இரட்டைக் குழந்தைகளுடன் 10 பேரின் உயிரை பறித்த கோர விபத்து

பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பினை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மட்டக்களப்பில் பெரும்சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (17) அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த இரட்டைக் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளமை மட்டக்களப்பு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த விபத்தில் மட்டக்களப்பு, கல்லடி புதிய டச்பார் இன்னாசியார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள ஜுட் ஹென்றிக் (48 வயது), அவரது மனைவி கிறஸ்ன்டா ஹென்றி (42 வயது) அவர்களது மகன் ஜு.ஹெய்ட் (19 வயது), மகள் ஷெரேபி (10 வயது) ஆகியோரும் கருவப்பங்கேணி முதலாம் குறுக்கு வீதியை சேர்ந்த லிஸ்டர் (34 வயது), அவரது மனைவி நிசாலி (27 வயது) அவர்களது இரட்டைக் குழந்தைகளான மூன்று வயதுடைய பைஹா, ஹனாலி ஆகியோரும் நிசாலியின் தாய் தந்தையரான ரெலிங்டன் ஸொப்ஸ் (56 வயது), சில்பியா (53 வயது) ஆகியோரும் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் நிசாலியின் குடும்பத்தினை சேர்ந்த அனைவரும் உயிரிழந்துள்ள நிலையில் ஜுட் ஹென்றிகின் ஒரு மகள் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள உறவினர்களின் வீட்டுக்கு சென்று விட்டு அம்பாறையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வேனில் 12 பேர் சென்றுள்ளதாகவும் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலங்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேன் ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டு பாதையில் பிழையான பக்கத்தால் பயணித்தால் குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb