கொழும்புவில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு – 24 பேர் உயிரிழப்பு

 

இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் குறைந்தது 24 பேர் உயிரிழந்திருப்பதாக கொழும்பு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது தற்போதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலரும் காயமடைந்துள்ளனர்.

இதுவரை குறைந்தது 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒருவர் தெரிவித்தார் என்று ஏஎப்பி செய்தி முகமை கூறுகிறது.

காயமடைந்த பலரும் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

மக்கள்

இந்த குண்டு வெடிப்பில் தேவாலயத்தின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல குண்டு செயலிழக்கும் பிரிவினர் மற்றும் விசேஷ அதிரடிப்படையினர் உள்ளிட்ட சில பாதுகாப்பு பிரிவுகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

மக்கள்

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இதில் சில வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீர, இது நாட்டில் குழப்பத்தை உண்டாக்க எடுக்கப்பட்ட முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இது போன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

BBC News

Share:

Author: theneeweb