உலகின் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடு ஃபின்லாந்து

உலகின் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஃபின்லாந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஒரு நாட்டின் வாழ்க்கைச் சூழல், சமூக ஒருங்கிணைப்பு, சராசரி வாழ்நாள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சியான நாடு எது என்பதை ஐ.நா. கணக்கிட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு 2019-இலும் உலகளவில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக பின்லாந்து விளங்குவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் தற்கொலை சம்பவங்கள் அதிகளவில் நிகழ்வதில் ஹங்கேரிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஃபின்லாந்து உள்ளதாக 1990-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. இருந்தபோதிலும், மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் அந்த நாடு முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது அனைவரின் புருவங்களையும் உயரச் செய்துள்ளது.

தற்கொலை விகிதம் அதிகம், கடுமையான நீண்ட குளிர் கால நிலை ஆகியவை ஃபின்லாந்துக்கு பாதகமான அம்சங்களாக உள்ளது என பலர் கூறினாலும், உலகின் எந்த மூலையில் திடீரென மனச்சோர்வு ஏற்பட்டால் தற்கொலை அபாயம் எல்லோருக்கும் பொதுவானது எனவே ஃபின்லாந்தை மட்டும் குறைகூறக்கூடாது என அந்த நாட்டின் தேசிய சுகாதார மையத்தின் பேராசிரியர் டிமோ பர்டோனன் தெரிவித்தார்.

கடந்த 1990-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஃபின்லாந்தில் தற்கொலை என்பது பாதிக்கும் கீழாக குறைந்துள்ளது. இதற்கு, தற்போது, பின்லாந்து மக்கள் குறிப்பாக, ஆண்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளவும் அவற்றை சமூகம் ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவமும் மிகவும் அதிகரிகரித்துள்ளதே முக்கிய காரணம் என பர்டோனன் மேலும் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி, சர்வதேச அளவில் அதிக தற்கொலை விகிதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஃபின்லாந்து 22-ஆவது இடத்தில் உள்ளது. தற்கொலை விகிதத்தில் அமெரிக்காவை காட்டிலும் குறைவாகவும், ஆஸ்திரேலியாவை விட ஒருபடி மேலாகவும் ஃபின்லாந்து உள்ளது.

Share:

Author: theneeweb