‘தாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்’ வெளிவந்திருக்கிறது அதிரிபுதிரி ஆய்வு முடிவு!

80 களில் ஆண்கள் தாடி வைத்துக் கொண்டால் அவர்கள் வேலையில்லாப் பட்டதாரிகளெனக் காட்டியது தமிழ் சினிமா.

குறுந்தாடி வைத்தால் அறிவு ஜீவிகளென கருதினார்கள் ஒருகாலத்தில்…

கிளீன் ஷேவ் தான், ட்ரிம் மீசை தான் பெர்ஃபெக்ட்… ஜெண்டில்மேனுக்கு அழகு எனக்காட்டின ஆங்கிலத் திரைப்படங்கள், ஏன் இந்தித் திரைப்படங்களில் கூட அப்படித்தான் காட்டினார்கள்.

ஆனால் ஆண்களுக்கு எப்போதுமே தாடி வைப்பதா? வேண்டாமா? எது அழகு? எது கம்பீரம்? எதை பெண்கள் விரும்புகிறார்கள்? எதை வெறுக்கிறார்கள்? என்பதில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. சிலருக்கு முக அமைப்பு ஒடுக்கமாக இருந்தால் நிச்சயம் அவர்களைத் தாடியுடன் தான் பார்க்க முடியும். அது அவர்களுக்கான பியூட்டி கான்சியஸ். இன்னும் சிலரோ மோகன்லால் போல அகலமான முக அமைப்பு கொண்டிருந்த போதும் தாடி வைத்துக் கொள்ளப் ப்ரியப்பட்டு தாடியையும், மீசையையும் காட்டுத்தனமாக ஒருசேர வளர்ப்பார்கள். பார்க்க கரடி மாதிரி இருந்தாலும் ஏதோ ஒருவிதமான கான்ஃபிடன்ஸுக்காக வளர்ப்பதாக தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்வார்கள். அவர்களைத் தாடியின்றி பார்ப்பது கடினம்.

சிலர் சுத்த சோம்பேறித்தனத்தாலும் கூட தாடி வளர்த்துக் கொண்டு அலைவார்கள். சந்நியாசிகளைப்பற்றிக் கேட்கவே வேண்டாம், அவர்களுக்கு தொழில் மூலதனமே தாடி தான் 🙂

அடடா… இதென்ன தாடியை வைத்து ஒரு சொத்தை ஆராய்ச்சி என்று சலித்துக் கொள்ளாதீர்கள். நிஜமாகவே தாடியைப் பிரதானமாக வைத்து ஒரு அறிவியல் ஆராய்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. இங்கில்லை. சுவிட்சர்லாந்தில். அதில் தெரிய வந்த உண்மை என்ன தெரியுமா?

பெண்கள் தங்களுடைய இணை தாடி வைத்துக் கொண்டிருந்தால் அழகென்று நினைக்கலாம். ஆனால், அந்தத் தாடியை ஆண்கள் சரியாகச் சுத்தமாகப் பராமரிக்கிறார்களா? என்பதையும் இனிமேல் அடிக்கடி சோதனைக்குள்ள்ளாக்கியே தீர வேண்டும். ஏனெனில், நாய்த்தோலில் சராசரியாக இடம்பெறும் பாக்டீரியக்களைக் காட்டிலும் ஆண்களின் தாடியில் சர்வ சுதந்திரமாக வளரும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை கணக்கிலேயே அடங்காதாம். அந்த அளவுக்கு ஆண்களின் தாடி பாக்டீரியா ஃபேக்டரியாகச் செயல்படுகிறதாம். எனவே தாடி வைத்த ஆண்களை மணந்த அல்லது காதலிக்கும் பெண்களே தாடிப் பராமரிப்பு விஷயத்தில் கொஞ்சமல்ல இனிமேல் நிறையவே ஜாக்ரதையாக இருங்கள்!

நிச்சயமாக இது கிண்டலில்லை. முழுமையான எச்சரிக்கையே தான். ஏனெனில் சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஹிர்ஸ்லாண்டன் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வொன்றின் அடிப்படையில் பார்த்தால் தாடி வைத்த ஆண்களைக் காட்டிலும் நாய்கள் சுத்தமானவையாம்.

வாஸ்தவத்தில் இந்த ஆய்வு இப்படியொரு சோதனைக்காக நிகழ்த்தப்படவில்லை.

சுவிஸ்ஸில் மனிதர்களுக்கும், நாய்களுக்கும் ஒரே எம் ஆர் ஐ ஸ்கேன் மெஷின் பயன்படுத்தப்படுவது வழக்கம். அப்படிப் பயன்படுத்துகையில் அதாவது ஒரே மெஷினைப் பகிர்ந்து கொள்வதால் நாய்களுக்குண்டான தொற்றுநோய்களில் எதுவும் மனிதனுக்குப் பரவ வாய்ப்பிருக்கிறதா? என்பதைக் கண்டறிய நிகழ்த்தப்பட்ட ஆய்வு தான் அது. அந்த ஆய்வில் திடீரெனத் தெரிய வந்தது தான் மேற்கண்ட உண்மை. மேற்கண்ட ஆய்வுக்காக 18 ஆண்களிடமிருந்து அவர்களது தாடி சாம்பிள்கள் பெறப்பட்டன. அதே போல 30 நாய்களின் தோல் சாம்பிள்களும் பெறப்பட்டன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞானிகள் ஆய்வில் இறங்கினர். அப்போது தான் தெரிய வந்திருக்கிறது ஆண்களின் தாடியில், நாய்த்தோலைக் காட்டிலும் அதிகப்படியான பாக்டீரியாத்தொற்று இருப்பது.

தாடி வைத்திருக்கும் ஆண்களின் முதல் நண்பனாகக் கருதப்படுவது அவர்களது தாடியே. அப்படி இருக்கும் போது ஆண்கள் தங்களது தாடி பராமரிப்பில் மேலும் கொஞ்சம் கருணையும் கவனமும் காட்டித்தான் தீர வேண்டும். இல்லையேல் தாடி மூலமாகத் தனக்குத்தானே நோய் பரப்பிக் கொள்வதில் வல்லவர்கள் என்று பெயரெடுக்க வேண்டியிருக்கும்.

எனவே தாடி வைத்த ஆண்களே தயவு செய்து இனிமேல் உங்களது தாடியை தினமும் பாக்டீரியாத் தொற்றிலாமல் இருக்கிறதா என்று சோதிக்க மறவாதீர்!

Share:

Author: theneeweb