்கான பணிகளில் அலட்சியமாக இருப்பதோடு மக்களுக்கு பொறுப்பு கூறுவதில் இருந்தும் அவர்கள் தள்ளி இருப்பதை இத் தமிழ் தலைவர்கள் கண்டும் காணாமல் இருக்கின்ற நிலைமிகவும் கவலைக்குரியது. குறிப்பாக அடிநிலைமக்களின் மேம்பாட்டுக்காக அரசினால் கிடைக்ககூடிய வளவாய்ப்புக்களைத் தட்டிக்கழிப்பது அல்லது பொருத்தமற்ற இடங்களுக்கு அவற்றை திசைதிருப்பிவிடும் ஒருபோக்கில் தமிழ் தலைவர்கள் குறியாக இருந்;து வருவதையும் காணமுடிகிறது.

மேற்கூறிய நிலமைகளைக் கவனத்திலெடுத்து சமூகஆர்வலர்கள், முன்னோடிகள் மத்தியில்; ஆழமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு தமிழ் சூழலின் சமகால அசைவியக்கத்தை, அதன் இயங்கு நிலமைகளை இன்னும் ஆழமாக புரிந்துகொள்வதன் மூலம் சமகால தமிழ் சமுகத்தின் கட்டமைப்புக்கள் நெகிழ்ந்து அது ஒரு உதிரிநிலைக்குள் சென்றுகொண்டிருப்பதன் ஆபத்தான போக்கை புரிந்துகொள்வது மிகஅவசியமானது.

நம் தேசவிடுதலைக்கான போரில் எம்மால் முன்னிலைப்படுத்தப்பட்ட தமிழ் தேசியம் என்பதுவெறும் தமிழ் இனவாதமாக, அனைத்துக்குமே சிங்களதேசத்தை எதிர்நிலைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தீர்ப்பதில் தமிழ் தலைவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பதுபோலவும், அவ்வாறேதமிழ் சமூகம் என்பது எவ்வித ஏற்றத்தாழ்வுகளோ, அக முரண்பாடுகளோ அற்ற அனைத்துதரப்பினரும் தமக்குள்ளே எந்தவேறுபாடுகளும் அற்று சமமாக நடாத்தப்படும் ஒரு சூழல் நிலவுவது போன்றதான ஒரு தோற்றப்பாட்டை காண்பிக்க தமிழ் தலைமைகள் முனைவதையும் பார்க்கும்போது மாற்றத்திற்கான வாய்ப்புகளைத் திறப்பது யார்? என்ற கேள்வியே முதன்மைபெறுகிறது.

அவ்வாறே பிரதேச உட் கட்டமைப்புகளில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பாரபட்சமான நிர்வாக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு, மிழ் அரசியல் தரப்பில் சிங்களதரப்பின் எத்தகைய பாரபட்சங்களையும் சாட்டாக கூறமுடியாது. அவ்வாறான தோற்றப்பாட்டைநம் தமிழ் தலைவர்கள் காண்பிக்க முற்படுவதை இன்னமும் காணமுடிகிறது.

அவ்வாறே தமிழ் தேசம் எதிர்கொள்ளும் அக முரண்பாட்டை மறைப்பதென்பது தமிழ் இனவாத செயற்பாட்டின் பிரதான நோக்கமென்பதையும், நமது சூழலில் ஒருபிரிவினரின் மேம்பாட்டை மேலாண்மை செலுத்தும் பிறஅணியினர் விரும்பாமல் இருக்கும் யதார்த்தத்தினை தமிழ் தேசியம் இதன் மூலம் மறைக்கமுற்படுகிறது என்பதே யதார்த்தமானது.

எந்தமக்களின் மேம்பாட்டை மலாண்மை செலுத்தும் அணியினர் விரும்பவில்லையோ, அதேமக்களின் வாக்குகளை அபகரித்துக்கொண்டு அதன் வழிகிடைக்கும் அதிகாரத்தின் பெயரால்,அதேஅடிநிலைமக்களைமேலும் கீழ் நிலைப்படுத்துவதற்காக பேசப்படும் தந்திரோபாயஅரசியலே தமிழ் தேசியமென்பதையும் நம் முன்னால் செயற்பாட்டில் இருக்கும் தமிழ் தேசியஅரசியல் நமக்குமெய்ப்பித்துகாட்டியிருக்கிறது.

இதன்வழிதமிழ் தேசியம் தன்னை தமிழ் இனவாதமாகவே நிரூபித்துகாட்டியபிறகு, இதற்குமாற்றான ஒருமுற்போக்கு அரசியல் என்பதுநாட்டின் அனைத்து இனங்களுக்கும் இடையிலுமான ஒருஉண்மையான நேர்மையானநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறையே சிறந்த ஒருமாற்றாக, உபாயமாக இருக்கமுடியும் என்பதையும், இதற்காக அனைத்து இனங்கள் மத்தியிலும் இதே ஒற்றுமையை வலியுறுத்தும் முற்போக்கான சக்திகளை அடையாளம் காண்பதன் மூலம் அனைத்து இன மக்களும் இணைந்துதேசத்தைமீண்டும் கட்டியெழுப்புவற்கான பணியேநம் முன்னால் அவசியமான கடமையாக முன்நிறுத்தப்பட்டிருக்கிறது.

இவ் வரலாற்றுத் தேவையினை உணர்ந்து, தமிழ்த் தேசியம் என்பதன் பேரால் சமூகத்தில் நடத்தப்படும் பொருளாதார ஒடுக்குமுறை, நிலஅபகரிப்பு, ளமறுப்பு என்பது பரந்தஅளவில் நடத்தப்படும் தேசியகுற்றங்கள் எனக் கருதுகிறோம். இக் குற்றங்களுக்கு உடந்தையாக அரசயந்திரங்கள் செயற்படுவதைப் பலரும் அறிவர். ஏனெனில் நாட்டில் ஊழல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையாக மாற்றம் பெற்று வருகிறது. இதனால் பலவழிகளிலும் பாதிக்கப்படும் மக்கள் வளம் மறுக்கப்பட்ட, வளம் குறைந்தமக்களே.

Share:

Author: theneeweb