படை கொண்ட காடுகள்

–          கருணாகரன்

காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா? அது எப்படி?” என்று கேட்டாள் உமா.

“காட்டை அழித்து விட்டு அந்த இடத்தில் காடுகளை வளர்ப்பதுதான் காட்டுக்குள் காடு வளர்ப்பு” என்றார் இரத்தினசிங்கம் அண்ணை.

இதைக் கேட்ட உமாவுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் குழப்பமே.

எதற்காகக் காட்டை அழித்து விட்டு அங்கே மறுபடியும் காடுகளை வளர்க்க வேண்டும் என.

அப்பொழுது இரத்தினசிங்கம் அண்ணையும் அவருடைய கூட்டாளிகளும் வன்னியில் விறகு தறித்துக் கொண்டிருந்தார்கள். ஊரிலிருந்து காட்டுக்குப் போனால் இரண்டு மூன்று வாரங்களாக காட்டிலேயே தங்கி நிற்பார்கள். காடென்றால் சாதாரணமான காடல்ல. ஆழக்காடு. தெருவிலிருந்து பத்துப் பதினைந்து மைல் (அப்போது கிலோ மீற்றர் கணக்கெல்லாம் கிடையாது) உள்ளே போக வேண்டும். அந்த ஆழத்தில்தான் சமையல், படுக்கை, தொழில் எல்லாமே.

காட்டுக்குள் தண்ணீர் கிடைக்குமா? தங்குவதற்கும் பாதுகாப்பாகத் தூங்குவதற்கும் வசதியிருக்குமா? என்ற கேள்விகளுக்கு விடையே இல்லை. (இப்போது வீட்டிலிலுள்ள கிணற்றுத்தண்ணீர் தோதுப்படாது என்று போத்தல் தண்ணீரைக் குடிக்கும்போது இதைப்பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது)

போதாக்குறைக்கு நுளம்புக்கடி. பாம்புப் பிரச்சினை. கரடியோ நரியோ என்ற காட்டு  விலங்குகளின் அபாயம்.

இதையெல்லாம் கடந்தே விறகு தறிக்கும் வேலை நடக்கும். அவர்கள் தறித்துப் போடுகிற விறகையெல்லாம் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணத்துக்குப் பாரவூர்திகள் போகும். அந்த விறகை நம்பியே யாழ்ப்பாணத்தின் அடுப்படிகளும் பேக்கரிகளும் தேநீர்க்கடைகளுமிருந்தன.

காட்டிலிருந்து இரத்தினசிங்கம் அண்ணையின் படையணி ஊருக்குத் திரும்பி வரும்போது உடும்போ, உக்கிளானோ, முயலோ கொண்டு வரும். சில வேளை மான், மரை இறைச்சியும் வரும். நிச்சயமாக மரை வத்தல் வருவது தவறாது.

காட்டு வேலையில் நிற்கும்போது கறிக்குத் தோதாக எதையாவது வேட்டையாடுவார்கள். அதில் மரை இறைச்சியை வத்தலாக்கி வைத்திருப்பார்கள். காட்டுச் சமையலுக்குப் போனது போக மீதியை ஆளாளுக்குப் பகிர்ந்து ஒவ்வொரு பங்காக வீட்டுக்குக் கொண்டு வருவார்கள்.

அதோடு சீசனுக்கு ஏற்றமாதிரி காட்டில் பழுக்கிற பழங்களும் வரும். வைகாசியில் பாலைப்பழம். ஆனி, ஆடியில் வீரைப்பழம். ஆவணி, புரட்டாதி, ஐப்பசியில் நறுவிலி, நாவற்பழங்கள். தை, மாசியில் முரளிப்பழம். சித்திரையில் பனிச்சை. இப்படி ஏதோ ஒன்றோ பலவோ.

இன்னொன்று தேன். குடுவையிலும் வரும். போத்தலிலும் வரும். சுத்தமான தேன். பொன்னிறத்தில் ஒளிரும்.

“காட்டில இருந்து திரவியம் கொண்டு வாறான் இரத்தினசிங்கம்” என்பார் இரத்தினசிங்கத்தின் அப்பா பெருமாள்.

அவர் சரியாகத்தான் சொல்வார். உண்மையாகவே இதெல்லாம் திரவியங்கள்தான்.

இதெல்லாம் நடந்தது 1960, 70, களில். 80 களின் நடுப்பகுதி வரையிலும். (படையினர் தெருவிலிறங்கிச் சன்னதமாடும் வரையிலும். பிறகு படை முகாம்கள் தடைகளைப் போட்டு வீதிகளை மறிப்பது வரையிலும்) கூட இந்த மாதிரி விறகு தறிப்பும் காடுலாவுதலும் நடந்தன.

பிறகு, நாடு பிழைக்க நாலும் பிழைத்தன என்பதைப்போல எல்லாமே கெட்டழிந்தன.

அப்படி அப்பொழுது காட்டினுள்ளே வளர்த்த காடுகளை இப்பொழுது படையினர் வைத்திருக்கிறார்கள். இதற்குப் பின்னே ஏராளம் கதைகளுண்டு.

00

அப்போது யாழ்ப்பாணத்திற்கு பெரியதொரு விறகுத் தேவை இருந்தது. இதற்காக ஊர்கள் தோறும் விறகு காலைகளிருந்தன. ஏராளம் லொறிகள் விறகு ஏற்றி ஒடிக்கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கானவர்களுடைய தொழில் விறகோடு பின்னிப் பிணைந்திருந்தது.

ஆனால், வன்னிக்காடுகளிருந்தே விறகை எடுக்க வேண்டும். இதற்கு ஒரு பிரச்சினை. வன்னியில் வேண்டிய அளவுக்குக் காடு இருக்கிறது என்பதற்காக அதைக் கண்டபாட்டுக்கு வெட்டி அழித்து விட முடியாது. காடழிப்பது பிரச்சினைக்குரியது என்பது அரச சட்டம். இயற்கையின் சமூக விதி.

ஆகவே இதற்கென ஒரு மாற்று நடைமுறை வகுக்கப்பட்டது. விறகுக்காகக் காட்டை அழித்தால் அதற்குப் பதிலாகப் புதிய காடு வளர்க்கப்பட வேண்டும் என்று.

இதனால் இயல்பான காட்டினை வெட்டி அழித்து, அதிலிருந்து விறகினை எடுக்கும்போது அந்த இடத்தில் பதிற்காடுகளை வளர்க்கும் நடைமுறை உருவாக்கப்பட்டது. இந்தப் பதிற்காடுகள் இயல்பான காடுகளல்ல. தேக்கு, சமண்டலை போன்ற மரங்களாலான செயற்கைக்காடாகும். இவற்றுக்குக் கீழே செடி, கொடிகள் எல்லாம் கண்டபாட்டுக்கு வளராது. தனியே இந்த மரங்கள்தான் வரிசை கட்டி நிற்கும். பார்க்கும்போதே தெரியும் இவை தயாரிக்கப்பட்ட காடுகள் என்பதை.

இந்தக் காடுகளை விறகு வெட்டுவதற்கான ஒப்பந்தத்தை எடுத்தவர்கள் உருவாக்க வேண்டும். இது விதிமுறை. அப்படிக் காடுகளை உருவாக்கினால்தான் வெட்டிய விறகுக்கான கொடுப்பனவைப் பெறலாம். தொடர்ந்து விறகு வெட்டுவதற்கான அனுமதியும் கிடைக்கும். ஆகவே விறகு வெட்டுவதற்கான ஒப்பந்தக்காரர்கள் காடு வளர்ப்பையும் செய்வார்கள். அதாவது மரங்களை வெட்டுவோரே மரங்களை வளர்ப்பர். இதற்குச் சிறிய அளவில் அரச உதவித்தொகையும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இதற்காக இரண்டு அணிகள் இருந்தன. ஒரு அணி விறகுக்காகக் காடுகளை வெட்டி அழிக்கும். மற்ற அணி மரங்களை நட்டு வளர்க்கும். இரண்டையும் கண்காணிப்பது வனத்திணைக்களம். இதற்கென உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் இருந்தனர். அவர்கள் காடுலாவி இதையெல்லாம் கண்காணிப்பார்கள்.

இப்படியே சத்தமில்லாமல் காட்டில் காடழிப்பும் காடு வளர்ப்பும் என்ற காரியங்கள் நடந்து கொண்டிருந்தன. ஒப்பீட்டளவில் இதை ஒரு வகையான சமநிலை பேணுதல் என்றே சொல்ல வேண்டும். இயற்கையைப் பராமரித்தல்.

என்னதானிருந்தாலும் செயற்கைக்காடுகள் இயற்கைக் காடுகளைப் போல சமனிலையும் செழிப்பும் கொண்டவையாக இல்லை என்பது உண்மையே. என்றாலும் உருவாக்கப்படும் காடுகள் குறித்ததொரு காலத்திற்குப் பிறகு  பணப்பயிராக மாறக்கூடிய அளளவுக்கு வருவாயைத் தரக்கூடியன.

இயற்கைக்காடுகளில் முதிரை, பாலை, கருங்காலி, நாவல், ஒதி, இலுப்பை போன்றவை மரமாகவும் பலகையாகவும் காசு சம்பாதிக்கும் என்றால் இதைவிட வளர்ப்புக்காடுகள் அதிக வருவாயைத் தருவனவாக இருக்கும். தேக்கும் சமண்டலையும் இறக்குமதிப் பயிர்கள் என்பதால் அவற்றுக்கான பெறுமதியும் அதிகம்.

ஆனால் இயற்கைக் காடுகள் சமனிலையற்றவை என்பதை காட்டில் உலாவும்போதே தெரியும். இயற்கைக்காடுகளில் எப்போதும் குளிர்மையும் விலங்குகள், பறவைகள், ஊர்வனவற்றின் இயல்வான நடமாட்டங்களுமிருக்கும். செயற்கைக்காடுகளில் மிகக் குறைவான அளவிலேயே இவற்றைக் காணலாம்.

என்னதானிருந்தாலும் இயற்கைக்கும் செயற்கைக்கும் இடையிலான குணவேறுபாடுகள் இருந்தே தீருமல்லவா!

இப்படி வளர்க்கப்பட்ட காடுகள் கொக்காவிலுக்குக் கிழக்கே இரணைமடுக்காட்டில், பதினெட்டாம் போரில், மாங்குளம் – முல்லைத்தீவு வீதியோரப்பகுதியில், நெடுங்கேணியில், குமுழமுனையில் எனப் பல இடங்களிலும் இருந்தன.

இதற்குப் பிறகு வன்னியில் போர்  தீவிரம் பெற்று, போக்குவரத்துத் தடை, பொருளாதாரத் தடை என்ற “விலங்கிடல்கள்” வந்தபோது சனங்களுடைய பல தேவகைளுக்காக காட்டில் தடி வெட்டுதலும் மரம் அரிவதும் தீவிரமாகியது. இது ஏறக்குறைய காடுகள் அழியும் என்ற அபாய நிலையை உண்டாக்கியது. இந்த நிலையில் புலிகள் ஒரு மாற்று முயற்சியை எடுத்தனர்.

இதற்காக அவர்கள் வனவளபாதுகாப்புப் பிரிவினை உருவாக்கினர். காடு தொடர்பான புதிய விதிமுறைகளையும் சட்டங்களையும் உண்டாக்கி நடைமுறைப்படுத்த முற்பட்டனர். இதற்குப்பிறகு வீடமைப்பதற்கோ வேறு தேவைகளுக்ககாகவோ கண்டபடி காடுகளை அழிக்க முடியாது என அறிவித்து, இதற்கு உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்தனர்.

ஒவ்வொரு பிரதேசத்திலும் மக்கள் தமக்குத் தேவையான தடிகளையும் மரங்களையும் பெறக்கூடிய வகையில் மர மடுவங்கள் அமைக்கப்பட்டன. இந்த மர மடுவங்களில் சனங்கள் தங்களுக்குத் தேவைப்படும்  பொருட்களுக்கான கோரிக்கைகளைக் கொடுத்தால் அதன்படி தடியையோ மரங்களையோ வெட்டிக் கொடுப்பார்கள். இதற்காக காட்டு வேலையாட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மாற்றுக் காடுகளையும் வளர்த்துக் கொண்டிருந்தனர்.

இப்படிப் புலிகளால் உருவாக்கப்பட்ட மாற்றுக்காடுகள் கேப்பாப்பிலவில், முள்ளியவளை – செம்மலை வீதியில், உடையார்கட்டுத் தேறாங்கண்டலில், முழங்காவிலில், நெடுங்கேணியில், முறிகண்டியில் எனப் பல இடங்கிலும் உண்டு.

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் போகும்போது விசுவமடுவுக்கும் உடையாளர் கட்டுவுக்கும் இடையில் நீங்கள் வளைந்து வளைந்து செல்லும் தேக்கம் காடு இப்படிப் புலிகள் நட்ட காடுகளில் ஒன்றே.

ஆனால், இன்று இந்தக் காடுகளிலும் யாரும் கால் வைக்க முடியாது. இயற்கைக் காடுகளிலும் கால் வைக்க முடியாது.

எல்லாம் படை கொண்ட காடுகளாகி விட்டன.

ஊர்களை விட்டு விலகும் படைகள் காடுகளில் நிலை கொள்கின்றன. காடுகளோ பெரிய குழவிக் கூடுகளாகிக் கொண்டிருக்கின்றன.

Share:

Author: theneeweb