டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட 6 பேர்

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட 6 பேர் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என காவல்துறை ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்கர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவர்களிடம், குற்றப் புலனாய்வு பிரிவினரும், புலனாய்வு பிரிவினரும் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டவர்களில், 6 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை இன்று அதிகாலை 4.45 அளவில் விமானநிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்றனர்.

கைது செய்யப்பட்டவர்களுள், மாகந்துரே மதூஷூடைய உறவுமுறை சகோதரர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நிலான் ரொமேஸ் சமரசிங்க என அழைக்ப்படுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவருடன், மொஹமட் ரிசான் மொஹமட் பதுர்தீன், கயான் புத்திம பெரேரா, மொஹமட் ஜபீர், சுரேஸ் வசந்த ரணசிங்க மற்றும் சைமன் ஹேவகே ஆகியோர் நாடு கடத்தப்பட்ட குறித்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

அவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பின்னர் தீர்மானிக்கப்படும் என, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb