பாலி ஆறு

–    கருணாகரன் —

பாலி ஆறு நகர்கிறது.

ஆங்காங்கே நாணல்

அடங்காமல் காற்றோடு

இரகசியம் பேசி

ஏதேதோ சலசலக்கும்.

எண்ணற்ற வகைப் பறவை

எழுப்பும் சங்கீதங்கள்.

துள்ளி விழுந்து

‘துழும்’ என்னும் வரால்மீன்கள்.

என்றாலும் அமைதியை

ஏதோ பராமரிக்கும்

அந்த வளைவை அடுத்து

கருங்கல் மறைப்பில்

அடர்ந்துள்ள நாணல் அருகே

மணற் கரையில் இரு மருங்கும்

ஓங்கி முகடு கட்டி

ஒளி வடிக்கும்

மருத மர நிழலில்

எங்கள் கிராமத்து

எழில் மிகுந்த சிறு பெண்கள்

அக்குவேறு ஆணிவேறாய்

ஊரின் புதினங்கள்

ஒவ்வொன்றாய் ஆராய்ந்து

சிரித்து

கேலி செய்து

சினந்து

வாய்ச்சண்டை யிட்டு

துவைத்து

நீராடிக் களிக்கின்றார்

ஆனாலும்

அமைதியாய்

பாலி ஆறு நகர்கிறது

………………….

………………….

(வ.ஐ.ச.ஜெயபாலன்)

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுடைய முதற்காதலி பாலியாறே. ஜெயபாலனுக்கு மட்டுமல்ல, பாலியாற்றின் தீரங்களில் நடந்தவர்களுக்கெல்லாம் பாலியாறு காதலியே.

அத்தனை அழகு பாலியாறு. அவ்வளவு குளிர்மை. மனசைக் கவ்வித் தன்னோடணைத்து வைத்திருக்கும் நெருக்கம். எந்தக் கோடையிலும் ஈரங்காயாமல் மண்ணையும் மரங்களையும் குளிர்வித்துக்கொண்டேயிருக்கும் கருணை. அந்தக் கருணையின் நிழலில் அது போகும் வழி நெடுக நிற்கும் மரங்கள் வண்ண வண்ணமாகச் சிரித்துப் பூக்கும். காட்டையும் ஆற்றையும் வாசனையாக்கும். காய்த்துக் கொட்டும். பழுத்துச் சொரியும்.

இப்படி மரங்களிருந்தால் பறவைகளைக் கேட்கவேண்டுமா? ஆயிரமாயிரம் பறவைகள் இசைத்துக்கொண்டும் கலவியில் திளைத்துக் கொண்டுமிருக்கும். மேலே பறவைக் கூட்டங்களென்றால், கீழே மானும் மரையும் முயலும் பன்றியும் உக்குளானும்… என ஆயிரமாயிரம் கானுயிர்கள். அங்கங்கே மரங்களில் திரவியமாகத் தொங்கும் தேன்கூடுகள்.

அப்பப்பா! இயற்கையை அறிந்தவருக்கும் உணர்ந்தவருக்கும் ஆற்றின் தீரங்கள் இயற்கையின் விழாக் களங்களே! அங்கே ஆடலும் பாடலுமிருக்கும். மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமிருக்கும். களிப்பும் திளைப்புமிருக்கும்.

என்பதால்தான்,

மின்மினிப் பூச்சிகளைச் சூடிய

முதுபாலை மரத்தின்

கீழிருக்கிறேன்

முன்னால்

வவுனிக்குளம்

எல்லாளன் கட்டியதென்று

சொல்கிறார்கள்.

கனகராயன் குளத்தில்

மழை பெய்தால்

வவுனிக்குளம் நிரம்புமாம்

வவுனிக்குளம் நிரம்பினால்

பாலியாறு பெருகுமாம்

பாலியாறு பெருகினால்

பாலியம்மன் உருக்கொள்வாள்

பாலியம்மன் உருக்கொண்டால்

……………………..

……………………..

என நிலாந்தன் எழுதிச் செல்கிறார்.

பாலியாறு காட்டிலே தன்பாட்டில் பித்துப் பிடித்தது போல ஓடவில்லை. ஓடிக் கடலில் சேரவில்லை. அது தனக்கென்று வரலாற்றை உருவாக்கியிருக்கிறது. அந்த வரலாற்றின் நினைவுகளைக் காலந்தோறும் இந்த மாதிரிக் கவிஞர்களைக் கொண்டு மீட்ட வைத்திருக்கிறது. அவர்கள் அதைக் காலந்தோறும் கவிதைகளாகப் பாடிக்கொண்டேயிருக்கிறார்கள்.

இது பாலியாற்றுக்கு மட்டுமான தனிச்சிறப்பென்றில்லை. எல்லா ஆறுகளுக்கும் இப்படியான வாழ்வும் வரலாறுமுண்டு. மனித நாகரீகத்தின் ஊற்றுக்கண்ணே நதிகள்தானே. நதிக்கரை நாகரீகம் என்பதெல்லாம் என்ன? ஆறுகளின் கதைகள் அல்லவா!

வன்னியின் வளம் குளமென்றால், குளங்களுக்கு ஆதாரம் ஆறுகள். வன்னியில் ஏறக்குறைய இருபது ஆறுகளுக்கு மேலுண்டு. கனகராயன் ஆறு, குடமுருட்டி ஆறு, மண்டக்கண்ணாறு, கலவரப்பாறு, நாயாறு, பேராறு, அருவியாறு, பறங்கியாறு, பாலியாறு, நெத்தலியாறு, பிரமந்தனாறு, மூங்கிலாறு, என சிறிதும் பெரிதுமாக ஓடுகின்றன.

இந்த ஆறுகள் மாரியில் நீரையும் கோடையில் மணலையும் தருகின்றன. நீரும் மணலும் செல்வமே. இந்தச் செல்வத்தைப் பக்குவமாகப் பாதுகாத்து, தேவைக்கு அளவாகப் பயன்படுத்தி வந்தனர் வன்னி மக்கள். நீரும் மணலும் மட்டுமல்ல, ஆறுகளின் தீரமெல்லாம் ஓங்கி வளர்ந்திருக்கும் மரங்களும் செல்வம்தான். வன்னியெங்கும் ஆறுகள் என்பதால் வன்னிக் காடு எப்போதும் செழித்தேயிருக்கும். காடு செழித்தால் நாடு செழிக்கும். காடு செழித்தால் மழை பொழியும். மழை பொழிந்தால் ஊர்கள் செழிக்கும். ஊர்கள் செழித்தால் நாடு செழிப்புறும்.

பலநூறு ஆண்டுகளாகப் பாய்ந்து கொண்டிருக்கும் ஆறுகளைச் சீண்டாமல், தாயும் பிள்ளையுமான உறவில் அவற்றோடு கூடி வாழ்ந்த வன்னிச் சனங்களுக்கு வந்தது சோதனை.

ஈழப்போரோடு வன்னிக் காடுகள் வேட்டைக்களங்களாகின. வன்னியின் ஆற்றுத் தீரமெங்கும் கலவரமாகியது. இந்திய அமைதிப்படை, இலங்கைப் படைகள், இயக்கங்கள் என்று ஒவ்வொரு தரப்பினாலும் காடும் ஆறுகளும் யுத்த களங்களாகின.

அதிலும் வன்னியின் இறுதிப்போர்க்காலம் என்பது ஆறுகளின் அமைதியை, அழகை, அவற்றின் வழித்தடங்களை, அவை கொண்டிருந்த நிலைபேறான செல்வங்களை எல்லாம் அழித்தன.

அங்கிருந்த முதுமரங்கள் பல வேரோடு சாய்ந்தன.

ஆற்றையும் காட்டையும் தங்கள் வாழ்வோடு கொண்டிருந்த வன்னிச் சனங்கள் சிறகுகள் அறுக்கப்பட்ட பறவைகளைப்போலானார்கள்.

ஆனாலும் என்ன செய்ய முடியும்? வெல்ல முடியாத விதியின் முன்னே கைகட்டித் தலை கவிழ்ந்து நின்றனர்.

இந்த விதி எப்போது முடியுமென்று எவருக்கும் தெரியவில்லை. யுத்தம் முடிந்த கையோடு காடுகளில் நிரம்பியது படை. அப்படியே ஆறுகளும் படைகளின் வசமாயிற்று. ஆறும் காடும் படைகளின் வசமென்றால் சனங்களிடம் என்னதான் உண்டு? வன்னியில் என்னதான் மிச்சம்?

படை கொண்ட காட்டின் செல்வமெல்லாம் களவு போகிறது. மரங்களும் மணலும் இரவு பகலாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதில் எல்லாக் கைகளுக்கும் பங்குண்டு.

கனிய வளத்திணைக்களம் தொடக்கம் மாவட்டச் செயலகங்கள், காவல்துறை, பிரதேச செயலகங்கள், வன இலாகா என்று எல்லா அதிகாரத் தரப்பும் காட்டையும் ஆற்றை தின்று முடிக்கின்றன.

அளவுக்கதிகமாக மணல் அகழப்படுகிறது. தேவைக்கதிகமான மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் ஆறும் அழிகிறது. காடும் அழிகிறது. ஆறும் காடும் இல்லையென்றால் குளங்களில்லை. குளங்களுக்குத் தண்ணீர் வராது. குளங்கள் இல்லை என்றால் வன்னி இல்லை.

ஆனால், இதைப்பற்றி யாருமே கணக்கிற் கொள்வதில்லை. கடன்பட்டு டிப்பரை, ட்ரக்ரரை எடுத்திருக்கிறேன். மண்ணை ஏற்றினால்தான் லீஸிங்கைக் கட்டலாம் என்று அழுது புலம்புகிறார்கள் பலரும்.

அதற்காக ஆற்றையும் காட்டையும் அழிக்கலாமா என்றால், பதிலுக்கு நாங்கள் என்ன செய்கிறது என்று கேட்கிறார்கள்.

ஆற்றை அழித்து வாழ்கின்ற துணிச்சல் இவர்களுக்கு எப்படி வந்தது?

இது நின்றால் பால். செத்தால் இறைச்சி என்ற தத்துவத்துக்கு நிகரானது.

ஆறில்லா ஊரின் அழகு பாழ் என்று முன்னோர் சொன்னார்கள். ஆறில்லாக் காடு பாழ் என்பது இயற்கை விதி. இயற்கையியலாளர்களின் எச்சரிக்கையும் இதுதான்.

ஆனால், இதைச் செவி கொள்ளவும் மனங்கொள்ளவும் யாருமில்லை.

வன்னி இன்று பாதுகாப்பற்ற நிலமாகி விட்டது. அதனுடைய வேர்கள் வெட்டப்படுகின்றன. அது கொள்ளையிடப்படுகிறது. அந்தக் கொள்ளையில் எல்லாக் கைகளும் இணைந்திருக்கின்றன.

இது வன்னிக்கு அபாய காலம்.

இதை உணர்ந்து எழக்கூடியவர் யார்? அவர்களுக்காக வன்னித் தாய் காத்திருக்கிறாள்.

தன்னுடைய வனப்பையெல்லாம் காவு கொள்ளக் கொடுத்த துயரில் அவள் அழுது புலம்புகிறாள்.

தன் புதல்வரையும் புதல்வியரையும் அவள் தேடுகிறாள்.

எங்கே அவர்? எங்கே அவர்? எங்கே அவர்கள்?

Share:

Author: theneeweb