இயக்குநர் மிருணாள் சென்

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் மிருணாள் சென் (95), ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

வயது முதிர்ச்சியால் ஏற்பட்ட நோய்களால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். மிருணாள் சென் மனைவியும், நடிகையுமான கீதா சென் கடந்த ஆண்டு மறைந்ததை அடுத்து, அவர் தனது மகனுடன் வசித்து வந்தார்.

 

பத்ம பூஷண் விருது வென்றுள்ள மிருணாள் சென், இந்திய திரைத் துறையில் உயரியதாகக் கருதப்படும் தாதாசாஹேப் பால்கே விருதையும் பெற்றுள்ளார். “நீல் அகாஷர் நீச்சே’, “புவன் ஷோம்’, “ஏக் தின் அசானக்’, “பதாடிக்’ போன்றவை அவரது பட வரிசையில் சிறந்தவையாகும். இதில் அவரது புவன் ஷோம் படமானது, இந்திய சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சர்வதேச அரங்கத்தில் இந்திய சினிமாவுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்தவர்களில் மிருணாள் சென்னும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இயக்கிய “மிருகயா’ என்ற படம், வழக்கமான திரைப்படங்களிலிருந்து வேறுபட்டு சமூக அவலங்களை வெளிப்படுத்துவதாக மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அவர் பலமுறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். அவரது “காரிஜ்’ திரைப்படம் 1983-ஆம் ஆண்டு கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

அவர் இயக்கிய “இன்டர்வியூ’, “கொல்கத்தா 71′, “பதாடிக்’ திரைப்படங்களானது, 1970-களில் கொல்கத்தாவில் நிலவிய அரசியல் கொந்தளிப்பை படம்பிடித்துக் காட்டுவதாக இருந்தது.
கடந்த 1923 மே 14-ஆம் தேதி ஃபரீத்பூரில் (தற்போது வங்கதேசத்தில் உள்ளது) பிறந்த மிருணாள் சென், இடதுசாரி ஆதரவுச் சிந்தனையாளராவார். வங்காளி, ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் உறுப்பினர், புணவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் தலைவர் பொறுப்புகளிலும் இருந்துள்ளார். 1998-2003 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.
குடியரசுத் தலைவர் இரங்கல்: மிருணாள் சென் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுட்டுரையில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மிருணாள் சென் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. “புவன் ஷோம்’ முதல் “கல்கத்தா 71′ வரையிலான படங்களில் சமூக அவலங்களை அழுத்தமாக எடுத்துக் காட்டியதன் மூலம் அந்த காலகட்டத்தில் சிறந்த இயக்குநராகத் திகழ்ந்தார். மிருணாள் சென் மறைவு, மேற்கு வங்கம், இந்தியா, உலக சினிமாவுக்கான இழப்பாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி: பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நினைவில் கொள்ளத்தக்க வகையிலான சிறந்த படங்களை வழங்கியதற்காக மிருணாள் சென்னுக்கு நமது நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது. அவரது படைப்புகள் தலைமுறை தாண்டி ரசிக்கப்படுகின்றன. மிருணாள் சென் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மம்தா இரங்கல்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், “மிருணாள் சென் மரணமடைந்த செய்தி கேட்டு துயரடைந்தேன். அவரது மறைவு திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். மிருணாள் சென்னை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று கூறியுள்ளார்.


மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட திரைத்துறையினரும் மிருணாள் சென் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb