ஜனாதிபதி பதவியை இரத்துச் செய்வதற்கான சிறந்த நேரம்? -எஸ்.ஐ.கீதபொன்கலன்

 

நீண்ட காலமாக நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஸ்ரீலங்கா முயற்சி செய்து வருகிறது. 1977ல் இந்த அமைப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதலே மக்கள் தொகையில் ஒரு பிரிவினரும் மற்றும் அநேக அரசியல் கட்சிகளும் இந்த முறையை நீக்குவதற்கான பிரச்சாரத்தில் முன்னணியில் நின்றன. வாக்குறுதிகள், முன்மொழிவுகள் மற்றும் பிரச்சாரங்கள் யாவும் உரிய விளைவைத் தருவதில் பகுதியளவில் தோல்வியுற்றன ஏனென்றால் அதற்கான முயற்சிகளில் பலவும் முற்றிலும் நேர்மையற்றனவாக இருந்ததே அதற்கான காரணம். அநேகமான அரசியல் தலைவர்கள், அந்த அமைப்பு இந்நாளைய அரசாங்கத்துக்கு வழங்கும் வரம்பற்ற அதிகாரங்கள் காரணமாக வெளிப்படையாகவே இந்த ஜனாதிபதி அமைப்பை நேசித்தார்கள்.

ஸ்ரீலங்காவில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை மற்றும் யதார்த்தங்கள் என்பனவற்றை பொறுத்தவரை, இந்த ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு இதுவே சிறந்த தருணம் என நான் பெரிதும் நம்புகிறேன். நான் மேலும் வாதிடுவது என்னவென்றால் ஒருவேளை அந்த அமைப்பு முறையை அகற்றுவதற்கு இதுதான் சாத்தியமான கடைசி வாய்ப்பாக இருக்கக்கூடும் என்று, ஏனென்றால் அதை ஒழிப்பதில் இப்போது தோல்வியுற்றால் இந்த முறைமையில் நாம் எவ்வளவு ஆழமாக அமிழ்ந்துள்ளோம் என்பதை அது அடையாளம் காட்டிவிடும். நான் அந்த வாதத்தை உருவாக்க விரும்பவில்லை. ஸ்ரீலங்காவும் கூட கணிசமான அளவுக்கு கணிக்க இயலாத ஒன்றாக மாறிவருகிறது. எனினும் வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக அதை இரத்துச் செய்யாவிட்டால், நிறைவேற்று ஜனாதிபதி முறையானது ஒரு நீண்ட காலத்துக்கு இங்கேயே தங்கிவிடும் என்று வாதிடுவது பாதுகாப்பானதாகும்.

ஜனாதிபதி தேர்தலில் காணப்படும் தேர்தல் தொகுதி அரசியல் மற்றும் அதில் தொடர்புபட்டுள்ள மிகவும் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்ஸ போன்றவாகளின் இக்கட்டான நிலமை என்பனவற்றைக் கவனத்தில் கொள்ளும்போது, ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு இதுவே சிறந்த தருணம் என்பது எனது நம்பிக்கை. வெஸ்ட் மினிஸ்டர் முறையான அரசாங்கத்துக்கு மாறுவதின்; மூலம் இந்த மூவருமே பயன் பெறமுடியும்.

மைத்திரிபால சிறிசேன

முதலாவதாக, மைத்திரிபால சிறிசேன இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றுவதில் ஆர்வமாக உள்ளார். எனினும் அநேகமாக 2020 ஜனவரியில் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்குப் போதுமான வாக்குகளை அவர் கொண்டிருக்கவில்லை. 2015ல் அவர் ஜனாதிபதி பதவியை வெற்றி கொண்டது ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) மற்றும் சிறுபான்மையினர் ஆகியோரின் வாக்குகளினாலேயே. நிச்சயமாக ஐதேக திரும்பவும் அவருக்குப் பின்துணை வழங்கப் போவதில்லை, இது சிறிசேனவுக்கும் மற்றும் ஐதேக வுக்கும் சமீபத்தில் ஏற்பட்ட விரோதம் காரணமாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை, ஆனால் மாறிவரும் அரசியல் யதார்த்தங்களே இதற்குக் காரணம். 2015ல் ரணில் விக்கிரமசிங்காவின் வெற்றி பெறும் நம்பிக்கையின் அளவு குறைவாக இருந்தது, மற்றும் கட்சியானது பௌத்த சிங்கள வாக்குகளைக் கைப்பற்றக்கூடிய வழக்கத்திற்கு மாறான ஒரு வேட்பாளரைத் தேடிக் கொண்டிருந்தது. சிறிசேன மேலதிகமாகத் தேவைப்படும் வாக்குகளை சிங்கள மையப்பகுதியில் இருந்து கொண்டு வந்தார். பெரும்பாலான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களும் கூட அவருக்கு வாக்களித்தார்கள்.இந்தமுறை சுற்றியுள்ள யதார்த்தங்கள் வித்தியாசமாக உள்ளன. பெரும்பான்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க) யின் வாக்குகள் மகிந்த ராஜபக்ஸவின் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன (ஸ்ரீ.ல.பொ.பெ) வுக்கே செல்லும், ஐதேகவின் வாக்குகள் கட்சி நிறுத்தும் அதன் வேட்பாளருக்கு, பெரும்பாலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே செல்லும் மற்றும் சிறிசேனவின் அதிகரித்து வரும் தேசியவாத செயற்பாடுகள் மற்றும் மொழிப்பற்று என்பன காரணமாகத் தமிழர்களின் வாக்குகளும் கூட அவருக்குக் கிடைக்காது. இது குறிப்பிடுவது என்னவென்றால் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு சிறிசேனவுக்கு கிடைக்காது என்பதையே.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியுமா? அது சந்தேகம்தான். ஜனாதிபதியின் அதிகாரங்கள் இன்றி ஸ்ரீ.ல.சு.க கட்சியின் தலைவராகக் கட்சி அவரை வைத்திருக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. மகிந்த ராஜபக்ஸ மற்றும் சிறிசேன ஆகியோர் இல்லாத நிலையில், பண்டாரநாயக்கா குடும்பம் மீண்டும் வந்து கட்சியின் பொறுப்பை எடுத்துக்கொள்ள முடியும். ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவது சிறிசேன அரசியலில் சக்திவாய்ந்த ஒருவராகத் தொடரும் சாத்தியத்துக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.

மறுபுறத்தில் சிறிசேன இப்போது வெஸ்ட் மினிஸ்டர் முறைமைக்கு திரும்பினால், ஸ்ரீ.ல.சு.க சந்தேகமின்றி சில இடங்களை வெற்றிகொள்ள முடியும் அது சிறிசேன அரசியலில் தொடர்ந்து இருக்க உதவுவதுடன் அரசியல் விளையாட்டில் ஒரு அங்கமாகவும் அவரால் திகழ முடியும். அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒரு கூட்டணியைக் கூட ஏற்படுத்தி அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவும் வரமுடியும். மேலும், 2025ல் எதுவும் நடக்கலாம்.

இந்த ஜனாதிபதி முறை மாற்றமடைந்தால் அவரை ஒரு பெயரளவிலான ஜனாதிபதியாக மாற்றுவதற்கான ஒரு முன்மொழிவு உள்ளது என்று நான் அறிகிறேன். பெயரளவான அந்தப் பதவியில் சிறிசேனவுக்கு ஆர்வம் உள்ளதா என்பது தெளிவில்லை. இருப்பினும் ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு அவர் ஆதரவு தர முன்வந்தால் இந்த முன்மொழிவு ஜனாதிபதிக்கு மற்றொரு நலனைச் சேர்க்கிறது.

ரணில் விக்கிரமசிங்கா

னாதிபதி பதவியைக் கைப்பற்றுவதற்கு போதுமான வாக்குகளை தன்னால் வெற்றிகொள்ள முடியாது என்கிற நம்பிக்கையில்,சரத் பொன்சேகா மற்றும் சிறிசேன ஆகியோருக்கு முறையே 2010 மற்றும் 2015ல் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு ரணில் விக்கிரமசிங்கா ஒப்புதல் வழங்கினார். இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் கிட்டத்தட்ட ஐதேகவினை அவர்தான் பிரதிநிதித்துவப் படுத்தப்போகிறார். அவர் ஏற்கனவே அதற்கான பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளதாகத் தோன்றுகிறது. இருப்பினும் நாட்டின் சமூக – பொருளாதார நிலமைகளைப் பொறுத்தவரை, ஐதேக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்கான தெளிவான பெரும்பான்மையை எதிர்பார்பார்க்க முடியாது.

விக்கிரமசிங்கா பெரும்பான்மையான தமிழ் மக்களின் வாக்குகளை நம்பியிருக்க முடியும். பாரம்பரியமாக ஜனாதிபதி தேர்தல்களில் இந்தியத் தமிழர்கள் ஐதேக விற்குத்தான் வாக்களித்து வந்துள்ளார்கள். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) கடந்த வாரம் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக இ.தொ.கா வாக்களித்துள்ளது ஜனாதிபதி தேர்தலில் இந்தியத் தமிழர்கள் ஐதேக வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடும் என்கிற சாத்தியக்கூற்றினை அதிகரித்துள்ளது. கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஐதேக பெற்ற 32 விகித வாக்குகiளும் பாதுகாக்க வேண்டியது ரணில் விக்கிரமசிங்காவுக்கு முன்னாலுள்ள சவால் ஆகும். அவர் இதனைச் செய்வாராயின் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வேண்டிய ஐம்பது விகித வாக்குகளையும் அவரால் அடையமுடியும்.

விக்கிரமசிங்காவின் அதிர்ஷ்டம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரிலும் கூடத் தங்கியுள்ளது. இப்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாயா ராஜபக்ஸதான் என்பது அநேகமாகத் தெளிவாகி விட்டது. இது ஐதேக மற்றும் விக்கிரசிங்கா ஆகியோருக்கு ஒரு நற்செய்தி ஆகும். முதலாவது கோட்டபாயாவின் வேட்பாளர் நியமனம் ஐதேக வுக்கு தமிழர்களின் வாக்குகளை அதிகரிக்கச் செய்யும். இரண்டாவது, சமூக பொருளாதார காரணிகள் ஐதேகவுக்கு எதிராக வேலை செய்வதால் தேர்தலில் பிரதான கோஷமாக ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரத்துக்கான சாத்தியம் என்பதை பிரதான சுலோகமாக ஐதேகவால் பயன்படுத்த முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் கோட்டபாயாவின் வேட்பாளர் நியமனம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பயனுள்ள ஒரு தேர்தல் மந்திரத்தை வழங்கும். இருந்தபோதிலும் கோட்டபாயா ஒரு வல்லமைமிக்க வேட்பாளராக இருப்பதால், அவரைக் குறைத்து மதிப்பிட முடியாது.

இது அடையாளப்படுத்துவது என்னவென்றால், ரணில் விக்கிரமசிங்காவின் வாய்ப்புகள் அதிகமான பல குழப்பமான காரணிகளில் தங்கியிருப்பதினால் அவரது வெற்றிக்கு உத்தரவாதம் கிடையாது என்பதையே. மறுபுறத்தில் தேர்தலில் வெற்றி வாய்பினை இழப்பது கட்சியின் தலைமைப் பொறுப்பினை கைவிடுவதற்கு அவருக்கு ஏராளமான அழுத்தங்களைக் கொடுக்கும். கடந்த காலங்களில் விக்கிரமசிங்கா இந்தமாதிரியான அழுத்தங்களை வெற்றிகரமாக எதிர்த்து நின்றார். இந்தமுறை அது வித்தியாசமானதாக இருக்கும். சஜித் பிரேமதாஸ அந்தக் கவசத்தை ஏற்றுக்கொள்ள தயராக இருக்கிறார் என்றே தோன்றுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் கட்சி தோற்கடிக்கப்பட்டால் விக்கிரமசிங்கா மீது அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மறுபுறத்தில் முறைமை மாறினால் தேர்தல் முடிவுகள் ஒருவரது பொறுப்பாக மட்டும் இருக்காது. வெஸ்ட் மினிஸ்டர் ஆட்சி முறையின் கீழ், 2020ல் ஏற்படும் ஒரு பொதுத்தேர்தல் தோல்வி, விக்கிரமசிங்காவை கட்சியில் இருந்து அகற்றுவதற்கு உதவி செய்யாது. ஆகவே ஜனதிபதி முறையை ஒழித்து பாராளுமன்ற முறைமைக்கு அரசை மாற்றுவதன் மூலமாக விக்கிரமசிங்காவும்கூட ஆதாயம் அடைகிறார்.

மகிந்த ராஜபக்ஸ

வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ போட்டியிடுவதைத் தடுப்பது எது? அதைத் தடுப்பது ஜனாதிபதி முறைமைதான். நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு வரைமுறைக்கு உட்பட்ட பதவிக்காலம் இருக்கவேண்டும் என்கிற உலக நம்பிக்கை உருவாகியுள்ளது. ஏனவே ஸ்ரீலங்கா நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகம் செய்தபோது அது ஒரு காலவரம்புக்கு உடபட்டிருந்தது. இந்த கால வரம்பு ஜனாதிபதி ராஜபக்ஸவினால் அகற்றப்பட்டது ஆனால் 2015ல் அதிக எதிர்ப்பு இன்றி மீண்டும் அறிமுகப் படுத்தப்பட்டது. ஜனாதிபதி ஒருவர் இரண்டு தவணைகள் மட்டுமே பதவி வகிக்க முடியும் மற்றும் ராஜபக்ஸ ஏற்கனவே இரண்டு முறை பதவி வகித்துவிட்டார். எனவே தற்போதைய அரசியலமைப்பின் கீழ் அவர் மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது.

தற்போது நிலவும் அமைப்பு முறைமையினால் அவர் பாதிக்கப் பட்டிருந்த போதிலும், இன்று ஸ்ரீலங்காவிலுள்ள சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்களில் அவரும் ஒருவராக உள்ளார் என்பதில் சந்தேகமில்லை. அவரது புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன உள்ளுராட்சித் தேர்தல்களில் நம்பிக்கை தரும் வகையில் வெற்றி பெற்றது. அவர் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன வேட்பாளரை முடிவு செய்து அறிவிப்பதோடு வரும் ஜனாதிபதி தேர்தலில் அந்த வேட்பாளருக்கு வெற்றியைப் பெற்றுத் தருவார். ஜனவரி 2020ல் அவர் ஒரு கிங் மேக்கராகத் திகழ்வார்

ராஜபக்ஸ ஒருவரை ஜனாதிபதியாக நியமித்த பின்னர், புதிய ஜனாதிபதி அவரை ஆட்சி செய்வதற்கு அல்லது அவரது அரசாங்கத்தை பின்னாலிருந்து கட்டுப்பாடு செய்வதற்கு மகிந்த அனுமதிப்பரா? ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் பெரும்பாலும் அடுத்து நடைபெறும் பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவே வெற்றி பெறும். மற்றும்; மகிந்த ராஜபக்ஸவால் பிரதமராகவும் வரமுடியும் அத்துடன் அவர் சட்டப்படி ஜனாதிபதியின் கீழ்தான் வேலை செய்யவேண்டும் என எதிர்பார்க்கப்படுவார். அவர் பொதுசன பெரமுனவின் ஜனாதிபதியின் கீழ் வேலை செய்வாரா அல்லது அரசாங்கத்தை ஆதிக்கம் செய்வாரா?

2020ல் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன வெற்றி பெற்றால் இந்தக் கேள்விகள் ஆட்சியைச் சிக்கலாக்குவதற்கான தகுதியைக் கொண்டுள்ளன. ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு இப்போது ஆதரவளித்து, புதிய முறையின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது மகிந்த ராஜபக்ஸவின் தனிப்பட்ட குழப்பங்கள் பலவற்றுக்கு தீர்வாக அமையும். அவரது கட்சி வெற்றி பெற்றால் சட்டபூர்வமான பிரதம மந்திரியாக அவரால் ஆட்சி செய்ய முடியும்.

20வது திருத்தம்

வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது மூலம் இந்த மூன்று சக்தி வாய்ந்த அரசியல் நபர்களும் ஆதாயமடைய முடியும் என்பது தெளிவாக உள்ளது. ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) மற்றும் தமிழ் தேசியக் மூட்டமைப்பு (ரிஎன்ஏ) என்பனவற்றுக்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்து வெஸ்ட் மினிஸ்டர் முறையை திரும்பவும் அறிமுகப்படுத்துவதில் தடை ஏதும் கிடையாது. ஆகவே மேற்குறித்த மூன்று பேரும் இந்த நகர்வுக்கு ஆதரவளித்தால், இந்த முறையை மாற்றும் செயல் திட்டத்துக்கு பாராளுமன்றத்தில் தேவையான பெரும்பான்மை கிடைக்கும். எல்லாப் பெரிய கட்சிகளும் இந்த மாற்றத்துக்கு ஆதரவளிக்கும்போது மக்களின் அனுமதியையும் தேசிய சர்வசன வாக்கெடுப்பு மூலம் வெற்றி கொள்ளலாம்.

அவர்கள் செய்யவேண்டியது என்னவென்றால் ஜேவிபி சமர்ப்பித்துள்ள 20வது திருத்தப் பிரேரணையை மறுசீரமைத்து மாற்றங்களுடனோ அல்லது மாற்றங்கள் இல்லாமலோ அதை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் நீண்ட கால இலக்கினை ஸ்ரீலங்காவாசிகள் அடைவதாக இருந்தால் அதைச் செய்வதற்கு ஏற்ற சிறந்த தருணம் இதுதான் எனத் தெரிகிறது.

தேனீ மொழிபெயர்ப்பு எஸ்.குமார்

Share:

Author: theneeweb