சர்வதேச பொருளாதார வழித்தடம் எந்த நாட்டின் இறையாண்மைக்கும் எதிரானதல்ல-சீனா

சீனாவின் சர்வதேச பொருளாதார வழித்தடத்தால் (பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேடிவ்) மற்ற நாடுகளின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
இத்திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இருநாட்டுத் தலைவர்களுக்கு இடையே மீண்டும் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராகி வருவதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

சர்வதேச பொருளாதார வழித்தடம் மூலம், ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களைச் சேர்ந்த பல நாடுகளை சாலை வழியாகவும், கடல் வழியாகவும் இணைக்க சீனா திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம், அந்நாடுகளுடனான வர்த்தகத் தொடர்பு அதிகரிக்கும் என்று சீனா கூறி வருகிறது. ஆனால், இத்திட்டம் இறையாண்மையைப் பாதிக்கும் என்று கூறி, இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இத்திட்டத்தில் இணைந்துள்ள நாடுகள் பங்குபெறும் இரண்டாவது கூட்டம், ஏப்ரல் 25 முதல் 27 வரை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:சீனாவின் வூஹான் நகரில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவும், பரஸ்பர புரிதலும் மேம்பட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான வருங்கால வளர்ச்சித் திட்டங்களை வலுப்படுத்துவதற்கு அடித்தளமாக இந்தப் பேச்சுவார்த்தை அமைந்தது.

இறையாண்மைக்கு பாதிப்பில்லை: வூஹான் சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்கி வருகின்றன. அதே போன்று இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்.
இரு நாடுகளுக்கும் இடையே வேறுபாடுகள் காணப்படுவது இயல்பு. அந்த வேறுபாடுகளைப் பிரச்னைகளாக மாற்றக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடியே பல முறை கூறியுள்ளார். இந்த வேறுபாடுகள், இரு நாடுகளின் வளர்ச்சிக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாது.
முக்கியமாக, சீனாவின் சர்வதேச பொருளாதார வழித்தடத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்திட்டம், மற்ற நாடுகளின் இறையாண்மையையும், பிராந்தியப் பாதுகாப்பையும் பாதிக்காது என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. இத்திட்டம் முற்றிலும் பொருளாதாரம் சார்ந்ததே. ஆனால், இந்தியா தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தபோதிலும், இந்த விவகாரத்தால், இந்தியாவுடனான நல்லுறவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

இரண்டாவது கூட்டம்: சர்வதேச பொருளாதார வழித்தடத்தின் இரண்டாவது கூட்டத்தில், 37 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். சுமார் 150 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்பட 5,000க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர். அமெரிக்காவின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இருந்தபோதிலும், அந்நாட்டின் தொழிலதிபர்கள் சிலர் இதில் பங்கேற்க உள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் பங்கேற்க உள்ளனர். சீனாவின் அண்டை நாடு என்ற முறையிலும், பொருளாதார ஒத்துழைப்பு ரீதியிலும் வடகொரியாவைச் சேர்ந்த உயர்நிலைக் குழுவும் இதில் பங்கேற்க உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சர்வதேச பொருளாதார வழித்தடத்தின் முதல் கூட்டம், கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த இந்தியா, தற்போது நடைபெறவுள்ள இரண்டாவது கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

Share:

Author: theneeweb