கல்முனை வடக்கு (தமிழ்) உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தல்

குறித்து அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தின் முன்னாள் மாவட்ட இணைப்பாளர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் அவர்களுடனான நேர்காணல்.

நேர்கண்டவர் : பாக்கியராசா மோகனதாஸ்

கேள்வி :
இன்று கல்முனை வடக்கு (தமிழ்) உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விடயம் முக்கியமான பேசுபொருளாக உள்ளது. அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கம் இது விடயமாகக் கடந்த காலத்தில் பாரிய பங்களிப்புச் செய்துள்ளது என அறியக்கிடக்கிறது. இ;க் கோரிக்கை குறித்த பின்னணியைக் கூற முடியுமா?

பதில் :
முன்னர் அமுலிலிருந்த நிர்வாக அலகுகளான பிரிவுக் காரியாதிகாரி (னு.சு.ழு’ள னுiஎளைழைளெ) முறைமைக்குப் பதிலாக உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் அறிமுகம் செய்யப் பெற்ற போது முழுக்கல்முனைத் தேர்தல் தொகுதியும் ‘கரவாகுப்பற்று (கல்முனை) உதவி அரசாஙக்க அதிபர் பிரிவு’ எனும் பெயரில் ஓர் ஒற்றை நிர்வாக அலகாக உருவாக்கப்பெற்றது. இதன் கீழ் சாய்ந்தமருது, கல்முனைக்குடி, கல்முனை, பாண்டிருப்பு, மணற்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, கிட்டங்கி, மருதமுனை, பெரியநீலாவணை ஆகிய தமிழ் – முஸ்லீம் கிராமங்கள் யாவும் இருந்தன. இந்த ஒற்றை உதவி அரசாங்க அதிபர் பிரிவின் உருவாக்கத்தின் ஆரம்பத்திலிருந்தே இதனைக் கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோவில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு இரண்டாகப் பிரித்து இதன் தென்பகுதியை அதாவது சாய்ந்தமருது மற்றும் கல்முனைக்குடி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதியை முஸ்லிம் பெரும்பான்மை நூறுவீதம் முஸ்லிம்களைக் கொண்டது – உதவி அரசாங்க அதிபர் பிரிவாகவும்@ இதன் வடபகுதியை அதாவது கல்முனை, பாண்டிருப்பு, மணற்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, கிட்டங்கி, மருதமுனை, பெரியநீலாவனை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதியைத் தமிழ்ப் பெரும்பான்மை –தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களவர்களை உள்ளடக்கியது – உதவி அரசாங்க அதிபர் பிரிவாகவும் இரு தனித்தனி நிர்வாக அலகுகளாக ஏற்படுத்தித் தரும்படி அவ்வப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களிடமும், அரசாங்க உயர் அதிகாரிகளிடமும் தமிழர்தம் அரசியல் தலைமையான தமிழர்விடுதலைக்கூட்டணியிடமும் பின்னாளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் கடந்த முப்பது வருடகாலமாகக் கல்முனைப் பிரதேசத் தமிழர்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இக்கோரிக்கையின் நீட்சியே தற்போதைய தரமுயர்த்தல் கோரிக்கை.

 

கேள்வி :
கல்முனை வடக்கு (தமிழ்) உபபிரதேச செயலகமாக இயங்கி வருகிறதே. அது எவ்வாறு?

 

பதில் :
1988 இன் இறுதிப்பகுதியில் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த அமரர்.ரஞ்சன் விஜயரட்ண மூலம் முன்னாள் அண்னமலை – நாவிதன்வெளிக் கிராம சபைத் தலைவர் சின்னத்துரை தலைமையிலான அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கம் எடுத்துக் கொண்ட முயற்சியின் பலனாகவும் முன்னார் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அமரர் கே.டபிள்யு தேவ நாயகம் மற்றும் பொத்துவில் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.ரங்கநாயகி பத்;மநாதன் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவும் 1989 பொதுத் தேர்தலை அடுத்து கல்முனைப் பிரதேசத் தமிழ்மக்கள் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தின் முன்னாள் தலைவர் அமரர் கவிஞர் பாண்டியூரன் தலைமையில் மேற்கொண்ட சாத்வீகப் போராட்டத்தின் அழுத்தம் காரணமாகவும் கல்முனை வடக்கு (தமிழ்) பிரிவு 12.04.1989 அன்று ஓர் உப அலுவலகமாகத் திறந்து வைக்கப்பெற்றது. இது உண்மையில் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையே. பெயரளவிலான இவ்வலுவலகம் கல்முனைப் பிரதேசத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தாத காரணத்தால் தங்களது கோரிக்கையை வலியுறுத்தித் தொடர்ந்து குரல் கொடுத்தவாறே உள்ளனர். அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கம் இதில் பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. அதன் பயனாகப் பின்னாளில் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் பிரதேச செயலகங்களாகப் பெயர்மாற்றம் செய்யப்பெற்றுத் தரமுயர்த்தப் பெற்ற போது நாடளாவிய ரீதியிவே இவ்வாறான இருபத்தியெட்டு உப அலுவலகங்கள் பிரதேச செயலகங்களாகத் தரமுயர்த்தப்பெற்றன. இவை 28.07.1993 அமைச்சரவைத் தீர்மானத்தின்படி தரமுயர்த்தப்பெற்றன. இவ்வாறு தரமுயர்த்தப்பெற்ற இருபத்தியெட்டு உப அலுவலகங்களுள் அதாவது புதிதாக உருவான இருபத்தியெட்டு பிரதேச செயலகப் பிரிவுகளுள் கல்முனை தமிழ்ப் பிரிவும் அடங்கும். ஆனால் ஏனைய இருபத்தியேழு பிரதேச செயலகப் பிரிவுகளும் – இவற்றுள் இன்று தனியான பிரதேச செயலகங்களாக இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒட்டிசுட்டான் (வடக்கு மாகாணம்), காரைதீவு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் (ஈச்சிலம்பத்து) மற்றும் கந்தளாய் ஆகியனவும் அடங்கும் – அமுலாக்கம் பெற்ற போதும் கல்முனைத் தமிழ்ப்பிரிவு மட்டும் புறந்தள்ளப்பட்டது. இதன் காரணமாகவே கல்முனை வடக்கு (தமிழ்) பிரிவானது எல்லைகள் வரையறுக்கப்பெற்று வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பெறாமலும் முழுமையான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் பெறாமலும் வெறுமனே உப செயலகமாக இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது.

 

கேள்வி :
கல்முனை வடக்கு (தமிழ்) பிரிவு இவ்வாறு புறந்தள்ளப்படக் காரணம் என்ன?

 

பதில் :
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் விருப்பமின்மையும் அதனால் அவர் மேற்கொண்ட அரசியல் தலையீடுமே காரணம.;

கேள்வி :
அப்போதைய தமிழர்களுடைய அரசியல் தலைமையான தமிழர் விடுதலைக்கூட்டணி இதில் தலையிடவில்லையா?

பதில் :
தமிழ்மக்களுடைய அடிமட்டப் பிரச்சினைகளுக்கோ – அடிப்படைச் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கோ – அபிவிருத்தி சம்பந்தமான பிரச்சினைகளுக்கோ தீர்வு காண்பதில் தமிழர்தம் அரசியல் தலைமையானது தமிழரசுக்கட்சிக் காலத்திலிருந்து இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காலம்வரை கடந்த எழுவது வருடகாலமாக ஒரு வல்லமையற்ற – வினைத்திறனற்றதாகவே இருந்துவருகிறது. மட்டுமல்லாமல் யாழ்மேலாதிக்க மேட்டுக்குடி அரசியல் குணாம்சம் காரணமாக தமிழர்தம் அரசியல் தலைமைகள் அது தமிழரசுக்கட்சியாக இருந்தாலும் சரிதான் பின்புவந்த தமிழர் விடுதலைக் கூட்டணி என்றாலும் சரிதான் தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றாலும் சரிதான் – இவைகள் எல்லாமே ஓரே குட்டையில் ஊறின மட்டைகள்தான் – தங்கள் தங்கள் கட்சி அரசியல் நலன்களுக்காகவும் – அக்கட்சியிலுள்ள தனிநபர்களின் நலன்களுக்காகவும் – தாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் பாராளுமன்ற அரசியல் நலன்களுக்காகவும் முஸ்லீம் அரசியல்வாதிகளின் முகம் கோணாமல் நடக்க முற்படுகிறார்களே தவிர கிழக்கு மாகாணத் தமிழர்களின் குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்களின் அடிப்படை நலன்களின் மீது ஆத்மார்த்தமான அக்கறையோ – அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளோ – உறுதிப்பாடோ அவர்களிடம் கிடையாது. இதுதான் இன்றுவரை அதாவது கடந்து எழுபது வருடங்களாகக் கிழக்கு மாகாணத் தமிழர்களின் தலைவிதியாக உள்ளது.

 

கேள்வி :
கல்முனைப் பிரதேச செயலகம் குறித்த பிரச்சினையில் முஸ்லீம், தமிழ் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்படாத வகையில் தீர்வை எட்டவே முயற்சிக்கின்றோம். இந்த விடயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ_டன் பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமாக தீர்வு காணத் தயாராக இருக்கின்றோம் என அண்மையில் மாவை சேனாதிராசா பாராளுமன்றத்தில் பேசியுள்ளாரே?

 

பதில் :
‘பழைய குருடி கதவைத் திறடி’ என்கின்ற கதைதான் இது. அவர் ‘வாய்ப்பந்தல்’ போடுவதில் மிகவும் வல்லவர். மேலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ_ம் பேசி இப்பிரச்சினை தீர்க்கப்படப்போவதில்லை. தமிழிலே ஒரு சொற்றொடர் உள்ளது. முள்ளுப் போய் சேலையில் குத்தினாலும் சரிதான் அல்லது சேலைபோய் முள்ளிலே விழுந்தாலும் சரிதான் பாதிப்பு சேலைக்குத்தான். இது விடயத்தில் தமிழர்தரப்பு (கல்முனைப்பிரதேசத் தமிழர்கள்) ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸிடமும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிடமும் ஏமாந்து விடாமல் மிகவும் விழிப்பாகவும் அறிவுபூர்வமாகவும் நுட்பமாகவும் செயலாற்றுவது அவசியம்.

 

கேள்வி :
அண்மையில் கிழக்கு இலங்கை அரபுக்கல்லூரியின் 9 வது பட்டமளிப்புவிழா அட்டாளைச்சேனையில் நடைபெற்ற பின்னர் செய்தியாளர்களுக்குப் பதிலளிக்கும் போது றவூப் ஹகீம் அவர்கள் எல்லைமீள் நிர்ணயம் செய்யப்பட்ட பின் நிலத் தொடர்பு அடிப்படையில் மாத்திரமே கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் எனக் கூறியுள்ளாரே?

பதில் :
இச் செய்தியை நானும் வீரகேசரியில் படித்தேன். இச் செய்தியின் உள்ளடக்கம் கல்முனைப் பிரதேசத் தமிழர்களைப் பொறுத்தவரை ‘இனிப்புத்தடவிய பாகற்காய்’ போன்றது ஆகும். உண்மையில் அவரது இக்கூற்று இப்பிரச்சினையை மேலும் இழுத்தடிப்பதற்கான – இப்பிரச்சினைக்கு இப்போது வயது 30 – அல்லது இப்பிரச்சினையைக் கல்முனைத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் அபிலாஷைகளுக்குப் பாதகமுறையில் தீர்த்து வைப்பதற்கான தந்திரோபாயமாகத்தான் இருக்கிறது என்றுதான் இதுவிடயமாகச் சுமார் 30 வருட காலம் ஈடுபாட்டுடன் செயற்பட்டவன் என்ற முறையில் நான் சந்தேகிக்கின்றேன்.

கேள்வி :
இதனைச் சற்று விளக்கிக் கூறுவீர்களா?

பதில் :
றவூப் ஹகீம் அவர்கள் கூறுவதுபோல இதுவிடயத்தில் நிலத்தொடர்பின்மைப் பிரச்சினையோ – எல்லை மீள் நிர்ணயச் செயற்பாட்டுப் பிரச்சினையோ இல்லை. தற்போதுள்ள முழுக்கல்முனைப் பிரதேச செயலகப்; பிரிவையும் கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியைப்பிரிக்கும் எல்லையாகக் கொண்டு அதன் வடபகுதியைத் தமிழ்ப் பெரும்பாண்மை நிர்வாக அலகாக அதாவது பிரதேச செலயகப் பிரிவாக ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே கடந்த முப்பது வருடகாலமாகத் தமிழரின் கோரிக்கையாகும். உத்தேச கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகப்பிரிவின் எல்லைகள் பின்வருமாறு தெளிவாகவும் நிலத்தொடர்புள்ளதாகவும் வரையறுக்கப் பெற்றுள்ளன.
வடக்கு : மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்எல்லை (பெரிய நீலாவணைக்
கிராமம் வரை)
தெற்கு : கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோயில் வீதி
கிழக்கு : வங்காள விரிகுடாக்கடல்
மேற்கு : கிட்டங்கி வாவி
ஆக இப்போது தேவைப்படுவது இந்த எல்லைகளுடன் வர்த்தமானி அறிவித்தலைச் செய்து 28.07.1993 அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது மட்டுமே. இது புதிதான கோரிக்கை அல்ல. 28.07.1993 அமைச்சரவைத் தீர்மானத்தை இவ்வளவு காலமும் நடை முறைப்படுத்தாமல் விட்டது அரச இயந்திரத்தின் தவறாகும். அதில் பாராமுகமாக இருந்தது தமிழர்தம் அரசியல் தலைமைகளின் அக்கறையின்மை ஆகும்.

 

கேள்வி :
நீங்கள் குறிப்பிட்ட எல்லைகளால் வரையறுக்கப்பெற்ற நிலப்பரப்புக்குள் கல்முனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு வாழ் முஸ்லீம்களும் மருதமுனை முஸ்லீம் கிராமமும் உள்ளடங்குகிறதே?

பதில் :
தமிழ்ப் பெரும்பான்மை நிர்வாக அலகு எனும் போது அது நூறு வீதம் தமிழர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதியோ தேவையோ இல்லை. அது போல் முஸ்லீம்பெரும்பான்மை நிர்வாக அலகு எனும் போது அது நூறுவீதம் முஸ்லீம்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதியோ தேவையோ இல்லை.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்பெரும்பான்மைப் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின்கீழ் வட்டிவெளி, குண்டுமடு, தாமரைக்குளம், இன்ஸ்பெக்ரர் ஏத்தம், ஊறணிஇகனகர் கிராமம், கோமாரி, சங்கமன்கண்டி ஆகிய தமிழ்க் கிராமங்கள் உள்ளடக்கியுள்ளன.
அதேபோல் அட்டாளைச்சேனை முஸ்லீம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் திராய்க்கேணி எனும் தமிழ்க் கிராமம் உள்ளது. நிந்தவூர் முஸ்லீம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் அட்டப்பள்ளம் எனும் பழந்தமிழ்க் கிராமம் அடங்கியுள்ளது. மறுதலையாக காரைதீவு தமிழ்ப் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் மாவடிப்பள்ளி எனும் முஸ்லீம் கிராமம் உள்ளது. அதேபோல் நாவிதன்வெளி தமிழ்ப் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் கணிசமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். சம்மாந்துறை முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வீரமுனை, மல்வத்தை, மல்லிகைத்தீவு, கணபதிநகர், புதுநகர், வளத்தாப்பிட்டி போன்ற தமிழ்க்கிராமங்கள் அடங்கியுள்ளன. எனவே உத்தேச கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகப் பிரிவின்கீழ் கல்முனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு வாழ் முஸ்லீம்களும் மருதமுனை முஸ்லீம் கிராமமும் உள்ளடங்குவது தவறற்றதும் தவிர்ககமுடியாததும் ஆகும். இங்கு இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டியுள்ளது. உத்தேச கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகப் பிரிவின் உருவாக்கம் கிடப்பிலே போடப்பட்டிருந்த கடந்த 30 வருட காலத்தில் முஸ்லீம் பெரும்பான்மைக் கல்முனைப் (கரவாகுப்பற்று) பிரதேச செயலகப்பிரிவிலிருந்து பிரிந்தெடுக்கப்பெற்றுத்தான் இன்னுமொரு தனியான நூறுவீதம் முஸ்லீம்களைக் கொண்ட சாய்ந்தமருதுப் பிரதேச செயலகப்பிரிவு உருவாக்கப்பெற்றது.

இதேபோல்தான் முஸ்லீம் பெரும்பான்மைச் சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவிலிருந்துதானே இறக்காமம் முஸ்லீம்பெரும்பான்மைப் பிரதேசசெயலகப் பிரிவும் – இதன்கீழ் மாணிக்கமடு எனும் தமிழ்க் கிராமமும் அடங்கும் – பின்னர் 2001 இல் நாவிதன்வெளித் தமிழ் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவும் உருவாக்கப்பெற்றன. மேலும், நாவிதன்வெளித் தமிழ்ப் பெரும்பான்மை பிரதேச செயலகப்பிரிவு உருவாக்கப்பெறும்வரை அப்பிரதேசம் முழுவதும் முஸ்லீம் பெரும்பான்மைச் சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் ஆளுகையின் கீழேதானே இருந்தது.
ஆகவே மேற்கூறப்பெற்ற பின்புலத்தில் சாய்ந்தமருதுப் பிரதேச செயலகப்பிரிவும், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவும்,நாவிதன்வெளிப்பிரதேச செயலகப் பிரிவும் பின்னாளில் ஏற்படுத்தப்பெற்றமை நியாயம் எனில் முப்பது வருடங்களுக்கு முந்திய கோரிக்கையான உத்தேச கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகத்தின் உருவாக்கமும் அதே அடிப்படையில் நியாயம்தானே.  எனவே கல்முனைப் பிரதேசத் தமிழர்களின் இந்நீண்டகாலக் கோரிக்கையானது அவர்களது சமூக பொருளாதார அரசியல் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதை முஸ்லீம் அரசியல்வாதிகள் உணராவிட்டாலும் முஸ்லீம் சமுதாயம் உணர வேண்டும்.

கேள்வி :
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ_ம் பேசுவதால் கல்முனைப் பிரதேசத் தமிழர்களைத் திருப்திப்படுத்தக்கூடிய தீர்வு எட்டப்படமாட்டாது எனக் கூறுகிறீர்கள். அப்படியானால் மாற்றுவழி என்ன?

பதில் :
இந்த இரண்டு கட்சிகளினதும் பிரச்சினை வேறு. மக்களினுடைய பிரச்சினை வேறு.கட்சி அரசியலுக்கு அப்பால் அல்லது தேர்தல்மைய ‘வாக்குப்பெட்டி’ அரசியலுக்கு அப்பால் கல்முனைப் பிரதேசத் தமிழர்களும் இதில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட கிழக்கு மாகாணத்தின் ஏனைய தமிழர்களும் கூடிக் கலந்துரையாடி – அதில் தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மற்றும் தேசியக் கட்சிகளில் அங்கம் வகிக்கின்ற தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கு கொள்ளலாம் – ஒரு பொருத்தமானமக்கள்பொறிமுறையொன்றை (நடவடிக்கைக் குழுவொன்றை) ஏற்படுத்தி முறையான வியூகத்தை வகுத்துக் கொண்டு இக்கோரிக்கையைக் காலந்தாழ்த்தியாவது வென்றெடுக்கக்கூடியதான களவேலைகளை மேலும் காலம் தாழ்த்தாமல் முன்னெடுக்க வேண்டும். ஏற்கெனவே இது விடயமாகக் கடந்து 30 ஆண்டுகளாகப் பாரிய பங்களிப்புச் செய்த அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தின் சமகால நிர்வாகம் தமது உறங்கு நிலையிருந்து விடுபட்டு விழித்தெழுந்து பொறுப்பேற்க முன்வரவேண்டும். இது ஒன்றுதான் எனக்குப் படுகின்ற மாற்றுவழியாகும். இதனை விடுத்து கல்முனைப் பிரதேசத்தமிழர்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பபு – ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு வரும் என்று நம்பியிருப்பார்களாயின் அது பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கைப் பிடித்த கதையாகத்தான் இறுதியில் முடியும். இது எவர் மீதுமான குற்றச் சாட்டல்ல. 1977 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஓர் அரசியல் செயற்பாட்டாளனாக இருந்துவரும் எனது 40 வருடகால அனுபவம் எனக்குக் கற்றுத்தந்துள்ள பாடமாகும்.

Share:

Author: theneeweb