தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாத இயக்கத்தை தடை செய்ய வேண்டும்

உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கைத்தொழில் வணிப அலுவல்கள் நீண்ட காலமாக இடம்பெயர்ந்தவாகளின் மீள்குடியேற்றம் தொழில் பயிற்சி திறன் ஆற்றல் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அவசரகால சட்டத்திற்கான விதிமுறைகள் தொடர்பான பிரேரணை மஷிதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்த செயலை நினைத்து நினைத்து சுமார் 20 இலட்சம் முஸ்லிம்களும் அவர்களின் வழிகாட்டல் இயக்கமான ஜம்இய்யதுல் உலமாவும் பெரும் கவலை கொண்டிருப்பதாகவும் கூறினார்.

எமது சமூகம் பகிரங்கமாக இந்த செயலை கண்டித்திருக்கின்றது. சம்பவத்தின் சூத்திரதாரியான ஸஹ்ரான் என்பவரினதும் புகைப்படத்தையும் ஆவணங்களையும் பாதுகாப்பு தரப்பினரிடம் சமர்ப்பித்தும் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்காதது குறித்து இன்றும் ஜம்இய்யதுல் உலமாவும், முஸ்லிம் சமூகமும் வேதனையுடன் இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து கேள்வி கேட்கின்றனர் என்று தெரிவித்த அமைச்சர், நாட்டில் மீண்டும் இவ்வாறான அனர்த்தம் ஏற்படக்கூடாது என்பதில் முஸ்லிம் சமூகம் மிக விழிப்பாக இருக்கின்றது.

இந்த சபையிலே முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, குமார வெல்கம ஆகியோர் இருக்கின்றனர். கைத்தொழில் வர்த்தக அமைச்சராக தற்போது நான் இருக்கின்றேன். வர்த்தகத் துறை சார்ந்த அமைச்சராக இருக்கின்றவர்களை வர்த்தகர்கள் தமது பிரச்சினைகள் பற்றி கூற வந்து சந்திப்பது வழமை. அவ்வாறான சந்திப்பொன்றில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

Share:

Author: theneeweb