8 அரச நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றின் அதிரடி உத்தரவு!!

விசேட தேவையுடையவர்கள் அரச நிறுவனங்களுக்குள் இலகுவாக சென்று தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வசதிகளை செய்து கொடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அங்கப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பேராசிரியர் அஜித் பெரேரா முன்வைத்த அடிப்படை உரிமைகள் மனுவின் அடிப்படையில், ஆறு அமைச்சுக்கள் மற்றும் 8 அரச நிறுவனங்களுக்கே, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட, முர்து பெர்ணாண்டோ ஆகிய 3 நீதியரசர்களைக் கொண்ட குழாமினால் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, சேவைகள் மற்றும் நலன்புரி, வீடமைப்பு மற்றும் கட்டிடநிர்மாணம், நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, கல்வி ஆகிய அமைச்சுக்களும், சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட 8 அரச நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறும் அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கு தொடர முடியும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதேநேரம், வழக்கினை தாக்கல் செய்த மனுதாரருக்கு வழக்கு செலவினங்களுக்காக 50ஆயிரம் ரூபாவை அரசாங்கம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்த பேராசிரியர் அஜித் பெரேரா, 1992ம் ஆண்டு அவரது வாகனத்தின் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததை அடுத்து அங்கப்பாதிப்புக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb