பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் ; மஹிந்த

இலங்கையில் மிகவும் மோசமான வகையில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெறப்போவதாக உளவுத்துறை அறிவித்தும் அதனை பிரபுக்களுக்கு, அதிகாரிகளுக்கு, அமைச்சர்களுக்கு அறியப்படுத்தியும் பொதுமக்களை எச்சரிக்காமல் போனது ஏனென  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இந்த கொடூரமான சம்பவத்திற்கு முழுமையான பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுகொள்ள வேண்டும். ஜனாதிபதியும் -பிரதமரும் பதில் கூறியாக வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் பல பொதுமக்கள் பலியானமை மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான சம்பவங்களை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது. அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 40 க்கும் அதிகமான வெளிநாட்டு பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கையும் மிகவும் நெருக்கமாக செயற்படும் அமெரிக்க நாட்டு பிரஜைகளே அதிகமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஒரு புனிதமான நாளில் இவ்வாறு பொதுமக்களை பறிகொடுத்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்.

இலங்கையில் இவ்வாறான ஆயுத தாக்குதல் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது தெரிந்தும் புலனாய்வு பிரிவினர் அதனை தெரியப்படுத்தியும் இந்த அச்சுறுத்தலை மக்களுக்கு தெரியப்படுத்தாதது ஏன். இதற்கு அரசாங்கம் முழுமையாக பொறுப்புக் கூறியாக வேண்டும்.

இவ்வாறான தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதை நாம் பல சந்தர்ப்பங்களில் அரச தரப்பினருக்கு வலியுறுத்தினோம். ஆனால் அப்போதெல்லாம் அரசாங்கம் எம்மை குறைகூறி தம்மை நியாயபடுத்தும் வேலையை மட்டுமே செய்தனர்.  இப்போது நாட்டில் அசம்பாவிதம் நடந்தேறிவிட்டது.

இப்போதும் தம்மை நியாயபடுத்த புலனாய்வு மீது பழியை சுமத்தி தப்பித்துகொள்ள முயற்சித்து வருகின்றனர். பிரதமர் ஜனாதிபதி மீது பழிசுமத்துவதும் ஜனாதிபதி இன்னொருவர் மீது பழி சுமத்துவதும் என இவ்வாறு ஒவ்வொருவரும் தப்பித்துக்கொள்ளவே முயற்சிக்கின்றனர்.

இவ்வாறு ஒரு சம்பவம் நடக்கும் என்பது தெரிந்தும் அரசாங்கம் அதனை தடுக்காது வேடிக்கை பார்த்தனர் என்பது அவர்களின் கருத்துக்களின் மூலமே தெரிகின்றது.

Share:

Author: theneeweb