கஷோகி படுகொலை விவகாரம்: 16 சவூதி அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை

செய்தியாளர் கஷோகி படுகொலை விவகாரம் தொடர்பாக, சவூதி அரேபியாவைச் சேர்ந்த 16 அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:துருக்கியிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் கஷோகி படுகொலை செய்யப்பட்டதில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 16 பேருக்குத் தடை விதிக்கப்படுகிறது.

இந்தத் தடையைத் தொடர்ந்து, அந்த 16 பேரும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவுக்கு வர முடியாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஷோகி படுகொலை தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்கெனவே 24 சவூதி அதிகாரிகளின் நுழைவு இசைவுகளை (விசா) ரத்து செய்ததோடு, 17 பேர் மீது பொருளாதாரத் தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார்.

அவர் சவூதி பட்டத்து இளவரசருக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
இந்தச் சூழலில், துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி சென்ற கஷோகி, அங்கு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலையில் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் சூழலிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுகுறித்து வெளிப்படையான கண்டனங்களைத் தெரிவிக்காதது அந்த நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், கஷோகி படுகொலை தொடர்பாக தற்போது 16 சவூதி அதிகாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb