கிளிநொச்சி வைத்தியசாலைப் நலன்புரிச்சங்கத்தை முடக்கியதான செய்தியில் உண்மையில்லை – வைத்தியசாலைப் பணிப்பாளர்

நோயாளர் நலன்புரிச் சங்கத்திற்கும் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில் அச்சங்கத்தின் நடவடிக்கைகளை வைத்தியசாலை நிர்வாகம் முடக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறித்துத் தமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் த. காண்டீபன் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
‘வடமாகாணத்தில் 2016ம் ஆண்டிலிருந்து மாகாண அமைச்சர்கள் வாரியத்தினால் அமைச்சர் சபைப்பத்திர அறிவுறுத்தல்களுக்கு அமைய நோயாளர் நலன்புரிச் சங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையிலும் 2016ம் ஆண்டிற்கு முன்னர் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் என்ற அமைப்பே காணப்பட்டதாக அறியமுடிகிறது.
தற்போது இந்த நோயாளர் நலன்புரிச் சங்கங்கள் தொடர்பில் காணப்படும் ஆவணங்களின் பிரகாரம் இச் சங்கங்கள் அனைத்தையும் கண்காணிக்கும் அதிகாரம் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரிற்கே வழங்கப்பட்டுள்ளது.
நலன்புரிச் சங்கங்களது வருடாந்தச் செயலாற்று அறிக்கைகள் மதிப்பீடு செய்யப்பட்டு  வருடாந்தம் சேவை நீடிப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரமும் வடமாகாணப் பிரதம செயலாளரினால் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளருக்கே வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 07.04.2019 அன்று நோயாளர் நலன்புரிச்சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவின்போது அந்தப் பொதுச்சபையில் கலந்துகொண்டவர்கள்  இரண்டு தரப்பாக பிரிந்து நின்று ஒருமித்த கருத்துக்கு வரமுடியாமையினால் புதிய நிர்வாகத் தேர்வு இடம்பெற்றிருக்கவில்லை.
இவ்வாறான நிலைமைகளில் எவ்வாறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான வழிகாட்டல்கள் குறித்த நோயாளர் நலன்புரிச் சங்க யாப்பிலோ அல்லது வேறெந்த ஆவணங்களிலோ காணப்படவில்லை.
அத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கையில் உள்ளடங்கியிருந்த விடயங்கள் தொடர்பில் பொதுச்சபையில் எழுந்த ஆட்சேபணைகளையும் நாம் அவதானித்திருந்தோம்.
எனவே இதுகுறித்த மேல்நடவடிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்த ஆலோசனையினை வழங்குமாறும் இது தொடர்பில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கரைச்சிப் பிரதேச செயலர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் உடனடியாகவே எழுத்து மூலம் அறிவித்துள்ளோம். இதுதவிர எவருக்கும் தடைவிதிப்பதற்கோ முடக்குவதற்கோ அல்லது வங்கிகளுக்கு உத்தரவிடவோ எமக்கு எதுவித அதிகாரமும் இல்லை.  எனத் தெரிவித்த வைத்தியசாலைப் பணிப்பாளர்
இந்த விடயங்களில் நோயாளர் நலன்களைக் காட்டிலும் குறித்த சிலரது அரசியல் நலன்கள் முதன்மைப் படுத்தப்படுவதனாலேயே குழப்பநிலை தோன்றியிருப்பதாக நாம் கருதுகிறோம். இதே தரப்புகளே தங்களது நலன்கருதி இவ்வாறான திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை பரப்புவதற்கு எத்தனிக்கிறார்கள் என நாம் ஊகிக்கிறோம்.
வைத்தியசாலையின் பணிப்பாளர் என்ற வகையில் பக்கம் சாராது நடுநிலையுடன் மக்களுக்காகச் செயற்படுவதே எமது கடமையாகும். இவ்விடயத்தில் எவ்வகையான இடையூறுகளுக்கும். அழுத்தங்களுக்கும்  நாம் இடமளிக்கப்போவதில்லை’ என்றார்.
கிளிநொச்சி வைத்தியசாலையின் தற்போதைய பணிப்பாளர் கடமையேற்றுக் குறுகிய காலப்பகுதியில் வைத்தியசாலையில் நோயாளர்களுக்குப் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வைத்தியசாலை மிகச் சிறப்பாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Share:

Author: theneeweb