இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக வேளாங்கண்ணி பேராலயத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கையில் 8 இடங்களில் நேற்று முன்தினம் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் 180 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை கொண்ட 53 மீனவ கிராமங்களில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 19 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உள்ளிட்ட இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி கடற்கரை சாலை மற்றும் பேராலயத்தின் நான்கு புறங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் தீவிர சோதனைக்கு பிறகே ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்குரிய படகுகள் மற்றும் நபர்களை கண்டறிந்தால் பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
Share:

Author: theneeweb