மருத்துவத்துறையின் மாபியாக் கலாச்சாரம்

–    கருணாகரன்

“இலவச மருத்துவ சேவையை வழங்குவதில் இலங்கை மிகச் சிறந்த இடத்தில் உள்ளது” என்று அண்மையில் குறிப்பிட்டிருக்கிறார் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன.

அமைச்சர் சொல்வதைப்போல இலவசக் கல்வி, இலவச மருத்துவ சேவை போன்றவற்றை வழங்குவதில் இலங்கை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்பது உண்மையே.

ஆனால் அவர் பெருமையாகக் குறிப்பிடும் அளவுக்கு மருத்துவத்துறையின் இலவசப் பங்களிப்பும்  இல்லை, சேவைகளும் இல்லை என்பதே உண்மை.

இதற்கு ஏராளம் உதாரணங்களையும் சாட்சியங்களையும் முன்வைக்க முடியும்.

ஆண்டுதோறும் மருத்துவத்துறைக்காக குறிப்பிடத்தக்களவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதாவது தனிநபர் வருமானத்தில் நான்கு வீதம்.

ஆனால் யுத்தம் முடிந்த பிறகும் இலங்கையின் பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு யுத்த காலத்தை விட அதிகம். மேலும், பாராளுமன்றச் செலவீனம், ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்றவற்றோடு ஒப்பிடுகையில் மருத்துவத்துறைக்கான நிதி மிகச் சிறிய அளவானதே.

இந்த நிதியிலும் மக்களுக்கான மருத்துவ சேவைக்குரிய நிதி மற்றும் சலுகைகளுக்கு வழங்கப்படுவதை விட  மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் நிதி என்பது விகிதாசாரத்தில் அதிகமானது.

ஆகவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் மக்களுக்கான மருத்துவ சேவைக்குரிய நிதி ஒதுக்கீடு குறைந்தளவானதே. இதை விட மருத்துவத்துறையில் நடக்கின்ற “நிழலாட்டங்கள் உண்டாக்கும் பாதிப்பு மிக அதிகமாகும். இதனால்,  அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டுடன் மட்டும் நிற்காமல் இந்த நிழலாட்டங்களைக் குறித்தும் கவனமெடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவரைவுகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான மருத்துவ சேவை சிறப்பானதாக அமையும். இல்லையென்றால் ஓட்டைப் பாத்திரத்தில் விடப்பட்ட நீரின் கதையாகவே எல்லாம் முடியும்.

இன்றைய நிலை ஏறக்குறைய அப்படியானதே.

வெளித்தோற்றத்தில் அரசாங்கம் உருவாக்கியிருக்கும் மருத்துவ நலத்திட்டங்களும் சேவை அமைப்பும் வரவேற்கக் கூடியதே. நாடு முழுவதிலுமுள்ள அரச மருத்துவமனைகள் ஓரளவு குறிப்பிடத்தக்க மருத்துவ சேவையை சிறப்பாக வழங்குகின்றன. கடந்த சில ஆண்டுகளிலிருந்து மருத்துவ சேவைக்குரிய நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவு எட்டு மணிவரையிலும் வெளிநோயாளர் பிரிவுகள் இயங்குகின்றன. விடுமுறை நாட்களிலும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற முடியும். இதெல்லாம் வரவேற்கப்பட வேண்டியவையே.

கூடவே, 48 வகையான மருந்துப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில மருந்துப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி மொத்தமாக 72 வீதமான மருந்துப் பொருட்களுக்கு விலைக்குறைப்புக் கிடைக்கலாம்.

இதைவிட புற்றுநோய்க்கான மருந்துக்காக செலவீனம் ஒரு நோயாளிக்கு  ஒன்றரை லட்சம் வரை என முன்பு வரையறுக்கப்பட்டிருந்தது. இந்த வரையறை தற்போது நீக்கப்பட்டு, சிகிச்சை குணமடையும் வரை, தேவையான மருந்துகளைப் பயன்படுத்த முடியும் எனத்தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறே இதயத்தில் ஏற்படும் இரத்த அடைப்பைப் போக்குவதற்கான மாற்றுச் சுவாசக் குழாய்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. கண் சிகிச்சைக்கான வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கண்புரைச் சிகிச்சை மற்றும் கண் வில்லை பொருத்துவது போன்றவற்றையெல்லாம் இலவசமாகச் செய்து கொள்ள முடியும்.

குடல் இறக்கத்துக்கான சிகிச்சையினையும் இவ்வாறு இலவசமாகப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகளுண்டு.

இதெல்லாம் அரசாங்கத்தின் ஏற்பாடுகள் என்பது உண்மையே.

ஆனால் இவற்றை நோயாளிகள் உரிய முறையில், இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாமா என்பதில்தான் சிக்கலே உள்ளது.  இலவசம் என்பதற்காக இவையெல்லாம் இலகுவாகக் கிடைத்து விடும் என்றில்லை. உண்மையைச் சொல்லப்போனால் இவற்றில் பலவும் வெளிப்படுத்தப்பட்ட திட்டங்கள், அறிவிப்புகள் என்ற அளவில்தான் இருக்கின்றன.

அதாவது நோயாளிகளுக்கு எட்டாக்கனிகளாக.

இங்கேதான் உள்ளது மருத்துவத்துறையின் உச்சக் குறைபாடுகளும் நிழலாட்டங்களும். இந்த நிழலாட்டங்கள் மிகப் பயங்கரமானவை. ஏறக்குறைய ஒரு மாபியா உலகில் நடப்பதைப்போன்றவை.

அரச உதவியில் அல்லது அரசின் ஏற்பாட்டின்படி சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதென்பது நோயாளிகளைப் பொறுத்தவரையில் மிகச் சிரமமான விசயம். ஆரம்ப நிலைச் சிகிச்சை அல்லது மிகச் சாதாரண நோய்களுக்கான வெளிநோயாளர் பிரிவுச் சிகிச்சையில் பிரச்சினைகள் பெரிய அளவில் இல்லை.

அடுத்த கட்டத்தில் உள்ள நிபுணத்துவ ரீதியான சிகிச்சைகளைப் பெறுவதில்தான் பெரிய நிழலாட்டங்களையும் குதிரைப் பேரங்களையும் சந்திக்க வேண்டும். அதாவது அறுவைச் சிகிச்சைகள், முறிவு சம்மந்தப்பட்டவை, மாற்றுறுப்புகள் தொடர்பானவற்றில்.

உதாரணமாகக் கண்புரைக்கான அல்லது கண் வில்லைகளைப் பொருத்தும் சிகிச்சையின்போது அரச உதவியைப் பெறுவதற்கான நடைமுறைகள் நோயாளியைக் களைப்படைய வைக்கின்றன. முதலில் காலவரையறையின்றிய இழுத்தடிப்பு. பிறகு “கண் வில்லைகளை வெளியே வாங்கிக் கொண்டு வாருங்கள்” என்று வெளிப்படையாகவே சொல்வார்கள். இதைச் சில மருத்துவர்கள் துணிவோடு சொல்வார்கள். சிலர் ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் பணியாளர்கள் மூலமாக சமிக்ஞை கொடுப்பார்கள்.

வெளியே கண் வில்லைகளை வாங்க வேண்டும் என்றால் சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரையில் வேண்டும். இவ்வளவு காசை எல்லோராலும் செலவழிக்க முடியாது. அப்படிச் செலவழிப்பதாக இருந்தால் அவர்கள் எதற்காக ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டும்?

இது பற்றிப் பளைப்பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிடலாம். கண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற நோயாளியிடம் மருத்துவர் கூறியிருக்கிறார் கண் வில்லை பொருத்த வேண்டும். அதற்கான காசுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று.

அந்த நோயாளி சொல்லியிருக்கிறார், “ஐயா என்னால் அந்தளவுக்குப் பெரிய வசதியெல்லாம் இல்லை. ஆனால் எனக்குப் பார்வை வேண்டும். என்னுடைய பிள்ளைகளைப் பார்க்க, என்னுடைய தொழிலைச் செய்யக் கண் பார்வை வேணும்” என்று.

“கண் பார்வை வேணும் என்றால் காசை ஒழுங்கு படுத்துங்கோ” என்று உறுதியாகச் சொல்லி விட்டார் கண் சிகிச்சைக்கான மருத்துவர்.

என்ன செய்வதென்று தெரியாத நிலையில் குறித்த நோயாளி பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலகத்துக்குச் சென்று தன்னுடைய நிலைமையை விளக்கியிருக்கிறார். அவர்கள் இன்னொரு மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு உரிய சிகிச்சைக்கான ஏற்பாட்டினைச் செய்தனர்.

உண்மையில் அரச மருத்துவமனையில் இதற்கான சிகிச்சையைச் செய்ய முடியும். ஆனால் காலத்தை இழுத்தடிப்பார்கள். அதன் மூலமாக நோயாளியையும் அவருடைய உறவினரையும் சலிப்படைய வைப்பார்கள். ஒரு கட்டத்தில் என்ன கஸ்ரப்பட்டாலும் பரவாயில்லை. கடன்பட்டாவது காசைக் கொடுத்து, வாங்க வேண்டியதை வாங்கி சிகிச்சையை முடித்து விட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வருவார்கள். அப்படி  வரவைப்பதே மருத்துவர்களுடைய நோக்கமாகும். இது ஒரு உளவியல் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான உபாயமே.

இந்த உபாயம் பொதுவாக நிபுணத்துவ சேவையைப் பெற்றுக்கொள்ளும் நிலையில் இலங்கையெங்கும் பிரயோகிக்கப்படுகிறது.

இதனால் வெளியே தனியார் மருத்துவமனைகளில் இதற்கான சிகிச்சையைப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் நோயாளிகள்.

இதுதான் இதயத்தில் நடக்கும் இரத்தக் குழாய் அடைப்புக்கான சிகிச்சை, சிறுநீரக மாற்றுச் சிகிச்சை, என்பு முறிவுக்கான சத்திர சிகிச்சை போன்றவற்றுக்கும் நடக்கிறது.

இன்னொரு உதாரணம், இது வடக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்தது. அந்த மருத்துவ மனையில் உள்ள மகப்பேற்று விடுதிக்கு மாதமொன்றுக்குச் சராசரியாக 600 தாய்மார் பேற்றுக்காக வருகை தருகின்றனர். ஆனால் அங்கே உள்ள கட்டில்களின் மொத்த எண்ணிக்கை 12 மட்டுமே. இதனால் ஒரு கட்டிலில் இரண்டு தாய்மார் படுக்க வேண்டியுள்ளது. அல்லது கட்டிலுக்குக் கீழே படுக்க வேண்டும்.

இதை விட பிறந்த குழந்தைகளை உரிய முறையில் பராமரிப்பதற்கான வசதிகளும் குறைவு. அந்த விடுதி முள்ளிவாய்க்கால் கால (பாடசாலை) மருத்துவமனைக்கு நிகரானது. இத்தகைய சூழலில் அங்கே தங்கள் குழந்தைகளைப் பிரசசவிப்பதற்குப் பலரும் விரும்ப மாட்டார்கள். பதிலாக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வெளியே தனியார் மருத்துவமனைக்குப் போகலாம் என்ற எண்ணமே ஏற்படும்.

இத்தகையை உளவியலையே பெரும்பாலும் தனியார் மருத்துவத்துறையினர் அரச மருத்துவனைக்கு வரும் நோயாளிகளின் மனதில் கட்டமைக்கின்றனர். ஆனால், இதை எல்லோரும் செய்யவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

முக்கியமாக நிபுணத்துவத்துடன் கூடிய சிகிச்சைகளை வைத்து பேரங்கள் நடக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தச் சிகிச்சையை அரச வைத்தியசாலைகளிலும் வெளியே தனியார் மருத்துவ மனைகளிலும் ஒரே மருத்துவர்கள்தான் செய்கின்றனர். இவர்கள் மிகத் தந்திரமாக அரச மருத்துவமனைகளில் இப்போதைக்கு இந்தச் சிகிச்சையை வழங்க முடியாது. கால அவகாசம் வேண்டும் என்பார்கள். இதே மருத்துவரிடம் வெளியே தனியார் மருத்துவமனையில் அடுத்த சில நாட்களிலோ வாரத்திலோ சிகிச்சையைப் பெற்று விடலாம்.

அவர்கள் அரச மருத்துவத்துறையைப் பலவீனப்படுத்தித் தமது தனியார் துறையை வளர்க்கின்றனர். இதனால் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மக்களுக்கான மருத்துவ சேவையை வழங்குவதிலிருந்து அனைவருக்குமான நிறைவான சேவையை வழங்குவது வரையிலும் பிரச்சினைகளே!

(தொடரும்)

Share:

Author: theneeweb