பிரெக்ஸிட் காலக்கெடு அக். 31 வரை நீட்டிப்பு

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான (பிரெக்ஸிட்) காலக்கெடு, வரும் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ùஸல்ஸில் புதன்கிழமை கூடி ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

பிரெக்ஸிட்டுக்கான இறுதிக் கெடுவை வரும் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை ஐரோப்பிய யூனியன் நீட்டித்துள்ளது.

முக்கியமாக, பிரெக்ஸிட் தொடர்பான ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டால் இந்த நீட்டிப்பை ரத்து செய்யவும் அந்த அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.
எனவே, அந்த ஒப்பந்தத்துக்கு கூடிய விரைவில் ஒப்புதல் வழங்குமாறு சக எம்.பி.க்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கு நாம் அவகாசம் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது பலருக்கும் ஏமாற்றத்தை தந்திருக்கும்.

உண்மையில், நாம் அந்த அமைப்பிலிருந்து இந்நேரம் வெளியேறியிருக்க வேண்டும். அதற்கு வசதியாக, பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதா நாடாளுன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், அதற்கு எம்.பி.க்களை சம்மதிக்க வைக்க இயலாமல் போனதற்காக மிகவும் வருந்துகிறேன்.

தற்போது ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரச்னைகள் இல்லாமல் நாம் பிரிந்து செல்வதற்கு, நமக்கு மிகச் சொற்பமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான கால அட்டவணையும் தெளிவாக அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரசா மே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிரெக்ஸிட் விவகாரத்தில் இழுபறி நீடித்து வருவதால் பிரதமர் தெரசா மே பதவி விலக வேண்டும் எனவும், அவருக்குப் பதிலாக புதிய பிரதமர் பதவியேற்று பிரெக்ஸிட் நடவடிக்கைகளைக் கையாள வேண்டும் எனவும் விடுக்கப்பட்டு வந்த கோரிக்கைகள், இந்த காலக்கெடு நீட்டிப்புக்குப் பிறகு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை ஏற்பதில் எம்.பி.க்களிடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், பிரெக்ஸிட்டுக்கான இறுதிக் கெடுவை அடுத்த மாதம் 22-ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்கு நீட்டிக்குமாறு ஐரோப்பிய யூனியனிடம் பிரிட்டன் அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், பிரிட்டன் எதிர்பார்த்ததைவிட அதிகமாக அக். 31 வரை பிரெக்ஸிட் காலக்கெடுவை தற்போது ஐரோப்பிய யூனியன் நீட்டித்துள்ளது.

இது, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய யூனியன் தேர்தலில் பிரிட்டனை பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எனினும், அந்தத் தேர்தலில் பிரிட்டன் பங்கேற்றால் அது பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக 2016-ஆம் ஆண்டு பொதுவாக்கெடுப்பில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு விரோதமானதாக இருக்கும் என்று பிரிட்டன் கட்சிகள் கருதுகின்றன.

இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன்-கிளாட் ஜங்கர் கூறுகையில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய யூனியன் தேர்தலில் பிரிட்டன் பங்கேற்கலாம். இது விநோதமாகத் தோன்றினாலும், ஐரோப்பியச் சட்டங்களும், விதிமுறைகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக பிரிட்டன் அந்தத் தேர்தலில் பங்கேற்க வேண்டியுள்ளது என்றார்.
தற்போது ஐரோப்பிய யூனியனிலிருந்து சலுகை ஒப்பந்தங்களுடன் பிரிவதோ, அல்லது எந்த ஒப்பந்தமும் இல்லாமல் வெளியேற்றப்படுவதோ பிரிட்டனின் கைகளில்தான் உள்ளது ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில், பிரெக்ஸிட்டுப் பிறகும் பிரிட்டனுக்குச் சொந்தமான வடக்கு அயர்லாந்து மற்றும் அயர்லாந்து நாட்டுக்கு இடையே வர்த்தக எல்லை வகுக்கப்படாததற்கு, பெரும்பாலான எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த ஒப்பந்தத்தால் பிரிட்டனின் ஒருமைப்பாடு குலைக்கப்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த ஒப்பந்தத்தை, பிரிட்டன் நாடாளுமன்றம் கடந்த மாதம் மூன்றாவது முறையாக நிராகரித்தது.

அந்த ஒப்பந்தத்தை வெள்ளிக்கிழமைக்குள் (ஏப். 12) பிரிட்டன் எம்.பி.க்கள் ஏற்காவிட்டால் சிறப்பு ஒப்பந்தம் இல்லாமலேயே பிரிட்டன் வெளியேற்றப்படும் என்று ஐரோப்பிய யூனியன் கூறியிருந்தது.

அத்தகைய ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் நடைபெற்றால், அது பிரிட்டன் தொழில்துறையை கடுமையாக பாதிக்கும் என்ற சூழலில், தற்போது பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடு 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் கண்டனம்
பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டனிடம் ஐரோப்பிய யூனியன் மிகக் கடுமையாக நடந்துகொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரிட்டனிடமும், பிரெக்ஸிட் விவகாரத்திலும் ஐரோப்பிய யூனியன் இவ்வளவு கடுமையாக நடந்துகொள்வது மிகவும் தவறு என்று குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb