தூதரகத்தில் இருந்தபடி சதி வேலை: அசாஞ்சே மீது ஈக்வடார் அதிபர் குற்றச்சாட்டு

பிரிட்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் கொடுத்திருந்த நிலையில், அங்கிருந்த இணையதள ஊடுருவல்காரர்களை ஜூலியன் அசாஞ்சே ஒருங்கிணைத்தார் என்று அந்நாட்டு அதிபர் லெனின் மொரேனோ குற்றம்சாட்டியுள்ளார்.

தன்னைப் பற்றியும், தனக்கான நிதியை அளிப்பவர்கள் குறித்தும் எந்தமாதிரியான கண்ணோட்டத்தில் விவாதங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று எண்ணற்ற ஊடுருவல்காரர்களை அசாஞ்சே வழிநடத்தியதாகவும் அதிபர் கூறினார்.

அசாஞ்சேவை மிக அதிகமான முறை சந்தித்தவர்களில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஊடுருவல்காரர்களில் ஓலா பினியும் ஒருவர் என்றும், அவர், ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் செல்லிடப்பேசிகள், இணையதள கணக்குகளை முடக்கியவர் என்றும் லெனின் மொரேனோ தெரிவித்தார்.

முன்னதாக, ஈகுவடார் தூதரகத்தில் இருந்து அசாஞ்சேவை வெளியேற்றுவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்தவுடன், பிரிட்டன் காவல்துறையினர் அவரை கடந்த வாரம் கைது செய்தனர். அதற்கு அடுத்த சில மணி நேரங்களில், குய்டோ நகரில் தங்கியிருந்த ஓலா பினியை ஈக்வடார் காவல்துறை கைது செய்தது.

எனினும், ஓலா பினி எந்தவித தவறும் செய்திருக்க மாட்டார் என்றும், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb