வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதியில் துர்நாற்றம்

வவுனியா பழைய பஸ் நிலையப் பகுதிகளிலுள்ள குப்பைகள் சேகரிக்கும் தொட்டிகளுக்குள் பஸ்  நிலையத்தைச் சுற்றியுள்ள உணவகங்களிலிருந்து மாமிச உணவுகளின் கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன.

இதனால் பழைய பஸ்  நிலையப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாக பஸ்  நிலையத்திலுள்ள வர்த்தகர்கள் நகரசபை உப நகர பிதா சு.குமாரசாமியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

குறிப்பாக பஸ்  நிலையத்தைச் சுற்றியுள்ள உணவகங்களிலுள்ள மாமிச கழிவுகளான மீன், இறால், கோழி, நண்டு போன்றவற்றின் கழிவுகள் அண்மைக்காலமாக பஸ் நிலையப் பகுதியிலுள்ள குப்பை தொட்டிகளில் இனந்தெரியாதவர்களால் வீசப்பட்டு வருகின்றன.

இதனால் பஸ் நிலையப்பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் துர்நாற்றம் வீசிவருகின்றது. பஸ்  நிலையப்பகுதிகளிலும் துர்நாற்றம் வீசிவருகின்றது.

இதையடுத்து இன்று காலை நகரசபை உப நகர பிதாவை நகர்ப்பகுதிக்கு வருமாறு அழைக்கப்பட்டு  நேரில் பார்வையிட்டு இந்நடவடிக்கையைக்கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பஸ்  நிலையத்திற்கு வரும் பயணிகள் வாடிக்கையாளர்கள் எனப்பலர் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் இச் செயற்பாட்டினைத் தடுத்து நிறுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

இதையடுத்து பஸ் நிலையப்பகுதிக்கு பொறுப்பாகவுள்ள துப்பரவுப்பணியாளருக்கு இப்பகுதியைத் தொடர்ந்து கண்காணித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு பல்வேறு தேவைகளின் நிமித்தம் பஸ் நிலையப்பகுதிக்கு வரும் பலர் துர்நாற்றம் காரணமாக அந்தப்பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

இதனால் வர்த்தக நிலையங்களுக்கு மக்களின் வரவு குறைந்தளவில் காணப்படுவதாகவும் பஸ்  நிலையத்திலுள்ள வர்த்தகர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb