கண்ணீர் அஞ்சலிக் குறிப்புகள் “ஏலி! ஏலி! லாமா சபக்தானி ” – ” என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் “

கண்ணீர் அஞ்சலிக் குறிப்புகள்

“ஏலி! ஏலி! லாமா சபக்தானி  என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் “

                                                                              முருகபூபதி

கடந்த 21 ஆம் திகதி முதல் மனம் நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. மிகுந்த மன உளைச்சலுடன்தான் இந்தப்பதிவை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.

புலம்பெயர்ந்து வந்தபின்னர், எமது தாயகத்தில் நிகழ்ந்த வன்முறைகளின்போதும், முள்ளிவாய்க்காலில் இன்னுயிர்கள் அழிக்கப்பட்ட காலப்பகுதியிலும், சுநாமி உட்பட இயற்கை அநர்த்தங்கள் வந்தவேளையிலும் இருந்த மனநிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டிருக்கும் எனக்கு,  எனது  மனதில்  அந்தகாரம் சூழ்ந்திருப்பதாகவே உணருகின்றேன்.

அவ்வாறன மனத்தாக்கத்திற்கான காரணத்திற்குட்பட்ட  சொல்ல முடிந்த கதைகள் பல இருக்கின்றன.

நான் பிறந்து தவழ்ந்து வளர்ந்த,  கல்வி பயின்ற நடமாடித்திரிந்த எங்கள் நீர்கொழும்பூரிலும் யேசுநாதர் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நூறுக்கும்  மேற்பட்ட எமது சகோதர சகோதரிகள் குழந்தைகள் தமது இன்னுயிரைத்துறந்துள்ளனர்.

இயேசுகிறிஸ்து ஆறுமணிநேரம் சிலுவையில் தொங்கினார். முதல் மூன்று மணி நேரங்கள் அவர் ரோம வீரர்களாலும், மற்றவர்களாலும், அடிக்கப்பட்டு, இழிவாக பேசப்பட்டு, எள்ளி நகையாடப்பட்டு, வேதனைகளை அனுபவித்தார். அவற்றை எல்லாம் பொறுமையாக பொறுத்துக் கொண்டார். ஆறாம் மணி நேரம் முதல்,  ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் அந்தகாரம் பூமியை மூடி கொண்டது.

                      அந்த ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். – (மத்தேயு 27:45-46)

இந்த வாசகங்களை ஏற்கனவே படித்திருக்கின்றேன். கடந்த வெள்ளிக்கிழமை  யேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட  தினம். அதனால் அதனை பெரிய வெள்ளி என்று தமிழிலும்  Good Friday என்று ஆங்கிலத்திலும் அழைப்பர்.

அத்தகைய ஒரு துக்க  தினத்தில் தேவாலயங்கள் சென்று வழிபட்ட மக்கள், யேசுபிரான் உயிர்த்த ஞாயிறு தினத்தில் காலையிலேயே  அங்கு மீண்டும் வந்து பிரார்த்தித்துவிட்டு,  சம்மணசுகள் புடைசூழ யேசுவின் திருச்சொரூபம் பவனிவரும் காட்சியை கண்டுகளிப்பார்கள்.

அதற்கான தருணம் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அம்மக்களில் பலர் பலிகொள்ளப்பட்டுவிட்டனர். கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார், நீர்கொழும்பு கட்டுவபிட்டிய புனித செபஸ்தியார் , மட்டக்களப்பு சீயோன் தேவாலயங்களில் மக்கள் பலியாகியுள்ளனர்.

தலைநகரில் நட்சத்திர விடுதிகளில் ஈஸ்டர் விடுமுறையில் வந்து தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் உட்பட உள்நாட்டினர் பலரும் கொல்லப்பட்டனர். யேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தில் முந்நூறுக்கும் அதிகமான மக்கள் உயிர் துறந்துள்ளனர்.

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மத்தியிலிருக்கும் சீயோன் தேவாலயத்தின் ஏற்பாட்டில் கடந்த சிலவருடங்களாக மக்கள்,  ஆதார மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்காக இரத்ததானம் வழங்கிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தி.

அண்மையிலும் இந்தத்  தேவாலயத்தின் ஏற்பாட்டில் போதகர் றொசான் மகேசன் தலைமையில் இரத்த தான நிகழ்வொன்று நடைபெற்றது. மருத்துவர் விவேக் தலைமையில் தாதியர் குழுவொன்று அந்த நற்பணிகளை கவனித்திருக்கிறது.   இன்று அதே தேவாலயத்தில் குண்டுத்தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்தவர்களுக்கு  இரத்த வங்கிகள்  உதவவேண்டியிருப்பதை பார்க்கும்போது, ” என் தேவனே –  என் தேவனே ஏன்  எம்மை இப்படிக்கைவிடுகிறீர்? ” என்றுதான் கேட்கத்தோன்றுகிறது!

எங்கள் நீர்கொழும்பூரில் பெரும்பான்மையினராக செறிந்து வாழ்பவர்கள் கிறீஸ்தவ மதத்தைச்  சேர்ந்தவர்களாயினும், மூவின மக்களும் நீண்டநெடுங்காலமாக அங்கு வாழ்கிறார்கள்.  நூற்றுக்கணக்கான  பெரிய – சிறிய கிறீஸ்தவ தேவாலயங்கள் அங்கிருப்பதனால், அதனை சின்னரோமாபுரி  என்றும் வரலாற்று ஏடுகளில் வர்ணித்திருக்கிறார்கள்.

எனினும் சைவர், இஸ்லாமியர், பௌத்தர்களின் புனித வழிபாட்டிடங்களுக்கும் குறைவில்லை. ஒரு காலத்தில் நீர்கொழும்பு கடற்கரை வீதியில் மூன்று ஆலயங்கள்தான் இருந்தன. ஆனால், தற்காலத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆலயங்களுடன்  சபரிமலை அய்யப்பன் ஆலயமும்  தோன்றிவிட்டது.

பிரதான வீதியில் கிழக்குப்புறமாக சென்மேரீஸ் தேவாலயம் அமைந்திருக்கிறது. அந்த வீதியின் மற்றும் ஒரு எல்லையில் முன்னக்கரைக்கும் டச்சுக்கோட்டைக்கும் மத்தியில் புரட்டஸ்தாந்து தேவாலயமும் அமைந்துள்ளது.

மேற்குப்புறமாக இஸ்லாமிய மக்களின் வணக்கத்தலமான பள்ளிவாசலும்,  இவை இரண்டுக்கும் மத்தியில் மூன்று சைவாலயங்களும்                                                ( ஶ்ரீமுத்துமாரியம்மன் – ஶ்ரீ சித்தி விநாயகர் – ஶ்ரீ சிங்கமா காளி அம்மன் கோயில்கள்) அமைந்துள்ளன. வடக்குப்புறம் புனித செபஸ்தியார் தேவாலயமும், கிழக்குப்புறம் புனித பீட்டர்ஸ் தேவாலயமும் அமைந்துள்ளன.

இப்பகுதியில் வசிக்கும் மூவின மக்களுக்கும் பள்ளிவாசலிருந்து பாங்கு ஓசையும், ஆலயங்கள் – தேவாலயங்களிலிருந்து மணியோசையும் கேட்டவண்ணமிருக்கும்.  ஒரு காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் பாங்கு ஓசையையும் அந்த மணியோசையையும் கவனித்து நேரத்தை கணித்துக்கொண்டார்கள்.

நீர்கொழும்பில் எனது பள்ளி  வாழ்க்கை சைவப்பாடசாலையில் ஆரம்பித்து, பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரியில் தொடர்ந்து,  மீண்டும் நீர்கொழும்பில் பிரபல்யமான இஸ்லாமிய பாடசாலையான பெரியமுல்லை அல் – ஹிலால் மகா வித்தியாலயத்தில் நிறைவடைந்தது. அன்றைய ஆறாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையும், க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையும் பிரபலமான சிங்களப்பாடசாலையான ஹரிச்சந்திரா மகா வித்தியாலயத்தில் நடந்தன.

குறிப்பிட்ட ஹரிச்சந்திரா மகா வித்தியாலயத்திற்கு சமீபமாகத்தான் கடந்த 21 ஆம் திகதி குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் அமைந்துள்ளது.

நீர்கொழும்பு – சிலாபம் வீதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பெரியமுல்லை பிரதேசத்தில்தான் புனித அந்தோனியார் தேவாலயம் அமைந்துள்ளது. சிறிய வயதில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் எனது அம்மா என்னையும் அழைத்துக்கொண்டு அந்த தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு வருவார். அந்தப்பழக்கம் அங்கிருந்து வெளிநாட்டிற்கு புலம்பெயரும் வரையிலிருந்தது.  கொழும்பில் பணி நிமித்தம் நீர்கொழும்பு அந்தோனியாரிடம் செல்லமுடியாதபோது, கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியாரிடம் சென்று வருமாறு அம்மா பணித்த கட்டளையையும் நிறைவேற்றியிருக்கின்றேன்.

நீர்கொழும்பு ஹங்குருக்காரமுல்லை என்ற இடத்தில் அமைந்துள்ள பெரிய பெளத்த விஹாரைக்கும் பாட்டியுடனும் அம்மாவுடனும் பல தடவைகள் சென்று அரசமரத்தின் நிழலில் சிலையாக அமர்ந்து தவமியற்றும் புத்தர் பகவானுக்கும் மலர் அஞ்சலி செலுத்தியிருக்கின்றேன்.

பள்ளிவாசல்களுக்குள் பிரவேசிக்க முடியாது போனாலும், அல் – ஹிலால் மகாவித்தியாலயத்தில் இஸ்லாமிய சமயம் சார்ந்த பிரார்த்தனைகளின்போது எழுந்து மௌனமாக நின்றுள்ளேன். வித்தியாலயம் ஆரம்பிக்கும் போது தினமும் நடக்கும் Assembly இல், அதிபர் ஜப்பார் அவர்கள் நிகழ்த்தும் உரைகளில் உதிர்க்கும் புனித திருக்குர் ஆன்  வாசகங்களை கேட்டு வளர்ந்திருக்கின்றேன்.

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்த்துக் கொள்ளும் நோக்கில் “இப்தார்” நோன்பு துறக்கும் நிகழ்வுகள்  நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில்  நிகழ்ந்திருப்பதையும் அறிவேன்.

” ஓரிறை கொள்கையை போதித்த முஹம்மது நபி ( ஸல்) அவர்கள் மக்கள் அனைவரும் ஓர் நிறை என்பதையும் எடுத்தியம்பினார்கள். மனிதனை மனிதன் அடிமைப்படுத்தி கொடுமை புரிதல் தகாது, என்றே அல்லாஹ் திருமறையில் அடிமை விடுதலை குறித்து சொல்லியிருக்கிறார். அடிமையை விடுதலை செய்வது, அகபா என்னும் உயரிய தர்மம் ஆகும். அந்தத் தர்மம் புரிவோரின் புகலிடம் சொர்க்கம் ஆகும்” எனவும், ” உழைப்பவனின் கூலியை அவனது வியர்வை காய்வதற்கு முன்னர் கொடுத்துவிடு” என்றும் அதிபர் ஜப்பார் அவர்கள்,  புனித திருக்குர் ஆனிலிருந்து எடுத்தியம்பிய வாசகங்கள் இன்றளவும் எனது நினைவில் தங்கியிருக்கின்றன.

பாடசாலைப்பருவத்தில், சைவ , பௌத்த , இஸ்லாமிய , கிறீஸ்தவ மாணவர்களுடன் நட்புறவோடும் வாழ்ந்தவாறு,  இந்தச்சமயங்கள் சார்ந்த ஆசிரியர்களிடமும் மூன்று மொழிகளும் கற்றிருப்பதுடன், பின்னாளில் கொழும்பு மருதானை பெளத்த விஹாரையிலும் கம்பஹா மாவட்டத்தில் நாலந்தா வித்தியாலயம் மற்றும் உடுகம்பொல ஶ்ரீசுதர்மாணந்த விஹாரை ஆகியவற்றில் பல சிங்கள ஆசிரியர்களுக்கும் பௌத்த பிக்குகளுக்கும் தமிழ் கற்பித்துமிருக்கின்றேன்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் சேர்ந்ததன் பின்னர், மூவின எழுத்தாளர்களுடனும் ஒன்றிணைந்து தேசிய ஒருமைப்பாடு மாநாடு உட்பட பல இன ஐக்கிய கருத்தரங்களிலும் பங்கேற்று  இயங்கியமையால், எமது தாயகத்தில் இனம் சார்ந்த வன்முறைகள் வெடிக்கும்போதெல்லாம், மனம் கலங்கி உளைச்சல்களுக்கு ஆளாகியிருக்கின்றேன்.

மீண்டும் அத்தகையதோர் தருணத்திலிருந்து இந்தப்பதிவை எழுதநேர்ந்துள்ளது.

இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் எங்கள் ஊரும் பாதிக்கப்பட்டதையடுத்து,  உலகின் பல பாகங்களிலுமிருந்து நண்பர்கள், தெரிந்தவர்கள் பலர் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்து, எமது உறவினர்களுக்கும் ஏதும் நடந்துவிட்டதா? எனக்கேட்டு விசாரித்தனர்.

“ஆம், அங்கு கொல்லப்பட்டவர் அனைவரும்  எமது உறவுகள்தான்” என்றேன்!    ” யாதும் ஊரே யாவரும் கேளீர் “ என்ற மரபில் வளர்ந்திருப்பவர்களுக்கு, –     ” ஓரிறை கொள்கையை போதித்த முஹம்மது நபி ( ஸல்) அவர்கள் மக்கள் அனைவரும் ஓர் நிறை என்பதையும் எடுத்தியம்பினார்கள்.” என்ற வாசகங்களை கேட்டு வளர்ந்தவர்களுக்கு, அந்தக்கொடூர சம்பவங்களில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும்,  பாதிக்கப்பட்டவர்களும் உறவினர்கள்தான்!

இரண்டு ஆண்டுகளின் பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் எங்கள் நீர்கொழும்பூருக்கு சென்றிருந்தேன். நான் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்காக கிளிநொச்சியில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாரும் எமது குடும்ப நண்பருமான கிளிநொச்சியில் வதியும் கருணாகரனையும் அவரது துணைவியாரையும் அழைத்திருந்தேன்.

ஒரு நாள் அவர்களுடன் சென்று வந்தோரை வாழவைக்கும் எமது சிங்கார நீர்கொழும்பின் வனப்பையும் எழில்கொஞ்சும் நெய்தல் நிலத்தின் மாண்பையும் கடற்கரையையும் புராதன சிறப்பு வாய்ந்த இடங்களையும் காண்பித்தேன்.

அவர்கள்,  இந்தப்பதிவின் தொடக்கத்தில் வரும் தேவாலயங்கள், சைவாலயங்கள், மசூதிகள், மற்றும் கடற்கரையோடு எழுந்திருக்கும் நூறுக்கும் மேற்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள், மற்றும் விருந்தினர் விடுதிகள், வெளிநாட்டினரை கவரும் காட்சியகங்கள், உள்ளுர் கைவினைப்பொருட்களின் விற்பனை நிலையங்களை கண்டு வியந்தார்கள்.

கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு,  கறுப்பு ஞாயிறாக மாறியதை கேள்வியுற்று கலங்கிப்போன கருணாகரனும் உடனடியாக தொடர்புகொண்டார். அவர் அண்மையில் பார்த்து ரசித்துவிட்டு வந்த பிரதேசத்தில் கடும்கோடை வந்தது. அதன்பின்னர் வரவேண்டிய மழைக்குப்பதிலாக  கண்ணீர் மழைதான் அங்கு தற்போது  பொழிந்துகொண்டிருக்கிறது.

நண்பர் கருணாகரன்,  தனது நீர்கொழும்பு அனுபவங்களை தனது மனதில் பொதிந்து அந்த பசுமையான நினைவுகளை எனக்கு எழுதியிருந்தார்.

நாம் பள்ளியில் படிக்கின்ற காலத்திலும் அதற்குப்பின்னரும் கேள்வியுற்றிராத மதம் , இனம், மொழி சார்ந்த பல பயங்கரவாத – தீவிரவாத இயக்கங்கள் பற்றி தற்காலத்தில் அறிகின்றோம்.  இவற்றுக்குப்பின்னால் சர்வதேச வலைப்பின்னல் படர்ந்திருப்பது நன்கு  தெரிகிறது.

இந்தப்பின்னணியில், வளர்முகநாடாக விளங்கும் எங்கள் இலங்கை மணித்திருநாட்டின் ஆட்சியாளர்களும் பாதுகாப்பு விடயத்தில் மக்களும்  எவ்வாறு இந்த சவால்களை எதிர்கொள்ளப்போகிறார்கள்?  பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கும் போதைவஸ்தை முற்றாக தடுப்பதற்கும் புதிய புதிய சட்டங்களை நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைக்கும் அரசியல் தலைவர்களும் நாட்டின் அதிபரும், பிரதமரும், அமைச்சர்களும் ,  புலனாய்வுத்துறையினருக்கு கிடைக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் குறித்து   அசட்டையாக இருப்பது ஏன் ? என்பதுதான் புரியவில்லை!

கடந்த காலங்களில் பாதுகாப்பு கவுன்ஸிலுக்கு பொறுப்பாக இருந்த நாட்டின் அதிபர், பிரதமருடன் ஆலோசிக்கத்தவறிவிட்டார் என்றும் – பொறுப்பான  அமைச்சர் ஒருவர்  அளித்த தகவலை பாதுகாப்புத்துறையினரும் பொலிஸாரும் பொருட்படுத்தவில்லை என்றும் ஊடகங்கள் வாயிலாக அறிவதுடன், அதற்காக அதிபர் மீதும் கண்டனம் தெரிவித்து,  பொலிஸ் மா அதிபரையும் பதவி விலகச்சொல்லும் செய்திகளையும் தெரிந்துகொள்கின்றோம்.

நடந்துள்ள சம்பவங்களை விசாரிக்க மூன்று முன்னாள் நீதியரசர்கள் தலைமையில் ஆணைக்குழுவை அதிபர் நியமிக்கின்றார். சம்பவத்தின் சூத்திரதாரிகள் என சந்தேகத்தின் பேரில் பலர் கைதாகியிருக்கின்றனர்.

மாவனல்லை தாக்குதல்  சம்பவத்திற்கு பின்னர், அடிப்படைவாதக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஶ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தூதுக்குழுவொன்று, இராணுவ புலானாய்வுப்பிரிவின் தலைவரை சந்தித்து பேசியிருந்தது என்று தெரிவித்துள்ளார் இக்கவுன்ஸிலின் தலைவரும் பிரபல ஊடகவியலாளருமான என்.எம். அமீன்.

கடந்த 21 ஆம் திகதி நடந்த தொடர் குண்டுவெடிப்புச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மாவனல்லையிலிருந்தும் சிலர் கைதாகியிருக்கினர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

பிரதமரும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிலரும் தனித்தனியாக  பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து, தங்கள் ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளனர்.

” இயேசுநாதரை நாம் ஈஸா நபி என்று ஏற்றுக்கொண்டுள்ளோம். அவர் மீண்டும் தோன்றுவார் என்றும் நம்புகின்றோம். பயங்கரவாத தாக்குதல்களை கண்டிப்பது அனைவரதும் தார்மீகப்பொறுப்பாகும். அமைதி மற்றும் சமாதானத்தை விரும்புகின்ற பயங்கரவாதத்தை அங்கீகரிக்காத ஆன்மீகப்பரம்பரையில் வளர்ந்தவர்கள் என்ற வகையில், இந்த சோதனையான காலகட்டத்தில் எல்லாம் வல்ல இறைவனிடம் பாதுகாப்புத்தேடுவோம்”  என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கண்டி மாவட்டத்தில் உள்ள கதீப் முஅத்தின்களுக்கான ( பள்ளிவாசல்களில் பாங்கு சொல்பவர்களுக்கான நிதியுதவி)  தகாபுல் நிதியுதவி வழங்கும் நிகழ்வு கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலில்  கடந்த 21 ஆம் திகதி ஞாயிறன்று நடந்தபோது உரையாற்றுகையில் தெரிவித்தார்.

ட்டக்களப்பில் பலியானவர்கள் மற்றும் படுகாயமுற்றவர்களின் உறவினர்களை சந்தித்திருக்கும் வடமாகாண முன்னாள் முதல்வர் சீ. வி. விக்னேஸ்வரனும் தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவும் மட்டக்களப்பு மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைப்பார்த்து ஆறுதல் சொல்லியுள்ளார்.  உலகத் தலைவர்களும் உள்நாட்டில் அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் அமைப்புகளின் தலைவர்களும் சம்பவத்தை கடுமையாக கண்டித்திருக்கின்றனர். அரசும் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியும் வழங்கியிருப்பதுடன் மரணச்சடங்கு செலவுகளையும் பொறுப்பேற்றுள்ளது.  தனியார் மருத்துவமனைகளிலும் காயமுற்றவர்கள் இலவச சிகிச்சை பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

நான் வதியும் பல்லின கலாசார நாடான அவுஸ்திரேலியாவில் தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் அங்கம் வகிக்கும்  இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளைச்சேர்ந்தவர்கள் அங்கம் வகிக்கும் South Asian Public Affairs Council (SAPAC)  என்ற  அமைப்பு உட்பட பல உலகநாடுகளில் இயங்கிவரும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து இலங்கை அரசுக்கு ஆழுத்தம் கொடுத்துள்ளன.

இவையெல்லாம் உடனடி தற்காலிக நிவாரணங்கள்தான். நிரந்தரமான நீடித்து நிலைத்திருக்கவேண்டிய  அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்கவேண்டிய பொறுப்பு யாரைச்சார்ந்திருக்கிறது?

2009 ஆம் ஆண்டிற்குப்பின்னர் இலங்கை மீண்டும் உலகின் கவனத்திற்குள்ளாகியிருக்கிறது. அதற்கு, யேசு உயிர்த்த தினத்தில் கிறீஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதலில்  நடந்திருக்கும் படுகொலைகளும் வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் தங்கியிருந்த ஹோட்டல்களில் நடந்திருக்கும் தற்கொலைக்குண்டு தாக்குதல்களும்தான் பிரதான காரணம்.  பயங்கரவாதிகளின் இலக்கு என்ன? என்பது,  இலங்கையின்  புலனாய்வுப்பிரிவுக்கு இனியாவது புரிந்திருக்கும்.

அரசியல் கட்சிகள் இனிவரும் தேர்தல்களை கவனத்தில்கொண்டு அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முனையாமல், தேசத்தின் எதிர்காலத்தின் நலன்கருதி பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயற்படவேண்டிய காலம் இதுவாகும்.  எங்கள் தேசம் சமகாலத்தில் முகம்கொடுத்துவரும் பாரிய அச்சுறுத்தல் போதைவஸ்து கடத்தலும், பாவனையுமாகும். அதனையும் முறியடித்துக்கொண்டு மற்றும் ஒரு அச்சுறுத்தலை பயங்கரவாதம் என்ற பெயரில் சந்தித்துள்ளது.

அவுஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து உட்பட ஒன்பது நாடுகளில் வசிப்பவர்கள் இலங்கைக்கு வருவதற்கு எதிர்வரும் மே மாதம் முதல் சுமார் ஆறுமாத காலத்திற்கு  விசா எடுக்கவேண்டியதில்லை என்ற யோசனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருக்கும் இலங்கையர் தாயகம் திரும்பி,  மூலதனமிட்டு தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்கலாம். வாருங்கள். வந்து எங்கள் தேசத்தின் முன்னேற்றத்திற்கு உதவுங்கள் என்று இலங்கை அரச அதிபர் மைத்திரி உட்பட சில மாகாண ஆளுநர்களும் கடந்த காலங்களில் தெரிவித்துவந்தார்கள்.

தேயிலை, ரப்பர், கொக்கோ, தெங்கு முதலான ஏற்றுமதி வர்த்தகத்தில் பாரிய பின்னடைவுகளை சந்தித்திருக்கும் எங்கள் தேசம், உல்லாசப்பயணிகளை கவருவதற்காகவும் சில திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு எண்ணியிருந்த காலப்பகுதியில்,  உயிர்த்த ஞாயிறு உயிர் குடித்த ஞாயிறாக மாறியிருக்கிறது!?

 என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் ” என்று முறையிட்டு  சிலுவையில் அறையப்பட்டு,   அன்றையதினம் உயிர்தெழுந்த யேசுபிரானை வணங்கச்சென்ற   அந்த மக்களின்  மரண ஓலமும் அதே தொனியில்  என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று  உள்ளுணர்வில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

யேசுபிரான்  மட்டுல்ல,  எங்கள் தேசமும் சிலுவையில்தான் அறையப்பட்டுள்ளது! எப்போது உயிர்த்தெழும்?

எங்கள் தேசம் கடக்கவேண்டிய நெருக்கடியான தூரம் இன்னும் அதிகம்தான்!

Share:

Author: theneeweb