பிரெக்ஸிட் காலக் கெடுவை நீட்டிக்கும் விவகாரம்: ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் ஆலோசனை

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான (பிரெக்ஸிட்) காலக் கெடுவை மேலும் நீட்டிப்பது குறித்து, அந்த அமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ùஸல்ஸில் புதன்கிழமை கூடி ஆலோசனை நடத்தினர்.

ஏற்கெனவே, கடந்த மாதம் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த பிரெக்ஸிட் காலக்கெடுவை ஐரோப்பிய யூனியன் அடுத்த மாதம் 22-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

எனினும், பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய உறவு குறித்து பிரிட்டனுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஏப். 12) ஏற்காவிட்டாலோ, அல்லது ஐரோப்பிய யூனியன் தேர்தலில் பங்கேற்க சம்மதிக்காவிட்டாலோ எந்தவித உடன்பாடும் இல்லாமல் யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற்றப்படும்  என்று அந்த அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.

பிரெக்ஸிட் தொடர்பான ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் 3-ஆவது முறையாக நிராகரித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
எனினும், சிறப்பு சலுகை ஒப்பந்தம் எதுவும் இல்லாமலேயே பிரெக்ஸிட் நிறைவேறினால், அது பிரிட்டன் தொழில்துறையை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில், கடைசி நேர முயற்சியாக, பிரெக்ஸிட்டுக்கான கெடுவை அடுத்த மாதம் 22-ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்கு நீட்டிக்குமாறு ஐரோப்பிய யூனியனிடம் பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து முடிவெடுப்பதற்காகவே, ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் பிரெஸ்ùஸல்ஸில் புதன்கிழமை கூடி ஆலோசனை நடத்தினர்.

Share:

Author: theneeweb