தகவல் இருந்தும் ஏன் தடுக்க முடியவில்லை?

கடந்த 21 ஆம் திகதி, உலகெங்கும் கிறிஸ்தவர்கள், இயேசு நாதரின் உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, தேவாலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் போது, கொழும்பிலும் நீர்கொழும்பிலும் மட்டக்களப்பிலும் உள்ள மூன்று பிரதான தேவாலயங்களிலும் கொழும்பில் மூன்று ஹோட்டல்களிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள், இந்நாட்டு முஸ்லிம்களை, குறிப்பாக உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களைப் பொதுவாகவும் தலைகுனிய வைத்துவிட்டன.

இந்தத் தாக்குதல்களில் இதுவரை மொத்தம் 320க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்; 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதாகவே கூறப்படுகிறது. எனவே, உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

காயமடைந்தவர்களில் பலர் உயிர் தப்பினாலும், அவர்களில் அநேகர் ஊனமுற்றவர்களாகவே வாழ்க்கையின் மிகுதிக் காலத்தைக் கழிக்க வேண்டியிருக்கும்.

இது மிக மோசமான, கொடூரச் செயல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அன்று, தமது குடும்ப சமேதரர்களாகத் தேவாலயங்களில் குழுமியிருந்தவர்கள், இந்தக் கொடுமையை இழைத்தவர்களுக்கு, எவ்வித குற்றத்தையும் இழைக்காத அப்பாவிகள்; அவர்களை இவ்வாறு, துடிதுடிக்கப் படுகொலை செய்வதால் எந்தவோர் இயக்கமோ, எந்தவொரு தனி நபரோ அடையக் கூடிய நன்மையையோ இலாபத்தையோ நினைத்துப் பார்க்க முடியாது. அவ்வாறானதொரு நன்மை இருக்க முடியாது.

இத்தாக்குதல்களை நடத்தியோர், தற்கொலைக் குண்டுதாரிகள் மூலமாகவே அவற்றை நடத்தியுள்ளனர் என, அரச பகுப்பாய்வாளர் கூறியுள்ளார். அதேவேளை, மத்திய கிழக்கில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்பான ஐ.ஏஸ் அமைப்பே, இதன் பின்னால் இயங்கியுள்ளதாக, அமெரிக்க உளவுத்துறையினர் தெரிவித்ததாக நேற்றுக் காலை (23) சி.என்.என் செய்திச் சேவையில் கூறப்பட்டது.

அதேவேளை, தாக்குதல் நடத்தியவர்களாகத் தற்போது அடையாளம் கண்டுள்ளவர்களும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களும் உள்நாட்டு முஸ்லிம்களாவர்.

ஆனால், இலங்கை முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையானோர் இந்தக் கொடூரத்தை அங்கிகரிக்கவோ, நியாயப்படுத்தவோ இல்லை. இலங்கை முஸ்லிம்கள், மிக உயர்வாக மதிக்கும் முஸ்லிம் சமய அறிஞர்கள் சபையான ‘ஜம்இய்யத்துல் உலமாச் சபை’ இத் தாக்குதல்களைக் கண்டித்துள்ளதோடு, அதன் தலைவர் ரிஸ்வி முப்தி, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிலருடன் சென்று, பேராயர் கார்தினல் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகையைச் சந்தித்து, இலங்கை முஸ்லிம்களின் சார்பில், அவருக்குத் தமது அனுதாபத்தையும் ஒத்துழைப்பையும் தெரிவித்திருந்தார்.

இந்தப் படுகொலைகளின் நோக்கத்தை எவராலும் யூகிக்க முடியாமல் இருக்கிறது. தமிழீழ விடுதலை புலிகளும் இது போன்று சாதாரண மக்கள் குழுமியிருந்த இடங்களில் தாக்குதல்களை நடத்தினார்கள். அவையும் பயங்கரவாதச் செயல்களாக இருந்த போதிலும், பாதுகாப்புப் படைகளின் கவனத்தைத் திசை திருப்பவும் அதன் மூலம் தமது இலக்குகளை விட்டு அவர்களை நீக்குவதுமே புலிகளின் நோக்கமாக இருந்தது.

ஐ.ஏஸ்ஸுக்கும் ஓர் இலக்கு இருந்தது. அவர்கள் மத்திய கிழக்கில், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் தமது ஆட்சியை நிறுவத் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், இலங்கையில் இந்தத் தாக்குதல்களை நடத்திய இலங்கையர்களினதும் அவர்களை வழிநடத்தியதாகக் கூறப்படும் வெளிநாட்டவர்களினதும் நோக்கத்தை எவ்வகையிலும் யூகித்துக் கொள்ள முடியாது.

நோக்கம் எதுவாக இருந்தாலும், இந்தப் படுகொலைகளால் நாட்டில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் மனக் கசப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியாது. இரு சமூகங்களுக்கிடையே பரஸ்பரம் சந்தேகம் ஏற்படுவதையும் அதிகரிப்பதையும் தடுக்க முடியாது.

அதேவேளை இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள், தமது சமயமான இஸ்லாத்துக்கும் பாரிய சேதத்தையே செய்துள்ளனர் என்றே கருத வேண்டியுள்ளது. ஏற்கெனவே பிற சமயத்தவர்கள் இந்தச் சம்பவங்களால் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் மேலும் மோசமாகச் சிந்திக்க முற்பட்டுள்ளனர்.

தற்போது சகலரும் உண்மையை அறிவதற்குப் பதிலாக, தத்தமது அரசியல் கண்ணோட்டங்களை நியாயப்படுத்தவே இச்சம்பவங்களைப் பாவிக்கின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு விடயங்களில் பிரதமரைப் புறக்கணித்தமையே இதற்குக் காரணம் என்கின்றனர்.

அவசரகாலச் சட்டம் இல்லாமையே நடவடிக்கை எடுக்க முடியாமல் போனமைக்குக் காரணம் என, ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

மஹிந்த அணியினர், இந்த அரசாங்கத்தின் கீழ், புலனாய்வுத்துறை சீர்குலைந்துள்ளதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர்.

ஆனால், உண்மையிலேயே புலனாய்வுத்துறையின் பலவீனம், இந்தச் சம்பவங்களால் தெரியவில்லை. புலனாய்வுத்துறை இந்த விடயத்தில் தமது கடமையைச் செய்துள்ளது.

கடந்த ஒன்பதாம் திகதிக்கு முன்னதாகவே அவர்கள், தாக்குதல் நடத்தப்படவிருப்பதை, தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியின் பெயருடன் பொலிஸ் மா அதிபருக்குத் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவல் பொலிஸ் உயர் மட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டும் உள்ளது. அதன்படி, சில அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தினரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சூத்திரதாரியின் விவரங்களுடன், நடக்கவிருக்கும் அனர்த்தம் பற்றிய தகவல் கிடைத்தும், அச்சூத்திரதாரியைக் கைது செய்து, இந்த அனர்த்தத்தைத் தடுக்க முடியாமல் போனதை எவ்வாறு விளங்கிக் கொள்வது?

அவசர காலச் சட்டம் தான் வேண்டும் என்றால், அதனை பிறப்பித்தாவது சந்தேக நபர்களை முன்னதாகவே கைது செய்திருக்கலாம். அவ்வாறு செய்து, இந்த அனர்த்தம் தடுக்கப்பட்டு இருந்தால், எதுவும் நடக்காததால் எதிர்க்கட்சிகள் அவசர காலச் சட்டத்தைப் பிறப்பித்ததை விமர்சித்திருப்பார்கள்.

ஆனால், அந்த அரசியல் நட்டத்தை அடைந்தாவது அரசாங்கம் இந்த அனர்த்தத்தைத் தடுத்திருக்கலாம். அதேவேளை, இலங்கைப் பொலிஸார் சட்டப்படியே தான் ஆட்களை கைது செய்கிறார்களா?

சில அமைச்சர்களுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை அறிவித்தல் கிடைத்துள்ளது. ஆனால், பிரதமருக்கு எதுவுமே தெரியாதாம். ஆச்சரியம்!

பொலிஸ் திணைக்களத்துக்குப் பொறுப்பான ஜனதிபதியும் தனிப்பட்ட வெளிநாட்டு விஜயம் ஒன்றை மேற்கொண்டு, சிங்கப்பூர் சென்றிருந்தார். பொலிஸ் மாஅதிபர், தம்மிடம் உள்ள தகவல்களை, ஜனாதிபதிக்காவது அறிவிக்கவில்லையா? அரசாங்கத்தில், உயர் மட்டத்தில் அராஜகம் நிலவுவதையே இது காட்டுகிறது.

தமிழ்த் தலைவர்களுக்கு மாகாண சபைத் தேர்தல்கள் தேவையில்லையா?

கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நாட்டில் பல இடங்களில், குண்டு வெடிப்புகள் இடம்பெறும் வரை, ஜனாதிபதித் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்கள் என்ற சுற்று வட்டத்துக்குள்ளேயே நாட்டின் அரசியல் தேங்கிக் கிடந்தது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவே, அதிகாரப் பரவலாக்கல் என்ற கோட்பாடும் அதன் கீழ் மாகாண சபைகளும் 1987ஆம் ஆண்டு, இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பின்னர், முஸ்லிம் தலைவர்களும் அதிகாரப் பரவலாக்கல் முறையைப் பற்றி அக்கறை செலுத்தி வந்தனர்.

ஆனால், அன்று மாகாண சபை முறையை எதிர்த்த சிங்களத் தலைவர்களுக்கு, மாகாண சபைகள் மீது இருக்கும் அக்கறையாவது, இப்போது தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம், 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமே முடிவடைந்து விட்டது. ஆனால் அதன் பின்னர், 18 மாதங்கள் உருண்டோடிவிட்ட போதிலும் அம்மாகாண சபைக்கான தேர்தல் இன்னமும் நடைபெறவில்லை.

வடமாகாண சபையின் பதவிக் காலம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முடிவடைந்தது. சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஆறு மாதங்களாக அதற்கும் தேர்தலை நடத்த முடியாமல் இருக்கிறது.

தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது, அந்த இரு மாகாண சபைகளுக்கு மட்டுமல்ல. இவற்றோடு 2017ஆம் ஆண்டு செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் பதவிக் காலம் முடிவடைந்த வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கும் கடந்த வருடம் பதவிக் காலம் முடிவடைந்த மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைகளுக்கும் இம் மாதம் பதவிக் காலம் முடிவடைந்த தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்குமாக மொத்தம் எட்டு மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

கலைக்கப்படாமல் அல்லது பதவிக் காலம் முடிவடையாமல் இருப்பது ஊவா மாகாண சபை மட்டுமே. அதன் பதவிக் காலமும் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் முடிவடைய இருக்கிறது.

தேர்தல் நடைபெறவிருக்கும் மாகாண சபைகளின் தேர்தலை நடத்துமாறு, சிங்களத் தலைமையுள்ள சில எதிர்க்கட்சிகள் மட்டுமே வற்புறுத்தி வருகின்றனவேயல்லாது, அதிகாரப்பரவலாக்கலுக்காகப் போராடுவதாகக் கூறிக் கொள்ளும் தமிழ்க் கட்சிகள், அதைப் பற்றி வாய் திறப்பதே இல்லை.

மாகாண சபை முறையைப் பற்றி, தமிழ் அரசியல்வாதிகள் திருப்தியடையாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் ஏற்கெனவே இருப்பதைப் பாதுகாத்துக் கொண்டு தான், கூடுதலான அதிகாரங்களையோ அல்லது முறையான அதிகாரப் பரவலாக்கல் முறையொன்றையோ கேட்டுப் போராட வேண்டும்.   பரவலாக்கப்பட்ட அதிகாரங்களையாவது பாவிக்க அக்கறையில்லாமல், மேலதிகமாக அதிகாரங்களைக் கேட்பதில் அர்த்தமில்லை.

அண்மையில், கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இக்கருத்தைத் தெரிவித்து இருந்தார். மாகாண சபைகள், பிரதேச சபைகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பாவிக்காது, மேலதிக அதிகாரங்களைக் கோரிப் போராடுவதாக அவர் அங்கு கூறியிருந்தார்.

மாகாண சபைத் தேர்தல்களைத் தொடர்ந்து ஒத்திப் போட, ஐக்கிய தேசியக் கட்சிக்கே கூடுதலான தேவை இருப்பதாக, இப்போது தெளிவாகத் தெரிகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் அதேபோல், அவற்றை ஒத்திப் போடும் அவசியம் இருப்பதாகத் தெரிகிறது.  எனினும் அத்தேர்தல்கள் நடைபெறாதிருக்கும் வகையில், சட்டச் சிக்கல்களை உருவாக்கிக் கொண்டு இருப்பது, ஐ.தே.கவே ஆகும்.

2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்கான சட்டத் திருத்தம் ஒன்றை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், சில மாகாண சபைகளின் தேர்தல்கள் ஒத்திப் போடப்படும் சாத்தியம் இருப்பதால், அச்சட்டத் திருத்தம் அரசமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதையடுத்து அரசாங்கம், அச்சட்டத் திருத்தத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, மாகாண சபைகளில் மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பான மற்றொரு சட்டத் திருத்தத்தைச் சமர்ப்பித்தது. அச்சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் போது, அதன் குழுநிலையில் அரசாங்கம் அச்சட்டத் திருத்தத்துக்கு ஒரு திருத்தத்தை முன்வைத்தது. கலப்புத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கான அத்திருத்தம் விவாதத்தின் குழு நிலையின் போது சமர்ப்பிக்கப்பட்டதால், அது உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பத் தேவைப்படவில்லை.

ஆனால், அதன் மூலம் மாகாண சபை, பிரதேச சபைகளின் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டியிருந்ததால், மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திப் போடப்பட்டு, இன்று வரை நடைபெறாது இருக்கின்றன.

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப் போடுவது சட்ட விரோதம் என, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கையில், அரசாங்கம் அதனை இவ்வாறு, வேறு விதமாகச் செய்து கொண்டது. அதன் பின்னர், எல்லை நிர்ணயப் பணிக்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, தமது அறிக்கையைக் கடந்த ஓகஸ்ட் மாதம் அமைச்சரிடம் சமர்ப்பித்து, அவர் அதனை நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்துக்கு அனுப்பினார்.

நாடாளுமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்தமையால், அது திருத்தத்துக்காகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவொன்றிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அக் குழு, அதனை இரண்டு மாதங்களில், அதாவது கடந்த ஒக்டோபர் மாதத்தில், தமது பரிந்துரைகளுடன் ஜனாதிபதியிடம் கையளித்திருக்க வேண்டும். ஆனால் அக் குழு, அதனை இன்னமும் ஜனாதிபதியிடம் கையளிக்கவில்லை.
எனவே, ஐ.தே.கவே மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவிடாது தடுத்துக் கொண்டு இருக்கிறது என்பது, மிகத் தெளிவான விடயமாகும். தமிழ்த் தலைவர்களுக்கு இது மிகவும் நன்றாகத் தெரியும். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனோ அதன் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனோ அதைப் பற்றி வாய்ப் பேசாதிருக்கிறார்கள்.

குறைந்த பட்சம் அவர்கள், யார் மாகாண சபைத் தேர்தல்களைத் தடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதனை, நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி இருக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யத் தயார் இல்லைப் போல் தான் தெரிகிறது.

Tamilmirror

Share:

Author: theneeweb