இலங்கை தாக்குதல் தொடர்பில் ரொயிட்டர்ஸ் செய்திச் சேவை வௌியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள்!

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு 2 மணித்தியாலத்துக்கு முன்னதாகவும், இந்திய புலனாய்வுப் பிரிவினர் இலங்கை அதிகாரிகளுக்கு அதுதொடர்பான விபரங்களை வழங்கியதாக ரொயிட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த தாக்குதல் குறித்து ஏப்ரல் மாதம் 4ம் திகதியும், 21ம் திகதியும் இந்திய புலனாய்வுப் பிரிவு தகவல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் கைதான ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்க உறுப்பினர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய, இந்த எச்சரிக்கை இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இலங்கையில் பல இடங்களில் பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வழங்கியுள்ளதாகவும் ரொயிட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், சஹரான் ஹசீம் என்பவரின் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பினால் 3 கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட எட்டு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் இடம்பெற்ற 2 தினங்களின் பின்னர் தாக்குதலுக்கான பொறுப்பை ஐ.எஸ் .தீவிரவாதிகள் ஏற்றுக் கொண்டனர்.

வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்படி, தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கம், ஐ.எஸ். தீவிரவாதிகளின் அனுசரணையைப் பெற்று இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இயங்குகின்ற இயக்கமாகும்.

இந்த தாக்குதலை வெற்றிகரமாக முன்னெடுப்பதாக, ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைவர் அபூபக்கர் அல் பகாடியின் பெயரில், தாக்குதலுக்கு முன்னர் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும் காணொளி காட்சியும் வெளியாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள், வெல்லம்பிட்டியவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ளதாக டெயிலி மெயில் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையானது, தற்கொலை குண்டுதாரியான இன்ஃபாஸ் அஹமட் என்பவருக்கு சொந்தமானது.

இந்த தொழிற்சாலை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, அதில் பணியாற்றிய 9 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டியில் பிறந்த இன்சாப் கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுள்ளார்.

அவரது குடும்பத்தின் மற்றுமொரு சகோதரரான இல்ஹாம் என்பவரையும் உடன்சேர்ந்த அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

டெயிலி மெயில் தகவல்படி, கொழும்பு கிங்ஸ்பெரி மற்றும் சினமன் க்ராண்ட் ஆகிய விருந்தகங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களை, இன்சாப் மற்றும் இலஹாம் ஆகியோரே நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தாம் சம்பியாவிற்கு வர்த்தக செயற்பாடுகள் நிமித்தம் பயணிப்பதாக அவர் தமது குடும்பத்தாரிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை நடத்திய இன்சாப் அஹமட்டிற்கு சகோதரர்கள் 9 பேர் இருப்பதுடன், அவரது தந்தை இலங்கையில் இறக்குமதி வர்த்தகராவார்.

Share:

Author: theneeweb