இலங்கை குண்டுவெடிப்பு: தேசிய அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் சிறிசேன

இலங்கையில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில், 6 தாக்குதல்கள் தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு தேசிய அவசர நிலையை அதிபர் சிறிசேன பிரகடனப்படுத்தியுள்ளார் என ஏஎன்ஐ மற்றும் ராய்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இன்று நள்ளிரவு முதல் இந்த அவசர நிலை அமலுக்கு வரும்.

இலங்கையில் நேற்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் அது தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

இலங்கைபடத்தின் காப்புரிமை Anadolu Agency

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் 6 தாக்குதல்கள் குண்டுதாரிககளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் என போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலிஸ் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தாக்குதல்கள் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை அதிபர் சிறிசேன அமைத்துள்ளார்.

ஏப்ரல் 23 – இலங்கையில் துக்க தினம் அனுசரிப்பு

இலங்கையில் ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 290 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, இலங்கையில் நாளை துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஊரடங்கு உத்தரவு

இன்று இரவு 8 மணியிலிருந்து நாளை காலை 4 மணி வரை போலீஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6 மணியிலிருந்து இன்று காலை 6 வரை போலீஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து.

அமெரிக்கா எச்சரிக்கை

“இலங்கையில் மேலும் பல தாக்குதல்களை நடத்துவதற்கு தீவிரவாத குழுக்கள் திட்டமிட்டு வருகின்றன” என்று இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அரசு விடுத்துள்ள அந்த எச்சரிக்கை குறிப்பில், “தீவிரவாதிகள் சிறிது அல்லது எவ்வித எச்சரிக்கையுமின்றி சுற்றுலா தலங்கள், போக்குவரத்து நிலையங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டென்மார்க் தொழிலதிபரின் குழந்தைகள் உயிரிழப்பு

டென்மார்க்கை சேர்ந்த தொழிலதிபரின் மூன்று குழந்தைகள் நேற்று நடைபெற்ற தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் விடுமுறைக்காக அவர்கள் இலங்கைக்கு வந்திருந்தனர். அவர்களின் பெயர் மற்றும் வயது விவரங்கள் வெளியிடவில்லை.

46 வயதான ஏண்டர்ஸ் ஹால்ச் பாவல்சன் ஏஸஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவர்.

தாக்குதல்கள் குறித்து விளக்கம்?

இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சகத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கையில், தாக்குதல்கள் நடத்தப்படும் விதம் தொடர்பில் தெளிவூட்டப்பட்ட ஆவணமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

தாக்குதல் குறித்து முன்னரே எச்சரிக்கை? நடவடிக்கை எடுக்காதது ஏன்: இலங்கை அமைச்சர் கேள்விபடத்தின் காப்புரிமை Getty Images

இதன்படி, தற்கொலை குண்டு தாக்குதல், துப்பாக்கிகளை கொண்டு தாக்குதல் நடத்துதல், கத்தியை பயன்படுத்தி தாக்குதல் நடத்துதல், வாகனத்தின் ஊடாக தாக்குதல் நடத்துதல் போன்ற தாக்குதல் விதங்கள் தேசிய புலனாய்வு பிரிவினரால் முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்திலேயே கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர் ஆணையம் ஆகியன இலக்கு வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆயுதங்கள் மீட்பு

பதுளை – தியதலாவை பகுதியில் நடத்தப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போது, வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

இந்த சுற்றி வளைப்பு விமானப் படையினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டதாக விமானப் படை பேச்சாளர் குரூப் கெப்டன் கியான் செனவிரத்ன பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

 

இந்த சுற்றி வளைப்பின் போது, ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தியதலாவை பகுதியில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

உடைந்த கண்ணாடிகள்

தாக்குதலில் சேதமடைந்த கிங்க்ஸ்பரி நட்சத்திர விடுதி கண்ணாடிகள் உடைந்து கீழே சிதறிக் கிடக்கின்றன.

கிங்கஸ்பரி விடுதிபடத்தின் காப்புரிமை EPA

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?- அமைச்சர் கேள்வி

இலங்கையிலுள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர் ஆணையம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் காணப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கைபடத்தின் காப்புரிமை Getty Images

தேசிய தவுத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் தாயிம் மொஹமட் சஹரானின் தலைமையில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு பிரிவினரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையிலுள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர் ஆணையம் ஆகியன இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல்களின் பிரகாரம், தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்ட சிலர் குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களின் முழுமையான தகவல்களும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு, பாதுகாப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை திட்டமிட்ட சந்தேக நபர், சமூக வலைதளங்களின் ஊடாக இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாகவும் புலனாய்வு பிரிவின் தகவல்களை மேற்கோள்காட்டி, பாதுகாப்பு அமைச்சகத்தினால் அந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இருவர் கைது

வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் தம்புள்ளை பகுதியில் வைத்து நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காத்தான்குடி மற்றும் மாவனெல்லை பகுதிகளை சேர்ந்தவர்கள் என போலீஸ் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் போலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆறு இந்தியர்கள் பலி

இலங்கையில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 17 வெளிநாட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த லக்‌ஷ்மி, நாராயண் சந்திரசேகர், மற்றும் ரமேஷ் ஆகிய மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் தெரிந்திருந்தார்.

இன்று கொலும்புவில் உள்ள இந்திய உயர் ஆணையம், கே.ஜி.அனுமந்த்தரயப்பா மற்றும் எம்.ரங்கப்பா ஆகிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்திருந்தது.

இதேவேளை, இலங்கையில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் சுமார் 27ற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிந்திர ஆரியசிங்க தெரிவித்தார்.

தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு

இலங்கை

வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணியுடன் இந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதன்படி, இன்று காலை முதல் அரச பஸ்கள், தனியார் பஸ்கள், ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.

அத்துடன், இன்றைய தினம் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அறிவித்திருந்தது.

BBC

Share:

Author: theneeweb