தெஹிவலாவில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு – பலர் காயம்


இன்று காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து நண்பகல் இரண்டு மணியளவில், தெஹிவலாவில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

தெஹிவலாவில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடம் ஒன்றில் இந்த குண்டு வெடித்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உயிரியல் பூங்கா மூடப்பட்டது.

கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் குறைந்தது 185 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 471க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

உள்நாட்டுப் போர் முடிந்தபின் அங்கு நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாக இன்றைய தாக்குதல் கருதப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb