பிராந்திய செய்தி தொடர்பாளர் சண்முகம் தவசீலன் கைது

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய செய்தி தொடர்பாளர் சண்முகம் தவசீலன், இன்று முல்லைத்தீவு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தினர்.

இதன்போது செல்வபுரம் பேருந்து தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும், ஊடகவியலாளர்களையும் இனம் தெரியாத நபர் ஒருவர் தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்தவேளை அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.

இதயைடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் அவரை அடையாளப்படுத்த முற்பட்டனர்.

இதன்போது குறித்த நபர், அங்கிருந்த தப்பிச்செல்ல முற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவர் கடற்படையை சேர்ந்தவர் என தெரியவந்தது.

இந்தநிலையில், செய்தியாளர் சண்முகம் தவசீலன் தன்னை தாக்கியதாக, குறித்த கடற்படை அதிகாரி முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து, அவரிடம் நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதயைடுத்து அவரை இன்று காவற்துறையினர் விசாரணைக்காக அழைத்து கைது செய்ததை அடுத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக, முல்லைத்தீவு காவல்நிலைய பொறுப்பதிகாரி எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb