இலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு:

 

கொழும்பு கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடிகுண்டு ஒன்றை வெடிக்க வைத்து அதனை செயலிழக்க செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அப்பகுதியில் இருந்து மக்கள் பதறியடித்து ஓடும் காட்சிகளை கார்டியன் செய்தியாளர் மைக்கல் சபி ட்வீட் செய்துள்ளார்.

வெடிகுண்டை செயலிழக்க முயற்சித்தபோது, குண்டு வெடித்ததாக பிபிசி செய்தியாளர் அசம் அசீம் கூறுகிறார்.

குண்டு வெடித்த பிறகே அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ், தீயனைப்பு வாகனம் முதலியவை வந்ததாகவும், தேவாலயம் அருகே நின்றிருந்த வாகனம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை வெடிக்கவைப்பதற்காக கொண்டு சென்றபோது வெடிகுண்டு தாமாகவே வெடித்திருப்பதாகத் தெரிகிறது என்றும், கொழும்பில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்து பிற்பகலில் வெடித்த வேன், ஞாயிறன்று தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்தியது என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.

அவசர நிலை பிரகடனம்

இலங்கையில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில், 6 தாக்குதல்கள் தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு தேசிய அவசர நிலையை அதிபர் சிறிசேன பிரகடனப்படுத்தவுள்ளார்.

ஏஎன்ஐ மற்றும் ராய்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் இதனை உறுதி செய்கின்றன.

இன்று நள்ளிரவு முதல் இந்த அவசர நிலை அமலுக்கு வரும்.

இந்நிலையில் பிற்பகல் மூன்று மணியளவில் கொழும்புவில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் 87 டெடனேடர்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையில் நேற்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் அது தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் 6 தாக்குதல்கள் குண்டுதாரிககளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் என போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலிஸ் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தாக்குதல்கள் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை அதிபர் சிறிசேன அமைத்துள்ளார்.

யார் இந்த தேசிய தவுஹித் ஜமாத்?

இத்தாக்குதல்களுக்கு பின்னால் தேசிய தவுஹித் ஜமாத் இருக்கலாம் என்று இலங்கை அதிகாரிகள் நம்புகின்றனர்.

கடந்த ஆண்டு ஒரு சிறிய முக்கிய சம்பவத்தில் ஈடுபட்டிருந்த குழு, தவுஹித் ஜமாத் அமைப்பாக இருக்க வாய்ப்பிருக்கலாம் என சர்வதேச நெருக்கடி குழு என்ற அமைப்பின் இலங்கைக்கான இயக்குநர் அலன் கீனன் தெரிவித்தார்.

“கடந்த டிசம்பர் மாதம் மர்வனெல்லாவில் சில புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டன. அப்போது சில இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களின் போதகராக அறியப்பட்ட நபரின் பெயர் புலனாய்வு ஆவணங்களில் வெளியாகியுள்ளது” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

போப் பிரான்சிஸ் கண்டனம்

போப்

இலங்கையில் நடந்த தாக்குதல்களுக்கு போப் பிராண்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புனித பீட்டர் சதுக்கத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் பேசிய அவர், இத்தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த அனைவருக்கும் பிரார்த்தனை செய்வதாக கூறினார்.

BBC

 

 

 

 

 

 

Share:

Author: theneeweb