என்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே?

வீக்கிலீக்ஸ்… ஜூலியன் அசாஞ்சே… இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன.
ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் டவுன்ஸ்வில்லே நகரில் பிறந்து வளர்ந்த அசாஞ்சாவுக்கு பத்திரிகையாளர்.. எழுத்தாளர்… கம்ப்யூட்டர் புரோகிராமர்…  சமூக செயல்பாட்டாளர்.. என பல முகங்கள் உண்டு.
ஆனாலும் அவர் சுவீடனில் இருந்து 2006-ம் ஆண்டு விக்கிலீக்ஸ் இணையதளத்தை தொடங்கிய பிறகுதான் ஊடக வெளிச்சத்துக்கு வந்தார். அதுவும் உலகுக்கே பெரிய அண்ணன் நான்தான், என்னைப் பற்றிய ரகசியங்களை யாராலும் அறிந்துகொள்ள முடியாது என்று மார் தட்டி வந்த அமெரிக்காவுக்கே ‘தண்ணி’ காட்டி விட்டார்.
மெரிக்கா- ஆப்கானிஸ்தான் மீதும், ஈராக் மீதும் போர் தொடுத்தது தொடர்பான ரகசிய ஆவணங்களை கைப்பற்றி அவற்றை விக்கிலீக்சில் 2010-ம் ஆண்டு தொடர்ச்சியாக அசாஞ்சே வெளியிட்டபோது அமெரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமே மிரண்டு போனது. அமெரிக்காவின் ராஜதந்திர நடவடிக்கைகள், அம்பலத்துக்கு வந்தன. அமெரிக்காவின் முகத்திரை கிழிக்கப்பட்டது.
அதிர்ந்து போன அமெரிக்கா, அசாஞ்சாயை கைது செய்து, விசாரணை என்ற பெயரில் ஒன்றை நடத்தி மரண தண்டனை விதித்து, விஷ ஊசி போட்டு உயிரைப்பறிக்க காத்திருக்கிறது.
ஆனாலும் அந்த ஆண்டு உலகளவில் பிரபலமான அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை, அவரை அந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்து அட்டைப்பட கட்டுரை வெளியிட்டு சிறப்பித்தது.
பல பிரபலங்களைப் போல அசாஞ்சேயும் செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கினார். அவர் செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கியது கூட கொஞ்சம் சுவாரசியமானதுதான்…
சுவீடனில் ஏ என்றும் டிபிள்யூ என்றும் அறியப்படுகிற இரண்டு பெண்கள் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார்கள். அசாஞ்சேயுடன் அவர்கள் சம்மதித்துத்தான் செக்ஸ் உறவு கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர் ஆணுறை அணிந்துகொள்ளாமல் அவர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதால் தங்களை வலுக்கட்டாயமாக அசாஞ்சே கற்பழித்தார் என்று கூறி விட்டனர்.
இந்த குற்றச்சாட்டுகளை அசாஞ்சே மறுத்தார். அவற்றில் உண்மை இல்லை என்று அலறினார். இதில் ஏ கூறிய செக்ஸ் புகார், உரிய காலம் கடந்துவிட்டதால் காலாவதியாகி விட்டது. ஆனால் டபிள்யூ கூறிய குற்றச்சாட்டுக்கு இன்னும் உயிர் இருக்கிறது. அடுத்த ஆண்டு வரையில் இது தொடரும்.
இந்த வழக்கில்தான் அசாஞ்சேவுக்கு சுவீடனில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
2010-ம் ஆண்டு அசாஞ்சே லண்டனுக்கு தப்பினார். அங்கு அவர் கைதானார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவரை நாடு கடத்த வேண்டும் என்று சுவீடன் கேட்டது. சுவீடனிடம் தான் ஒப்படைக்கப்பட்டால், அங்கிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படும் ஆபத்து இருப்பதை உணர்ந்த அவர் ஈக்குவடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் கோரினார். தஞ்சம் கிடைத்தது.
இதற்கிடையே அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ஏதுவாக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் ரகசிய இமெயில்களை கசிய விட்டார். இது டிரம்பின் வெற்றிக்கு பக்க பலமாக அமைந்ததாக ஒரு குற்றச்சாட்டு அமெரிக்காவில் இருக்கிறது.
இந்த நிலையில்தான் தற்போது சர்வதேச சட்டதிட்டங்களை அசாஞ்சே மீறி வருகிறார் என்று ஒரு காரணத்தை சொல்லி ஈக்குவடார் நாடு 7 ஆண்டுகளாக அளித்து வந்த தஞ்சத்தை திரும்பப்பெற்றது.
அதன் காரணமாக போலீஸ் லண்டன் ஈக்குவடார் தூதரகத்துக்குள் புகுந்து அசாஞ்சேயை கைது செய்திருக்கிறது. உலகமெங்கும் இது பரபரப்பு செய்தியாகி இருக்கிறது. 2012-ம் ஆண்டு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கோர்ட்டில் ஆஜராகாத குற்றச்சாட்டின்பேரில் இப்போது அசாஞ்சே கைது செய்யப்பட்டுள்ளார். இதில் அவருக்கு ஓராண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் சொல்கின்றன. இது தொடர்பான தீர்ப்பை வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு அடுத்த மாதம் 2-ந்தேதி வழங்கப் போகிறது.
இன்னொரு பக்கம் அவரை நாடு கடத்திக்கொண்டு போவதில் அமெரிக்கா தீவிரமாக இருக்கிறது.
இது தொடர்பாக பல்வேறு சட்டப்போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், 48 வயதான அசாஞ்சே உள்ளார். அசாஞ்சே ஜெயிப்பாரா, அமெரிக்கா ஜெயிக்குமா, உலகம் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறது.
இந்திய தலைவர்களையும் விட்டு வைக்காத விக்கிலீக்ஸ்
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அமெரிக்க தூதரகம், அந்த நாட்டின் முக்கிய அரசியல், ராணுவ முடிவுகள், உள்நாட்டு விவகாரங்களை உளவு அறிந்து, அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்கிறது. அப்படி அனுப்பப்பட்ட ஆவணங் களைத்தான் விக்கிலீக்ஸ் வெளியிட்டு வந்திருக்கிறது.
அந்த வகையில் விக்கிலீக்ஸ் இந்திய தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை தமிழர் பிரச்சினையில் கருணாநிதி, ஜெயலலிதா அணுகுமுறை, நிதி மந்திரிகளாக இருந்த பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் வரை விக்கிலீக்ஸ் ரகசிய தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது உண்டு.
ஆதார் அடையாள அட்டை திட்டம் தொடங்கியபோது அதுபற்றிய வரைவு அறிக்கையை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் பலர் கேட்டு மல்லாடியும் அது சிதம்பர ரகசியம் என மறுக்கப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை அப்படியே விக்கிலீக்சில் வெளியானது கடந்த கால வரலாறு.
இந்தியாவில் இருந்து இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றிருந்தபோது விடுதலைப்புலிகளுக்கு வரி வருவாய் பாதிப்பு ஏற்பட்டு, அதற்கு இந்தியா ரூ.50 லட்சம் இழப்பீடு தந்தது என்பது வரை பல சர்ச்சைக்குரிய தகவல்கள் விக்கிலீக்ஸ் வழியாக அம்பலத்துக்கு வந்தது நினைவுகூரத்தக்கது.
Share:

Author: theneeweb