தவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி

அமீர் அலி —

 

திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால் தங்களது இஸ்லாமிய மத உணர்வின் மதிப்பு குறைந்துவிட்டதாக உணர்ந்தார்கள் அதனால் கறுப்புநிற அபயாவுக்கு மாறுவதன் மூலம் தங்கள் பக்தியினை மீட்டெடுக்க முடிவு செய்தார்கள். இந்த அபயா சமீபத்தில் பின்பற்றப்பட்டுவரும் அரபுக் கலாச்சார உடை மற்றும் சந்தேகமின்றி பெரும்பாலான முஸ்லிம் உலக நாடுகளில் பரவி வரும் ஒரு உடை. இந்த ஆடை பரவுவதற்கும் மற்றும் ஒரு மத சித்தாந்தம் அதை ஆதரிப்பதற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதில் சந்தேகமே இல்லை. எனினும் பாடசாலை அதிகாரிகள் அவர்களது பாடசாலை ஒரு அரசாங்கப் பாடசாலை என்கிற உண்மையை மறந்து, அந்த ஆசிரியைகளுக்கு அவர்கள் பாடசாலையின் பாரம்பரிய ஒழுங்கை மீறுவாக நினைவூட்டீ ஒன்றில் அவர்கள் மீண்டும் சேலைக்குத் திரும்பவேண்டும் அல்லது பாடசாலையை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அது ஒரு தனியார் பாடசாலையாக இருந்திருப்பின் அந்த அதிகாரிகளுக்கு அது ஒரு வலிமையான வெற்றியாக இருந்திருக்கும். இந்தச் சம்பவம் எதிர்பார்த்தபடி அது தொடர்பான மத சித்தாந்தத்துடன் கலந்திருப்பதனால் முஸ்லிம் சமூகத்தினரின் ஒரு பிரிவினரிடம் இருந்து பொதுமக்கள் எதிர்ப்பு தோன்றுவதற்கு வழிவகுத்தது.. முடிவில் அந்த ஆசிரியைகள் தங்கள் வழக்கை ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழவின் முன்னால் கொண்டு சென்று தங்களுக்குச் சாதகமான தீர்ப்பை வெற்றி கொண்டார்கள். வாழ்த்துக்கள்!

ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்தையும் அதன் கல்வி நிறுவனங்களையும் கலாச்சார மற்றும் மத பன்முகத்தன்மைக்கான சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்ற போதிலும், ஒரு துண்டு ஆடைக்காகப் பெற்ற வெற்றி ஏராளமான வேறு பிரச்சினைகளை எழுப்பப் போகிறது, அது பன்முகத்தன்மையுள்ள ஸ்ரீலங்காவில் மதங்களுக்கு இடையிலும் மற்றும் இனங்களுக்கு இடையிலும் தொடர்ந்து நிலமையை மோசமாக்கப் போகிறது.

ஒரு ஆடையைப் பற்றிய கேள்விக்கு அதை ஏற்றுக்கொள்ளல் அல்லது பொருந்தக்கூடியது என்பதைத் தீர்மானிக்கும் அதன் அடிப்படை அல்லது முதன்மை அளவுகோல் அந்த ஆடை அணியப்படும் இடத்தின் காலநிலையாகும். ஸ்ரீலங்காவானது சூடான மற்றும் ஈரப்பதமான ஒரு நாடாகும், இங்கு ஒருவர் அணியும் ஆடை காற்று ஊடுருவிச்சென்று உடலைக் குளிராக வைத்திருக்கும் விதத்தில் தளர்வாக இருக்கவேண்டும் அதேவேளை அதை அணிபவர் வாழும் இடத்தின் கலாச்சார விழுமியங்களையும் தகமைகளையும் பேணும் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும். சூடானதும் மற்றும்; ஈரப்பதம் உள்ளதுமான காலநிலைக்கு கறுப்பு அல்லது மென்மையான நிற உடைகள் பொருத்தம் உள்ளனவா என்பதைப்பற்றி பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் லேசான நிறங்களில் மிதக்கும் தன்மையான, காற்றோட்டமான, மெல்லிய துணிகள் சூரிய வெப்பம் எமது சருமத்தில் தாக்குவதைத் தடுத்து அவற்றை வெளியே தெறிக்கச் செய்கின்றன. கறுப்பு நிறத்தை ஏற்றுக்கொண்டால் கூட தலையை மூடி இறுக்கமாகப் பொருத்தப்பட்டுள்ள அபயா போன்றவை ஈரப்பதம் அதிகமாக உள்ள நாட்களில் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும். அது உண்டாக்கும் வியர்வை சுகாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். மாறாக சேலையானது இத்தகைய சங்கடமான நிலமைகளை முற்றாகத் தவிர்க்கும். அதனால்தான் சேலை இந்திய உபகண்டம் மற்றும் ஸ்ரீலங்கா என்பனவற்றில் சுதேச உடையாக மாறியுள்ளது. விஞ்ஞ}னிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அகில இலங்கை ஜமாயத்துல்லா என்பன இதைப்பற்றி இறுதியான ஒரு முடிவுக்கு வரட்டும்.

இரண்டாவது பிரச்சினை அபயா தொடர்பான மத உணர்வு. இது இஸ்லாமியம் தானாகவே சேலை அணிந்தவர்கள் குறைவான இஸ்லாமிய உணர்வு கொண்டவர்கள் என குறைத்து மதிப்பிடுவதைப் போன்ற தோற்றத்தை தருகிறது. இதன் கருத்து உயிரோடிருப்பவர்கள் மற்றும் இறந்தவர்கள் என்கிற பேதமில்லாமல் மில்லியன் கணக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் பெண்களை குறையுள்ள இஸ்லாமியர்கள் இல்லாவிட்டால் முஸ்லிம் அல்லாதவர்கள் எனக் கண்டிப்பதாகும். இந்த இஸ்லாமிய வாதங்கள் அபத்தமான ஒரு முடிவுக்கு இழுத்துச் செல்கின்றன.

மூன்றாவதாக ஒருவர் அடிப்படை இஸ்லாமியக் கோட்பாடுகளின் வழியில் சென்றால் கூட இஸ்லாமிய நீதி பரிபாலனத்தின்கீழ் நியாயப்படுத்தவேண்டிய வேறு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. ஒன்று ‘தரூரத்’ அல்லது அவசியம் மற்றது ‘மாஸ்லாஹா’ அல்லது நலன்புரி ஆகும். ஒரு பெண் பக்தியுள்ள முஸ்லிமாக இருப்பதற்கு அபயா ஒரு அவசியமான ஆடையா? இந்தக் கேள்விக்கு முரண்பாடானது ஒரு துணி முஸ்லீமை உருவாக்குகிறதா? என்பதாகும். இந்தக் கேள்விகளுக்கு உடன்பாடான பதிலை வழங்கினால் அது இஸ்லாத்தின் மீதான முழு நம்பிக்கையையும் குறைத்துவிடும். இரண்டாவது நிபந்தனை முதலாவதைவிட மிகவும் முக்கியமானதாகும், விசேடமாக ஸ்ரீலங்காவைப் போன்ற ஒரு பல்லின பல்மத பல்கலாச்சார சமூகத்தில். அபயா பொது நலன்புரியை அதிகரிக்கிறதா அல்லது தொந்தரவு செய்கிறதா? இந்தச் சூழலில் நலன்புரி எனக்குறிப்பிடப்படுவது, பொது சமாதானம், கலாச்சார ஏற்றுக்கொள்ளல் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு என்பனவற்றையே. சுருக்கமாகச் சொல்வதானால், இந்த ஆடையை ஊக்குவிப்பவர்கள் மற்றும் ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் முன் இந்த வழக்கை கொண்டு சென்ற ஆசிரியைகள் ஆகியோர் பொதுமக்கள் கருத்து என்கிற நீதிமன்றத்தின் தீர்ப்பினைக் கவனிக்க வேண்டாமா? இந்த நீதிமன்றம் ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணையக நீதிமன்றத்தைவிட மிக முக்கியமானது, இஸ்லாத்தில் இருந்து ஃபிக் சட்டங்களைப் பெறும்போது, இஜிமா அல்லது பொதுமக்கள் கருத்து ஒரு ஆதாரமாக உள்ளது. இந்த இஜிமா முஸ்லிம்களின் கருத்தை மட்டும் உள்ளடக்கியதா அல்லது முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் அல்லாத ஒரு சமூகத்தினரின் கருத்தை உள்ளடக்கியதா? எந்த ஒரு ஆடையும் பெரும்பான்மையினரின் பார்வைக்கு விரோதமாகத் தோன்றினால், அதை அணிந்திருப்பவரை அதிக அளவில் தனிமைப்படுத்தி வைக்கும்.

Ameer Ali

எல்லாவற்றுக்கும் மேலாக மனித உரிமைகள் அடிப்படையில் அபயாவுக்கான போராட்டத்தில் பாசாங்குத்தனமான ஒரு உறுப்பு காணப்படுகிறது. அது இரண்டு வழிகளையும் வெட்டலாம். அந்த ஆடையை அணிவது மனித உரிமைகள் என்றால், ஒரு முஸ்லிம் பெண் அதை விடுத்து வித்தியாசமான வேறு ஒரு ஆடையை அணிய விரும்புவதையும் அதேயளவு சமமான மனித உரிமைகள் எனக்கருதலாம். இந்தச் சுதந்திரம் பல அரபு நாடுகளில் மறுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவில் நிலவும் ஜனநாயக நெறிமுறைகள் அந்த ஆசிரியைகள் அதற்காகப் போராடி அவர்களின் மனித உரிமைகளை வெற்றி கொள்ள அனுமதிக்கிறது. இந்த ஹீரோ மற்றும் ஹரோயினிகளுக்குத் துணிச்சல் இருக்குமானால், மனித உரிமைகளுக்காக போராடுவதற்கான அர்ப்பணிப்பு இருக்குமானால் கொழும்பில் உள்ள அத்தகைய அரபு நாடுகளின் தூதரகங்களுக்கு முன்னால் மத்திய கிழக்கில் உள்ள அவர்களது சகோதரிகளுக்கும் இந்த உரிமைகள் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துஆhப்பாட்டம் நடத்த முடியுமா?

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Share:

Author: theneeweb