பதவி பறிக்கப்பட்ட சூடான் அதிபர் வீட்டில் ரூ.902 கோடி சிக்கியது

பதவி பறிக்கப்பட்ட சூடான் அதிபர் வீட்டில் ரூ.902 கோடி சிக்கியது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சூடான். அங்கு கடந்த 1993-ம் ஆண்டு முதல் அதிபர் பதவி வகித்து வந்தவர், உமர் அல் பஷீர் (வயது 75).

இவர் உள்நாட்டுப்போரின்போது, போர்க்குற்றம் செய்ததாக சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அவருக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திவந்தனர். இதற்கிடையில் அங்கு விலைவாசி உயர்வு உச்சத்தை எட்டியதால் பெரும் அவதிக்குள்ளான மக்கள் அதிபரை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக கடந்த 11-ந் தேதி அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. உமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து இடைக்கால ராணுவ சபை அமைக்கப்பட்டு அதன் தலைவராக ராணுவ தளபதி அவாத் இப்ன் ஆப் பொறுப்பு ஏற்றார்.

ஆனால் இடைக்கால ராணுவ சபையும் முந்தைய அரசின் அங்கம் என கூறி மக்கள் போராட்டத்தை தொடர்ந்ததால், அவர் ஒரே நாளில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பின்னர் புதிய தலைவராக பொறுப்பு ஏற்ற அப்தல் பட்டா பர்கான் இரவோடு இரவாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததோடு, அரசு அதிகாரிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் தள்ளினார்.

இதனால் நாட்டில் உடனடியாக மக்களாட்சியை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சூடானில் தொடர்ந்து அமைதியற்ற சூழல் நீடிக்கிறது.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் அதிபர் உமர் அல் பஷீரின் வீட்டில் நேற்று ராணுவ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது எண்ணற்ற சூட்கேஸ்களில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது. அதில், சூடான் நாட்டு பணமான பவுண்டு மட்டும் இன்றி, அமெரிக்க டாலர் மற்றும் ஐரோப்பாவின் யூரோவும் இருந்தது.

அதன்படி 5 பில்லியன் சூடான் பவுண்டு, 3 லட்சத்து 51 அமெரிக்க டாலர் மற்றும் 6 மில்லியன் யூரோ என ஒட்டுமொத்தமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.902 கோடியே 7 லட்சம் சிக்கியது.

உமர் அல் பஷீர், லஞ்சம் பெற்றது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டு வரும் நிலையில், அவரது வீட்டில் இவ்வளவு பெரிய தொகை கைப்பற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைப்பட்டு, உமர் அல் பஷீரிடம் விசாரணை நடத்தப்படும் என அந்நாட்டு அட்டார்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb