அப்பாவி மக்கள் மீதான கொலைவெறி

   கருணாகரன்

நாட்டை உலுக்கியுள்ளன ஈஸ்டர் படுகொலைகள். யாருமே எதிர்பாராத கொடூரத் தாக்குதல்கள். யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத உயிர்ப்பலிகள். நாடு ஒரே நாளில் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு என எல்லாவற்றிலும் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையிலேயே எல்லோரும் உறைந்து போயிருக்கின்றனர். அரசும்தான். இந்தத் தாக்குதலினால் உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள் நிறைவடையும் இந்த அமைதி நாட்களில், அந்த அமைதியைக் குலைக்கும் விதமாக  மீண்டும் ஒரு யுத்தமா? என்பதே இன்று மக்களின் மனதில் எழுந்துள்ள கேள்வி.

ஒரு நாள் தாக்குதலில் 340 பேர் பலியென்றால், இன்னும் குண்டுகள் மீட்கப்படுகின்றன என்றால், இன்னும் தாக்குதலாளிகள் தலைமறைவாக இருக்கிறார்கள் என்றால், இன்னும் தாக்குதலை நியாயப்படுத்திக் காணொளிகள் வெளியாகின்றன என்றால்… இது ஒரு யுத்தமன்றி வேறென்ன?

நடந்திருப்பது சந்தேகத்துக்கே இடமில்லாத பயங்கரவாதச் செயல். பேரழிவை உண்டாக்கும் தற்கொலைத் தாக்குதல்கள். ஆனால், இதைச் செய்தவர்களுக்கு இது புனிதச் செயல். இந்த மாதிரியான நோக்கத்தோடு தாக்குதலில் ஈடுபடுவோரின் நம்பிக்கையும் புரிதலும் அரசியலும் இதைப் புனிதம். காலக்கடமை என்றே எண்ண வைக்கிறது. இந்தப் புரிதலுடன்தான் அவர்கள் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை தமது இலக்கு ஒன்றே குறி. சனங்களைப் பற்றிய எண்ணங்களோ கவலைகளோ இல்லை. இதனால்தான் நினைத்தபடியெல்லாம் தாக்குதலைச் செய்கின்றனர். யாரையும் எதற்காகவும் பொருட்படுத்துவதே இல்லை. இந்தத் தாக்குதலைச் செய்தவர்களும் ஏறக்குறைய இந்தப் பின்னணியைக் கொண்டவர்களாகவே தெரிகிறது.

ஆனால், இந்தத் தாக்குதல்களைச் செய்தவர்கள் எதன் பொருட்டும் தம்மையும் தமது நோக்கத்தையும் நியாயப்படுத்த முடியாது. அவர்களுக்கு ஆதரவாகவும் யாரும் குரலுயர்த்த முடியாது.

ஏனென்றால் தாக்குதலின் இலக்கு முற்று முழுதாகப் பொதுமக்களே. எவருமே ஆயுதம் ஏந்தாதவர்கள். தேவாலயங்களில் மனமுருகி, உயிர்த்த ஞாயிறுப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள். ஈஸ்டர் விடுமுறையைக் கழிப்பதற்காகவும் வேறு தங்கள் சொந்தக் காரணங்களின் நிமித்தமாகவும் விடுதிகளில் தங்கியிருந்தவர்கள்.

இப்படியான நிராயுதபாணிகளை இலக்கு வைப்பது இலகு. ஆனால் மனித நேயத்தோடு ஆழமாகச் சிந்திப்போருக்கு இது கடினம். இந்தத் தாக்குதலாளிகள், அரசாங்கத்தைப் பணிய வைப்பதற்கு இந்தத் தாக்குதல்களை நடத்தியிருந்தால் அந்த நோக்கம் தோல்வியானதாகவே அமையும்.

இந்தத் தாக்குதலின் மூலம் தாக்குதலை நடத்தியவர்களையே அனைவரும் வெறுக்கின்றனர். பதிலாக எல்லோரும் அரசாங்கத்தின் பக்கமாகவே நெருங்குகின்றனர். அதாவது தமக்கான பாதுகாப்பினை அரசாங்கமே வழங்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். தாக்குதலாளிகளை அவர்கள் மாபெரும் அழிவுச் சக்தி என்றே புரிந்து கொள்கின்றனர்.

தாம் தெரிவு செய்த அரசாங்கமே தமக்கான பாதுகாப்பினை வழங்கும். அதுவே வழங்க வேண்டும். தமக்குத் தெரியாத, தம்மை அச்சுறுத்தும் தரப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. தாம் அங்கீகரிக்காதவர்களுக்குப் பின்னே செல்ல முடியாது என்பதே மக்களுடைய நிலைப்பாடாக இருக்கிறது.

இதனால்தான் எல்லோருமே தாக்குதலாளிகளை வெறுக்கின்றனர். அவர்கள் தமது தரப்பிலிருந்து எத்தகைய நியாயங்களைச் சொல்ல முற்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கோ கேட்பதற்கோ யாருமே தயாரில்லை.

இதேவேளை தாக்குதலை நடத்தியோரின் அரசியலும் அதற்கான உளவியல் காரணங்களும் என்ன என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஒன்று தெரியும், அவர்கள் தங்களை இந்த உலகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என்று.

மேலும் இந்த மாதிரியான தாக்குதல்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்போரின் உளவியல் மிக மோசனமாது. அவர்கள் எப்போதுமே  தாழ்வுணர்ச்சிக்குட்பட்டிருக்கிறார்கள்.

தாக்குதல்களுக்குப்பிறகான தேடுதல் நடவடிக்கைகள், தடயத்திரட்டுகளின்படி இவர்கள் தேசிய தௌஹீத் ஜமா அத் எனும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. தேசிய தௌஹீத் ஜமா அத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றிய தகவல்கள், அடையாளங்களைப் பார்க்கும்போது அவர்கள் ஏனைய சமூகங்களைப்பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் நிதானமாகச் சிந்திப்போராகத் தென்படவில்லை. அவர்களுடைய உரைகளும் எண்ணங்களும் மிகத் தீவிர நிலைப்பட்டுள்ளன.

இத்தகைய எண்ணத்தோடு இயங்குவோர் எப்பொழுதும் ஒற்றைப்படைத்தன்மையைக் கொண்டவர்கள். தாமே இந்த உலகம். தமக்கே இந்த உலகம் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள். ஆகவே எப்போதும் இவர்கள் ஒடுங்கிய சிந்தனையையும் ஒற்றை வழிமுறையையும் கொண்டவர்களாகவே இருப்பர். இத்தத் தாக்குதல்களையும் அவர்கள் அப்படித்தான் நடத்தியிருப்பதாகத் தெரிகிறது.

ஆனால் இந்தத்தாக்குதலை தாமே மேற்கொண்டதாக ஐ.எஸ் ஐ. எஸ் உரிமை கோரியிருக்கிறது. ஐ.எஸ்க்கும் தேசிய தௌஹீத் ஜமா அத்துக்குமிடையில் தொடர்புகள் உண்டா என்று தெரியவில்லை. இதைப்பற்றி காவல்துறை அல்லது இலங்கையின் புலனாய்வுத்துறையினரே உறுதிப்படுத்த வேண்டும்.

இதேவேளை என்னதான் காரணங்கள், நியாயங்கள் இருந்தாலும் அதைத் தேசிய தௌஹீத் ஜமா அத் இயக்கமோ ஐ.எஸ் ஐ.எஸ் தரப்போ நியாயமாக்கிப் பேச முடியாது. தமது நோக்கத்தையும் நியாயத்தையும் வெளியே சொல்ல முடியாது. இப்படிப் பொதுமக்களை அவர்கள் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் எதிர்பார்த்திராத இடத்தில் கொல்வதற்கு எவருடைய ஆதரவும் அங்கீகாரமும் கிடையாது.

தாக்குதல் நடந்ததைப்பற்றியும் நடத்தியவர்களைப் பற்றியும் அரசின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகளில் உள்ள குறைபாடுகளைப் பற்றியும் ஏராளமான வாதப்பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தாக்குதல்களின் கனபரிமாணம் அதிகம் என்பதால் விமர்சனங்களும் கண்டனங்களும உச்சமாகவே இருக்கும்.

இதற்கு ஏராளம் காரணங்களும் விளக்கங்களுமிருக்கலாம். ஆனால் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகப் பலியிடப்படுவது என்பதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு அரசாங்கமே கடப்பாடுடையது.

தாக்குதலோடு சம்மந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்வது ஒரு புறம் நிகழலாம். அவர்களுக்கான தண்டனைகளைக் கூட உற்சாகமாக வழங்கலாம். ஆனால், இதெல்லாம் பறிக்கப்பட்ட உயிர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஈடாகாது.

முள்ளிவாய்க்கால் பேரவலமும் ஏறக்குறைய இவ்வாறானதுதானே. இழக்கப்பட்ட உயிர்களுக்கு எதுவும் ஈடாகாது.

இந்தத் தாக்குதல்களைப் பற்றிய முன்னெச்சரிக்கையை தாம் ஏற்கனவே விடுத்ததாக இந்திய அரசு தெரிவித்திருக்கிறது. இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரும் தமது முன்னச்சரிக்கையைப்பற்றி சொல்லியுள்ளனர். அப்படியென்றால் இது ஏன் கண்டு கொள்ளப்படவில்லை என்பது அனைவருடைய கேள்வியாகும்.

இப்பொழுது – தாக்குதலுக்குப் பிறகு – தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் அதற்குப் பின்னணியாக இருந்த சக்திகளையும் தேடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதற்காக இரவு ஊரடங்கும் அவசரநிலைப் பிரகடனமும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும்போது மீண்டும் ஒரு யுத்தகாலம் உருவாகியுள்ளதோ என்ற எண்ணமே ஏற்படுகிறது. அந்தளவுக்கு எங்கும் படையினரும் காவல்துறையினருமே நிறைந்து போயுள்ளனர். மறுபடியும் வீதிச் சோதனைகளும் தடைகளும் ரோந்துகளும் ஆரம்பமாகியுள்ளன. இது இயல்புநிலையை முற்றாகவே பாதித்திருக்கிறது. இவ்வாறு மக்களைப் பாதிக்கும் வகையில் தாக்குதலை நடத்தியவர்கள் மக்களுக்கு நெருக்கமானவர்களாக இருக்க முடியுமா?

இப்பொழுது படையினர் கோயில்கள், மசூதிகள், விகாரைகள், தேவாலயங்கள், பாடசாலைகள், கடைத்தொகுதிகள், பேருந்து நிலையங்கள், ரெயில்வே ஸ்ரேசன்கள், சந்திகள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் நிரம்பிப்போயிருக்கிறார்கள். இப்படி எவ்வளவு காலத்துக்கு படைகளால் நாடு நிரம்பிக்கிடக்க முடியும்? அப்படியென்றால் மறுபடியும் யுத்தச் சூழலொன்றுஉருவாகி விட்டதா?

இந்தப் பதிவை எழுதுவதற்குச் சற்று முன்னர் இதனுடைய பத்தியாளர், கிளிநொச்சியில், சதோச என்ற அரச வணிக வளாகத்துக்குச் சென்றபோது அங்கே பொலிசாரினால் சோதிக்கப்பட்டார். தங்களுடைய சோதனைக்கான காரணத்தைச் சொல்லி இதற்கு வருத்தமும் சொன்னார்கள் பொலிஸார்.

பொதுமக்களைச் சிரமப்படுத்துவதை எவரும் விரும்பவில்லை என்பது இதன் மூலம் நன்றாகத் தெரிகிறது. அதேவேளை இதை அவர்கள் பாதுகாப்பின் நிமித்தம் செய்யவேண்டியுமுள்ளது.

தாக்குதலை நடத்தியவர்களை ஓரளவுக்கு காவல்துறையினரும் படையினரும் அடையாளம் கண்டாலும் இதற்கான முற்றுப்புள்ளியை நெருங்கி விட்டதாக உணர முடியவில்லை. முழுமொத்தமாக எல்லோரையும் கைது செய்தாலும் பயங்கர அச்சத்திலிருந்து விடுபட நாட்கள் எடுக்கும்.

இதேவேளை நாட்டின் பெருவருவாயைத் தரும் உல்லாசப் பயணத்துறைக்குப் பெரும் பாதிப்பு உண்டாகியுள்ளது. ஒரே நாளில் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த அடுத்தடுத்த நாட்களிலேயே ஏராளமானவர்கள் நாட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்கள். இன்னும் எஞ்சியோர் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். புதிதாக வரவிருந்தோர் பயணத்தை ரத்துச் செய்திருக்கின்றனர். அல்லது அதை ஒத்திப் போட்டுள்ளனர்.

மக்களின் பாதுகாப்புத் தொடர்பாக இன்னும் அரசாங்கம் ஒரு புதிய பொது முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. அவசர கூட்டங்கள், ஆலோசனைகள் எல்லாம் நடக்கின்றன. பாதுகாப்புக்கட்டமைப்பிலோ கண்காணிப்பிலோ மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திருப்பதாகவும் செய்திகள் இல்லை. உண்மையில் இந்த நிலைவரத்தைக் கண்டு பொறுப்பானவர்கள் தங்கள் பதவிகளைத் துறந்திருக்க வேண்டும். மக்களைப் பாதுகாக்கத் தவறிய பிறகு பதவி எதற்கு? அதிகாரம் எதற்கு?

பதிலாக ஆள் மாறி ஆளாக ஒவ்வொருவரும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். இது அரசியல் அநாகரிகம் மட்டுமல்ல, அநீதியான செயலாகும்.

முப்பது ஆண்டுகாலப் போர், அதற்கு முன் ஜே.வி.பியின் கிளர்ச்சி எனப் பல தருணங்களில் கசப்பான அனுபவங்களையும் துயரங்களையும் கண்ட மக்கள் இலங்கையர்கள். எல்லையற்ற இழப்புகளைச் சந்தித்தவர்கள். அதற்குள் கனன்று மீண்டவர்கள். ஆனால், யுத்தம் முடிந்த பிறகு அவர்கள் எதிர்பார்த்ததும் கண்ட கனவும் புதியதோர் உலகத்துக்கானது. அரசியல் தீர்வும் பகை மறப்பும் ஐக்கியமும் என அழகிய இலங்கைத்தீவின் பாதுகாப்பான எதிர்காலத்தைப் பற்றியது..

என்றாலும் இதற்கான பச்சை விளக்குகள் எங்குமே ஒளிரவில்லை. அதற்கிடையில் சிவப்பு லைற் எரியத் தொடங்கியுள்ளது.

இதற்குக் காரணம் அரசாங்கம் போருக்குப் பிந்திய சூழலில் முழுமனதோடு செயற்படுத்தியிருக்க வேண்டிய அரசியலமைப்புத் திருத்தம், பொறுப்புக் கூறல், நிலைமாறு காலகட்ட நீதிவழங்குதல் போன்றவற்றைச் செய்யவில்லை என்பதாகும்.

ஆகவே நாடு பயங்கர அழிவில் சிக்கியுள்ளது என்பது மட்டும் வெளிப்படையான உண்மை. இந்தப் பேரிடரிலிருந்து அதைக் காப்பாற்றுவது எப்படி?

ஏனெனில் இந்தத் தாக்குதலோடு முஸ்லிம் சமூகத்தின் நிலை மிக மிகச் சிக்கலடைந்துள்ளது. தாக்குதலாளிகள் இஸ்லாமிய அடிப்படை வாதிகள் என்பதற்காக முஸ்லிம்கள் அனைவரும் பொறுப்பாளிகள் இல்லை. ஆனாலும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினையை எப்படிக் கையாள்வது என்பது இப்பொழுது எழுந்துள்ள புதிய சிக்கலாகும். இதையெல்லாம் இனி வரும் நாட்கள் எப்படிக் கையாளப்போகின்றன என்பதே இன்றைய கேள்வியாகும்.

Share:

Author: theneeweb