இலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 137 பேர் உயிரிழப்பு, 440 பேர் காயம்


இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் குறைந்தது 135 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 440க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

12: 50 PM– ஈஸ்டர் பிரார்த்தனைகள் ரத்து

தேவாலயங்களில் தாக்குதல் நடந்துள்ளதை தொடர்ந்து மாலை நடைபெறவிருந்த பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு பாதிரியார் அறிக்கை விடுத்துள்ளார்.

12: 46 PM– கொழும்பு தேசிய மருத்துவமனை நிலவரம்

கொழும்பு தேசிய மருத்துவமனையில் 45 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதில் ஒன்பது பேர் வெளிநாட்டவர்கள்.

12:36 PM நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்’

கொழும்புவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடந்த இடத்தில் பிபிசியின் சிங்கள சேவையின் செய்தியாளர் அசாம் அமீன் உள்ளார்.

அவர் கூறுகையில், “அமைதியாக இருந்த ஞாயிற்றுக்கிழமை காலை வேலையில், அனைவரும் ஈஸ்டர் பண்டிகையில் இருந்தனர். திடீரென்று இந்த தாக்குதல் நடந்தது.

தேவாலயத்தில் உள்ள சில பாதிரியார்களிடம் நான் பேசிய போது, அவர்கள் மிகவும் அதிர்ச்சியில் இருந்தார்கள். புலனாய்வு போலீஸாரும் அதிர்ச்சியில் உள்ளனர். இது ஒரு தன்கு திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலாகும்.

தேவாலயத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் பேசியபோது, அவரும் அதிர்ச்சியில் இருந்தார். இதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்பதை தற்போது கூற முடியாது.

2009ஆம் ஆண்டுக்கு பிறகு, இவ்வாறான ஒரு சம்பவத்தை இலங்கை பார்த்ததில்லை. இலங்கை மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

அனைத்து முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது ”

கொழும்பு பொது மருத்துவமனை, கொழும்பு கலுபோவில மருத்துவமனை, மட்டக்களப்பு மருத்துவமனை மற்றும் நீர் கொழும்பு ஆதார மருத்துவமனை ஆகிய இடங்களில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொழும்புவில் குறைந்தது 47 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அந்தப் பகுதியில் இருக்கும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீர்கொழும்புவில் கட்டுபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 50 பேர் வரை உயிரிழந்தக்கலாம் என்று அங்கிருக்கும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் இதுவரை 35 பேர் இறந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்தபோது சீயோன் தேவாலயத்தில் 33 பேர் உயிரிழந்தனர். பின்னர் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் இறந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு மோட்டார் சைக்களில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததால், அருகில் இருந்த பிற மோட்டார் சைக்கிள்களில் இருந்த பெட்ரோல் மூலம் பாதிப்பு அதிகமானதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்துள்ள பலரும் சிகிச்சைக்காக கொழும்பு மருத்துவமனை, மட்டக்களப்பு போதனா மருத்துவமனை, நீர்கொழும்பு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கையின் போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb