பாரிஸின் வரலாற்றுப் பெருமைக்க மிக்க தேவாலயம் தீச்சுவாலையின் கோரக் கரங்களில்

 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரிலுள்ள 850 வருடங்கள் பழமை வாய்ந்த  Cathedrale Notre Dame de Paris  தேவாயலம் பிரெஞ்சு நேரம் மாலை 18.50 மணியளவில் தீப்பற்ற ஆரம்பித்து இந்தச் செய்தியை எழுதும் வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றது. (பாரிஸ் நேரம் 10.34)
தீ கட்டுப்படுத்தமுடியாத அளவிற்கு தேவாலயம் முழுவதும் பரவிக்கொண்டிருப்பதாக பாரிஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
தீக்கான காரணம் இதுவரை தெரியாத போதிலும்,திருத்த வேலைகள் தற்பொழுது அங்கு நடைபெற்றுவருவதால்,அதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
இந்த தேவாலய தீ விபத்தானது உலகளாவிய ரீதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது
தீயணைப்புப்பணியில் சுமார் 400 தீயணைப்பு படையினர் மிகக்கடுமையாக போராடி வருகின்றனர். பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோன் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளார். தீ விபத்து காரணமாக பேராலயத்தின் கூரையும் மேற் கூம்பு கோபுரமும் இடிந்து விழுந்துள்ளது. தற்போது பிரதான கோபுரத்திலும் தீ பரவியுள்ளமையால் தேவாலயத்தின் எதிர்கால நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது
தேவாலயத்தில் இரண்டு பிரதான கோபுரங்களில் ஒன்றில் இருந்துதான் இந்த தீ பரவியதாக கூறப்பட்டுள்ளது இந்த விபத்துகுறித்து உடனடியான விசாணைகளுக்கு பரிஸ் நகர மேயர் உத்தரவிட்டுள்ளார்.
உலகின் முக்கிய தலைவர்கள் இந்த தீவிபத்து குறித்து தமது ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.இந்த ஆலயமே பரிஸின் உயர் மறைமாவட்டத்தின் முதன்மைப் பேராலயமாகும். பரிஸ் நகரில்உல்லாசப்பயணிகளை கவரும் முக்கிய மையம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிகப்புராதன கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் கட்டுமானப்பணிகள் கி. பி. 1163 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன. ஆயினும் பகுதிபகுதியாக பல ஆண்டுகளாக இதன்கட்டுமானப்பணி இடம்பெற்றது.
1793 இல் நடந்த பிரஞ்சுபுரட்சியில் நடந்த வன்செயல்களாலும்,இரண்டு உலகப் போர்களின் வன்முறையாலும், இந்த ஆலயம் சேதமடைந்தது எனினும் நேற்று மாலை ஏற்பட்ட தீவிபத்து மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது.
பிரெஞ்சு கத்தோலிக்க மக்களின் இதயங்களை இந்த தேவாலய தீ விபத்தானது நொருங்கச் செய்துள்ளது. மக்கள் கண்ணீர் சொரிவதை கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது.
நாட்டில் உருவாகியிருக்கும் மக்கள் போராட்டங்களை ஒட்டி பிரெஞ்சு அதிபர் மக்ரோன் மக்களுக்கு ஆற்றவிருந்த தொலைக்காட்சி உரை இந்த தீ அனர்த்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
புனித வாரத்தின் ஆரம்ப வாரத்தில் இந்த பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருப்பதானது கத்தோலிக்க சமூகத்தவர்களின் மனங்களை ஆழமாக பாதித்துள்ளது.
இந்த அனர்த்தத்தையடுத்து பாரிஸ் மறைமாவட்ட ஆயர் அதிமேதகு ஓப்பெற்றி (Aupetit)அவர்கள் பிரான்சிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் மணி ஒலித்து இந்த துயரத்தை பகிர்ந்து கொள்ளுமாறு ஆலய குருவானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Share:

Author: theneeweb