இலங்கை பிரஜைகள் நான்கு பேர் லண்டனில் கைது

பிரித்தானியாவில் கைதான இலங்கையர்களிடம் தீவிர விசாரணை
பிரித்தானியாவின் – லுடன் விமான நிலையத்தில் வைத்து, அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் லுடன் விமானநிலையத்தில் வைத்து குறித்த நான்கு இலங்கையர்களும் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனர் என டெய்லி மெய்ல் ஊடகம் தகவல் வெளியிட்டிருந்தது.

பிரித்தானியாவினால் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில்  வெளிவிவகார அமைச்சிடம் வினவியபோது கருத்து தெரிவித்த அதன் பேச்சாளர் ஒருவர், இந்தக் கைது தொடர்பில் இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு இதுவரை தகவல் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், குறித்த கைது தொடர்பில் லண்டனில் உள்ள விசேட செய்தித் தொடர்பாளர் செய்திச் சேவைக்கு தகவல் வழங்கியபோது, கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தற்போதுவரை தகவலறிய முடியவில்லை எனத் தெரிவித்தார்.

அவர்கள், புகழிடக்கோரிக்கையாளர்களா? அல்லது ஐரோப்பாவில் உள்ள ஏனைய நாடுகளில் புகழிடக் கோரிக்கையாளர்களாக வாழ்ந்து பிரித்தானியாவுக்கு செல்ல முற்பட்டவர்களா? என்பது குறித்த தகவல் தற்போதுவரை தெளிவாகவில்லை.

இதேநேரம், இலங்கை அல்லது இந்தியாவிலிருந்து நேரடியாக பிரித்தானியாவுக்கு செல்ல முயற்சித்தவர்களா? என்பது குறித்து தற்போதுவரை தகவல் வெளிப்படவில்லை எனறும் எமது விசேட செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும், பிரித்தானியாவுக்கு தொடர்ச்சியாக பயங்காரவாத அச்சுறுத்தல் நிலவுவதன் காரணமாக, பிரித்தானியாவினால் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடையவர்களுக்கு அங்கு பிரவேசிப்பதற்கு தடை விதித்து கடுமையான சட்டங்களை விதிப்பதாக பிரித்தானிய உள்விவகார அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb