ஜனநாயகம் தோல்வி அடைந்தால்?

  என். முருகன்

உலகின் எல்லா ஜனநாயக நாடுகளிலும் உள்ள மையக் கேள்வி, தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் நாட்டின் எல்லா விவரங்களையும் நன்றாகப் புரிந்து கொண்டுதான் வாக்களிக்கிறார்களா என்பதுதான். அடுத்த பெரிய கேள்வி, ஜனநாயக நாட்டின் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணம் அரசியல்வாதிகளா, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களா என்பது. இது குறித்து தீவிரமாக ஆராய்ச்சிகளை நடத்தியவர்கள் கூறும் கருத்துகள் கவனிக்கத்தக்கவை.

தேர்தலில் தரமான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் மிகப் பெரிய அறிவாளிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஓரளவு அரசியல் விவரங்கள் புரிந்தவர்களாக இருந்தாலே போதும். தங்களுக்குத் தெரிந்த பலரிடம் விசாரித்தும், பத்திரிகைகளைப் படித்தும் வாக்காளர்கள் தேர்தல் காலங்களில் விவரங்களைப் புரிந்து கொள்ள முடியும் என வாதிடுகிறார்கள் ஆய்வாளர்கள். ஆனால், அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் மையப்படுத்தி, அவர்களால் நிறுத்தப்படும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்ற வாதம் எழுகிறது. தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதியையும், திறமையையும் கருத்தில் கொண்டு வாக்களிப்பதுதான் சரியான முறையாக இருக்கும் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகிறது.

வாக்காளர்கள் விவரம் புரியாதவர்களாக இருந்தால், தவறான முடிவுகளை எடுத்துத் தேர்தலில் தரமற்றவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதையும், அதனால் மோசமான அரசுகள் அமைந்து, ஜனநாயகத்துக்குக் கெடுதல் விளையும் என்பதையும் சில நிகழ்வுகள் உணர்த்துகின்றன என பார்டெல் எனும் ஆய்வாளர் கூறுகிறார். டென்மார்க் நாட்டில் 1998-இல், பின்லாந்து நாட்டில் 2003-இல், பிரேசில் நாட்டில் 2002-இல் மற்றும் பெரு நாட்டில் 2000-ஆம் ஆண்டில் இது நடந்தது என்கிறார் பார்டெல்.

இதே ஆய்வாளர், வளர்ந்துவிட்ட நாடான அமெரிக்காவில் நடந்த ஒரு தேர்தலில் மக்களின் பகுத்தாய்வு எந்த அளவு தேர்தலில் பயன்பட்டது என்பதைக் கணித்துள்ளார். வாக்காளர்களில் 67 சதவீதத்தினர் ஊடகங்களிலும், பல தலைவர்களின் அறிக்கைகளில் வெளியான தகவல்களின் அடிப்படையிலும், தங்களது எண்ணங்களை மாற்றி வாக்களித்தார்கள் என்றும் கூறுகிறார்.

வாக்காளர்கள் தங்களது புரிதலின்படிதான் வாக்களிப்பார்கள் என்பது திண்ணம் என்றால், இந்தியா போன்ற கிராமப்புற, படிப்பறிவில்லாத வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமையும் அரசு எப்படி இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற நாடுகளுக்கு ஜனநாயகம் தேவையா என்ற கேள்வி எழுகிறது. அதைக் கையிலெடுத்து விவாதம் செய்யும் அறிஞர்கள் பலர், பொறுமையாக நாம் இருந்தால் கல்வி வளர்ச்சியும் தகவல் பரிமாற்றங்களும் பெரிய அளவில் வளர்ந்து, இந்தியா போன்ற நாடுகளில் ஜனநாயகம் தழைக்கும் எனக் கூறுகின்றனர்.

தரமான ஜனநாயக நடைமுறைகள் வழக்கத்தில் உள்ள மேலை நாடுகளில், மக்கள் தங்கள் நலனை அரசாங்கம் வெகுவாக நடைமுறைப்படுத்துகிறது என்ற கருத்தில் உள்ளனர். எனவே, அரசியல் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்கும் பழக்கத்தை இவர்கள் கொண்டுள்ளனர். தேர்தல் கட்டமைப்பு, ஊடகங்களின் தரமான தன்மைகள், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களின் நேர்மை ஆகியவை மக்கள் எல்லா விவரங்களையும் நன்றாகப் புரிந்து கொண்டு வாக்களிக்கும் நிலைமையை உருவாக்குகின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அரசாங்கம் நல்ல முறையில் நிர்வாகம் செய்கிறதா அல்லது ஊழல் நிறைந்த தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறதா என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் நிலைமை ஒரு ஜனநாயக நாட்டுக்கு அவசியம். தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் எல்லாவிதமான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டும், நாடு முன்னேறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் இருப்பார்கள். அடுத்த தேர்தலின்போது வாக்காளர்களின் புரிதலின்மையைப் பயன்படுத்தி வெற்றி பெற முயற்சிப்பார்கள், பலர் வெற்றியும் பெறுவார்கள் என்பது பல ஜனநாயக நாடுகளில் அனுபவபூர்வ நடைமுறை.

வேறு சில ஜனநாயக நாடுகளில், வாக்காளர்கள் மிகவும் விவரம் புரிந்தவர்களாக இல்லாதபோதும், அரசாங்கம் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் தரமான ஊடகங்களும், மக்கள் தங்கள் சமூக கட்டமைப்புகளில் உறுப்பினர்களாக இருந்து அவர்கள் அளிக்கும் அறிவுரைகளின்படி எல்லா விவரங்களையும் புரிந்து கொள்கிறார்கள் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊடகங்களே பல கட்சியினராலும், இந்தியா போன்ற நாட்டின் ஜாதிய அமைப்புகளாலும் நடத்தப்படுகின்றன. சமூக கட்டமைப்புகள் எனப் பல ஜனநாயக நாடுகளில் அழைக்கப்படுபவை, இந்தியாவில் ஜாதிகளாக இருக்கின்றன. ஊழல்வாதிகள் ஜாதிகளின் தலைவர்களாக இருந்தால் வாக்காளர்கள் நியாயமான முறையில் அவர்களது தகுதி அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய முடியாது என்பது உறுதி.

ஜனநாயக நாடுகளில் அரசியல் கட்சிகள் பற்றிய மக்களின் புரிதல் ஒரு மிகப் பெரிய அம்சமாகியுள்ளது. அமெரிக்கா போன்ற நாட்டில் இரண்டு கட்சிகளே உள்ள நிலைமையும், இந்தியாவில் உள்ள 7 தேசிய கட்சிகள் போக பல பகுதிகளில் உள்ள 2,044 கட்சிகளும் உருவாக்கும் நிலைமையும் வெவ்வேறானவை. அமெரிக்காவின் மக்கள் மிகத் தெளிவாக இரண்டு அரசியல் கட்சிகளின் கொள்கை மற்றும் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியும். அங்கே கூட்டணி என்றால் என்ன என்றே தெரியாது. பல கட்சிகளைக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில் கூட்டணி அரசு அமையும். அது தேர்தல் முடிந்து, தனியொரு கட்சிக்கு ஆட்சி அமைக்கத் தேவையான அளவில் உறுப்பினர்கள் இல்லாததால் ஏற்படும்.

ஆனால், தேர்தலில் போட்டியிடவே கூட்டணிகளை அமைத்து உலக ஜனநாயகமே திரும்பிப் பார்க்கும்படி செய்தது இந்தியா மட்டும்தான். அதிலும், ஒரு முறை கூட்டணியில் ஒரு பிரபல கட்சியுடன் இருந்து அந்தக் கட்சியின் கொள்கைகளைப் புகழ்ந்து தள்ளிவிட்டு, மற்றொரு தேர்தலில் அந்தக் கட்சியின் எதிரணியில் சேர்ந்து அந்தப் பிரபல கட்சியைத் திட்டித் தீர்ப்பது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அதிசய நிகழ்வு. இது உண்மைதானா என மேலை நாடுகளில் மக்கள் பலர் வியக்கின்றனர்.

அரசியலை நன்கு புரிந்து கொண்ட வாக்காளர்களில் பலர், ஒரு கட்சியின் கொள்கைகளைத் தாங்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட நிலையிலும், அவர்கள் வாக்களிக்க விரும்பும் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை விரும்பாததால் தயங்குவது பல ஜனநாயக நாடுகளில் காணப்படும் சூழல். 1997-ஆம் ஆண்டில் தாங்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்ததாகக் கூறுகிறார் காக்ஸ் எனும் ஆய்வாளர்.

லத்தீன் அமெரிக்காவின் தேர்தலில், வாக்களிக்க வேண்டிய மக்களில் பலர், ஊழல் பற்றிய விவரங்களை நன்றாகப் புரிந்திருந்த போதிலும், ஊழலே இல்லாத கட்சியோ அல்லது போட்டியிடும் வேட்பாளர்களோ இல்லாத காரணத்தால், குறைந்த அளவில் ஊழல் செய்கிறார்கள் என்று அவர்கள் கருதும் கட்சியினருக்கும் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கிறார்கள் எனக் கூறுகிறார் ஓல்கென் எனும் ஆய்வாளர். இந்தியாவிலும் நிலைமை ஏறத்தாழ அதுதான்.

அரசு செய்யும் ஊழல்களை செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும் வெளியிடாமல் வாக்காளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற கருத்தை ட்ரைஸ்மேன் எனும் ஆய்வாளர் வெளிப்படுத்தியுள்ளார். 1990-ஆம் ஆண்டு உகாண்டா நாட்டில் தேர்தல் நடப்பதற்கு முன் பள்ளிக் கல்விக்காக அதிகமான பணத்தை பள்ளிகளுக்கு அரசு வழங்கியது. இது மிகப் பெரிய செயலாக வாக்காளர்களால் கருதப்பட்டு தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கப்பட்டது. தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெற ஆளும் கட்சி செய்த தந்திரம் இது என்பதை எந்த ஊடகமும் சுட்டிக்காட்டவில்லை.
ஆனால், பிரேசில் நாட்டில் 2003-ஆம் ஆண்டில், ஊழல் தடுப்புக்காக ஓர் அரசு நிறுவனம் உருவாக்கப்பட்டது. அது, 60 நகராட்சிகளின் நிதிகளை ஆடிட் செய்து நிறைய ஊழல் நடவடிக்கைகளைக் கண்டுபிடித்தது. இது ஆளும் அரசுக்கு எதிராக தேர்தலில் வேலை செய்தது. இதற்கான முழு காரணம், பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் இவற்றை பிரசாரம் செய்ததுதான் என்கிறார்கள் இதை ஆய்வு செய்த ஃபெர்ராஸ் மற்றும் ஃபினான் எனும் ஆய்வாளர்கள்.
வாக்காளர்களின் புரிதல் பற்றிய விவரங்களும், அவர்கள் தேர்தலில் வாக்களித்துத் தரமான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளும் நல்ல அரசாங்கத்தை ஜனநாயகம் உருவாக்குகிறதா என்பதுதான் அடிப்படைக் கேள்வி. அது, மக்களுக்கு நன்மை பயக்கும் தரமான அரசாங்கத்தை உருவாக்கவில்லை என்றால், ஜனநாயகம் பயனளிக்கவில்லை என்று பொருள்.
ஆய்வாளர்கள் பலரும், இந்திய ஜனநாயகத்தில் வாக்களிக்கும் மக்கள், தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகள், அவர்களுடன் சேர்ந்து ஊழல்களில் ஈடுபடும் அதிகாரிகள் ஆகியோர் பற்றிய விவரங்கள் தெரியவந்த நிலையில் இவை வேறு எந்த ஜனநாயக நாட்டிலுமே கிடையாது என்கிறார்கள். ஓர் அரசியல் கட்சி, ஆட்சியில் இருக்கும்போது பல்வேறு ஊழல்களைச் செய்து கோடிக்கணக்கான பணத்தைச் சம்பாதித்துத் தேக்கி வைக்கும். அமைச்சர்கள் கோடீஸ்வரர்களாகி விடுவர். அடுத்த தேர்தலில் தோற்றால், எதிர்க்கட்சியாக வலம்வர ஆட்சியிலிருக்கும்போது சம்பாதித்து வைத்த பணம் உதவும்.

தேர்தலில் ஆளும் கட்சி மட்டுமின்றி, போட்டியிடும் பல கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும். இது திருட்டுத்தனமாக வழங்கப்படும் பணம். வாக்காளர்கள் பணத்தை எதிர்பார்த்திருப்பது தேர்தல் நேரத்தில் சகஜமாகிப்போன நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கைகளை பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் மிக விரிவாக விளக்கி விவாதித்த பின்னரும் எந்த எதிர்மறை வினைகளும் ஏற்படாததால் மிகச் சாதாரணமான செய்தியாகிவிட்டது.
இந்தியாவில் ஜனநாயகம் தோல்வி அடைந்தபின் அடுத்த ஆட்சிமுறை என்ன என்பதுதான் மேலை நாட்டு ஆய்வாளர்கள் பலரும் எழுப்பும் கேள்வி. இதை வாக்காளர்கள் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே தீர்வு ஏற்படும்.

கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).  – Dinamani –

Share:

Author: theneeweb